ராஜபக்சே பதவிவிலகலை
நினைவூட்டிய பங்களாதேஷ்...
முஜிபுர் ரஹ்மானின் சிலை
சுத்தியலால் தாக்கிச் சேதம்
அருங்காட்சியகம் தீக்கிரை
டாக்காவில்... 2024
கொழும்பில்.. 2022
பாரிஸ், ஓகஸ்ட் 5
பங்களாதேஷ் பிரதமர் ஷேய்க் ஹசீனா
பதவியைத் துறந்து நாட்டை விட்டு ஓடியிருப்பதும் அதன் பின்னராக தலைநகர் டாக்காவில் இடம்பெற்றுவரும் சம்பவங்களும் சிறிலங்காவில் 2022 ஆண்டு அதிபர் கோட்டாபய ராஜபக்சேவுக்கு நேர்ந்த நிலைமையுடனும் கொழும்பின் அன்றைய காட்சிகளுடனும் ஒப்பிட்டு நோக்கப்படுகின்றன.
2022 இல் கொழும்பில் ஆரம்பிக்கப்பட்ட "அரகலய" என்ற பெரும் மக்கள் போராட்டம் சிறிலங்காவைத் தங்கள் அதிகாரத்தின் கீழ் வைத்திருந்த ராஜபக்சே குடும்ப ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்திருந்தது. ஆயிரக்கணக்கானோர் கொழும்பை முற்றுகையிட்டதைத் தொடர்ந்து அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சே கொழும்பில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையைக் கைவிட்டு வெளியேறித் தப்பியோடிப் பல நாடுகளும் கதவடைத்த நிலையில் மாலை தீவு வழியாகச் சிங்கப்பூர் சென்று தஞ்சமடைந்திருந்தார். அவர் வெளியேறிய பிறகு அவரது மாளிகையைக் கைப்பற்றிய ஆர்ப்பாட்டக்காரர்கள் அவரது படுக்கை அறை முதல் சமயலறைவரை புகுந்து சூறையாடினர். மாளிகைக்குள் புகுந்தோர் அங்கு தங்கியிருந்து சமைத்துச் சாப்பிட்டுப் படுத்தெழும்பிய காட்சிகள் அச்சமயம் வைரலாகப் பரவி முழு உலகையும் அதிரவைத்திருந்தமை தெரிந்ததே.
படம் :1971 இல் பாகிஸ்தானிடமிருந்து பங்களாதேஷுக்குச் சுதந்திரம் வாங்கித் தந்த தேச பிதாவும் முதல் பிரதமருமாகிய ஷேய்க் முஜிபுர் ரஹ்மானின் சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளது. -
கொழும்பு ஜனாதிபதி மாளிகைக்குள் நிகழ்ந்த அதே சம்பவங்களின் காட்சிகள் இன்றைய தினம் பிரதமர் ஹசீனாவின் டாக்கா நகர மாளிகைக்குள்ளேயும் நடந்தேறியிருக்கின்றன. மாளிகைக்குள் ஆர்ப்பாட்டக்காரர்கள் அறை அறையாகச் சோதனையிட்டுப் பொருள்களைச் சூறையாடிச் செல்கின்ற காட்சிகள் சமூக வலை ஊடகங்கள் மூலமாக உலகெங்கும் பார்வையிடப்பட்டிருக்கின்றன. உள்ளே இருந்தவாறு மாணவர்கள் ஷெல்ஃபி எடுத்துக்கொண்டனர். விசாலமான அறைகளில் அகப்பட்டவற்றையும் கையில் எடுத்துக் கொண்டனர்.
படம் :டாக்கா பிரதமர் மாளிகைக்குள் மாணவர்கள்...
படம் : சுதந்திரத்தின் தந்தை முஜிபுர் ரஹ்மான் சிலையின் மீது ஏறிய ஆர்ப்பாட்டக்காரர்கள்...
பதவி விலகிய ஹசீனாவை ஏற்றி வந்த பங்களாதேஷ் விமானப்படையின் C130J போக்குவரத்து விமானம் புதுடில்லி அருகே உள்ள ஹின்டன் வான்படைத் தளத்தில்(Hindon Air Base) இன்று பிற்பகல் தரையிறங்கியுள்ளது. அவர் இந்தியாவில் தங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும் அவர் அதே விமானத்தில் அல்லது மற்றொரு விசேட விமானத்தில் அங்கிருந்து லண்டன் பயணிக்கக்கூடும் என டாக்கா செய்தி நிறுவனங்கள் சில தகவல் வெளியிட்டுள்ளன.
நெருங்கிய நட்பு நாடாக இருந்த போதிலும் பிரதமர் ஹசீனாவை
நாட்டுக்குள் ஏற்றுக்கொள்ளும் விடயத்தில் புதுடில்லி அரசு நிதானத்தைக் கடைப்பிடிக்கும் என்று இந்திய அரச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பங்களாதேஷ் மாணவர்கள் முன்னெடுத்துவந்த அரசு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு இந்திய மாணவர் அமைப்புகளும் ஆதரவு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
படம் :முஜிபுர் ரஹ்மான் ஞாபகார்த்த
அருங்காட்சியகம் தீயில் எரிவதைப் படம் எடுக்கின்ற மாணவர்கள்..
இதேவேளை - டாக்காவில் பிரதமர் மாளிகை அருகே அமைந்துள்ள முஜிபுர் ரஹ்மானின் பாரிய உருவச் சிலை மீது ஏறியோர் அதனைச் சுத்தியல் கொண்டு சேதப்படுத்திய காட்சிகள் வெளிவந்துள்ளன. பங்களாதேஷின் பிரிவினைக்காகப் போரிட்ட ரஹ்மான்
தேச பிதாவாக மதிக்கப்பட்டுவருபவர்
1975 இல் பதவியில் இருந்த சமயம் படுகொலை செய்யப்பட்டிருந்தார். அவர் உருவாக்கிய அவாமிலீக் கட்சியின் வழி வந்த பிரதமராகவே அவரது மகளான ஷேய்க் ஹசீனா
இதுவரை பதவியில் இருந்து வந்தார். டாக்காவில் உள்ள அவாமிலீக் கட்சியின் தலைமை அலுவலகமும்
ஷேய்க் முஜிபுர் ரஹ்மான் ஞாபகார்த்த
அருங்காட்சியகமும் இன்று ஆர்ப்பாட்டக்காரர்களால் முற்றாக எரித்து அழிக்கப்பட்டுள்ளன.
🔴முன்னர் வந்த செய்தி :https://www.thasnews.com/post/ம-ள-க-ம-ற-ற-க-ஹ-ல-ய-ல-தப-ப-ச-ச-ன-ற-ர-ப-ரதமர-ஷ-ய-க-ஹச-ன-இந-த-ய-வ-ல-தஞ-சம
🔵2022 இல் கொழும்பு ஜனாதிபதி மாளிகைக்குள் நடந்த சம்பவங்களின் செய்தி இணைப்புகள்.. https://www.thasnews.com/post/இத-ப-ல-ஓர-இடத-த-வ-ழ-வ-ல-ந-ன-கண-டத-ல-ல
தாஸ்நியூஸ் - பாரிஸ்
05-08-2024
Bình luận