top of page
Post: Blog2_Post
Writer's pictureKumarathasan Karthigesu

பிரதமரை நியமிக்கத் தவறிய மக்ரோன் மீது குற்றப் பிரேரணை?


அரசமைப்பின் 68 பிரிவால்

அவரை பதவி நீக்க முடியுமா?

நாடளாவிய போராட்டத்துக்கு

தீவிர இடதுசாரிகள் அழைப்பு



பாரிஸ், ஓகஸ்ட் 28


பிரான்ஸின் ஐந்தாவது குடியரசில் இதுவரை இடம்பெற்றிராத அரசியல் அரங்கக் காட்சிகளை நாட்டு மக்கள் வியப்புடன் காண்கின்ற சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது.


நாடாளுமன்றத் தேர்தலில் அதிக ஆசனங்களை வென்ற அணி ஆட்சி அமைக்க அனுமதிக்கப்படவில்லை. புதிய இடதுசாரி மக்கள் முன்னணி சார்பில் நிறுத்தப்பட்ட வேட்பாளரைப் பிரதமராக அறிவிப்பதற்கு அரசுத் தலைவர் மக்ரோன் மறுத்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தல் முடிந்து ஐம்பது நாட்கள் கடந்த பிறகும் இன்னமும் பிரதமர் ஒருவரை நிமிப்பதற்குத் தவறிக் காலத்தை இழுத்தடித்து வருகிறார். அதற்காக அவரைப் பதவி நீக்கும் நோக்குடன் குற்ற விசாரணைப் பிரேரணை (motion of impeachment) ஒன்றைக் கொண்டுவர இடதுசாரிகள் தரப்பில் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.


சமீபகாலத் தேர்தல் வரலாற்றில் இது போன்றதொரு சூழ்நிலை-நெருக்கடி- எதிர்நோக்கப்படுவது நாட்டுக்குப் புது அனுபவம் ஆகும்.

ஜனாதிபதி ஒருவர் தனது கடமையை நிறைவேற்றத் தவறும் பட்சத்தில் ("failure to fulfill his duties") அதனைக் காரணங்காட்டி அவரைப் பதவி நீக்குவதற்கான குற்றப் பிரேரணை ஒன்றை நாடாளுமன்றம் ஊடாகக் கொண்டுவருவதற்கு ஐந்தாவது குடியரசு அரசமைப்பின் 68 ஆவது பிரிவு(Article 68) இடமளிக்கிறது.


தேர்தலில் 190 ஆசனங்களை வென்று நாடாளுமன்றத்தில் பெரும் அரசியல் சக்தியாக வந்துள்ள புதிய மக்கள் முன்னணியின் பிரதமர் வேட்பாளரானலூசி கஸ்ரெற்ஸ் (Lucie Castets) அம்மையாரைப் புதிய பிரதமராக அறிவிப்பதற்கு மறுத்திருப்பதைக் காரணங்காட்டி மக்ரோனுக்கு எதிராக ஒரு குற்றப் பிரேரணையை முன்வைப்பதற்கான நடவடிக்கைகளைத் தொடக்கப் போவதாக இடது சாரி முன்னணியில் இடம்பெற்றுள்ள பெரிய கட்சியாகிய La France Insoumise (தீவிர இடதுசாரித் தலைவர் ஜோன் லூக் மெலன்சோனின் கட்சி) அறிவித்திருக்கிறது.


அதேசமயம், மக்ரோனின் தரப்பினரது இந்த "ஜனநாயக மறுப்புக்குக்"கடும் எதிர்ப்பையும் கண்டனத்தையும் வெளிப்படுத்திக் காடுவதற்காக எதிர்வரும் சனிக்கிழமை நாடெங்கும் வீதிகளில் இறங்கிப் போராடுமாறும் La France Insoumise கட்சி மக்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறது.


ஜனாதிபதிக்கு எதிராக நாடாளுமன்றத்தில் ஒரு குற்றப் பிரேரணையைத் தொடக்குவது இலகுவான வழிதான் என்றாலும் சபையில் அதனை அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர்த்திச் செல்வதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் மிக அவசியம் என்பதைச் சுட்டிக்காட்டுகின்றஅரசமைப்புத் துறை நிபுணர்கள் இடதுசாரி மக்கள் முன்னணியால் தனித்து அதில் வெற்றிகாண முடியாது என்பதைக் குறிப்பிடுகின்றனர்.


இதேவேளை -


சகலதையும் விட நாட்டு நலனை மிக உயர்வாகக் கருதுகின்ற உண்மையான அக்கறை கொண்ட சக்திகளுக்குக் கதவு எப்போதும் திறந்திருக்கும் என்று எலிஸே மாளிகையில் இடம்பெறுகின்ற பேச்சுக்களின் போது அதிபர் மக்ரோன் தெரிவித்திருக்கிறார். அதேசமயம் இடதுசாரிகளை ஒதுக்குகின்ற விதமான அவரது அரசியல் கொள்கை பல தரப்புகளில் இருந்தும் கண்டனத்துக்குள்ளாகியிருக்கிறது.


இடதுசாரி சக்திகளது பலம் தெரியாமல் - அவர்களைக் குறைத்து மதிப்பிட்டு- சரியான அரசியல் ஆலோசனையின்றிச் செயற்படுகிறார் மக்ரோன் என்று அவரை விமர்சிப்பவர்கள் குறை கூறிவருகின்றனர்.


 

தாஸ்நியூஸ் - பாரிஸ்

28-08-2024






0 comments

Comments


You can support my work

bottom of page