top of page
Post: Blog2_Post
Writer's pictureKumarathasan Karthigesu

பிரபல பிரிட்டிஷ் தொழிலதிபரும் மகளும் படகு விபத்தில் மாயம்!

சிசிலித் தீவுக்கு அருகே

சுழல்ப் புயல் தாக்கியது

காணாமற்போனோரில்

இலங்கையரும் அடக்கம்


பாரிஸ், ஓகஸ்ட் 20


இங்கிலாந்தின் பில் கேற்ஸ் எனக் குறிப்பிடப்படும் பிரபல ரெக் தொழிலதிபர் மைக் லிஞ்ச் (Mike Lynch) மற்றும் அவரது 18 வயது மகள்

ஹன்னா லிஞ்ச்(Hannah Lynch) உட்படப் பலர் படகு விபத்தொன்றில் காணாமற்போயிருக்கின்றனர். அவர்களில் சிறிலங்காப் பிரஜை ஒருவரும் அடங்கியுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.


அவர்கள் பயணம் செய்த சொகுசுப் படகு இத்தாலியின் சிசிலித் தீவுக்கு அருகே மோசமான காலநிலையினால் கடலில் மூழ்கியுள்ளது. சுழல்ப் புயலை அடுத்து எழுந்த கடலலைகளால் படகு அடித்துச் செல்லப்பட்டுக் காணாமற் போயுள்ளது என்று கூறப்படுகிறது.


56 மீற்றர்கள் நீளமான "பேய்சியன்" (Bayesian) என்ற அந்த சொகுசுப் படகு

பத்து மாலுமிகள் உட்பட 22 பேர் பயணித்திருந்தனர். அவர்களில்

ஒரு வயதுக் குழந்தை உட்படப் 15 பேர் மீட்கப்பட்டிருக்கின்றனர். தொழிலதிபர் மைக்கின் துணைவியான அஞ்செலாவும் (Angela Bacares) அவர்களில் அடங்குவார். இந்த அனர்த்தத்தில் ஒருவர் உயிரிழந்தமை இதுவரை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. . தொழிலதிபர் மைக் உட்பட ஆறு பேர் காணாமற்போயுள்ளனர். அவர்களைத் தேடும் பணிகள் முழு வீச்சில் இடம்பெற்றுவருகின்றன.

காணாமற்போனவர்கள் நீருக்கு அடியில ஐம்பது மீற்றர்கள் ஆழத்தில் காணப்படும் சொகுசுப் படகின் உள்ளே

சிக்குண்டிருக்கலாம் என நம்பப்படுவதாக இத்தாலியின் கரையோரக் காவல் படை அதிகாரிகள் கூறியிருக்கின்றனர்.

59 வயதான மைக் லிஞ்ச் பிரிட்டனின் பிரபல மென்பொருள் தொழில் நுட்பக் கம்பனியாகிய ஓட்டோனொமி (Autonomy) நிறுவனத்தின் நிறுவுநர்களில் ஒருவர்.

அதனைப் பெரும் செல்வந்த நிறுவனமாக மாற்றிய அவர் 2011 இல் அமெரிக்காவின் பிரபல கணனி ஜாம்பவானாகிய Hewlett-Packard (HP) நிறுவனத்துக்கு 11 பில்லியன் டொலர்களுக்கு விற்பனை செய்து பெரும் செல்வத்தை ஈட்டியிருந்தார்.

ஆயினும் இந்த வர்த்தகத்தில் 11 பில்லியன் டொலர்கள் மோசடி இடம்பெற்றிருப்பதாக மைக் மீது அமெரிக்காவின் சன் பிரான்ஸிஸ்கோ நீதிமன்றம் ஒன்றில் குற்றங்கள் சுமத்தப்பட்டிருந்தன. இருபது ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கக்கூடிய 17 குற்றங்கள் மைக் மீது சுமத்தப்பட்டுள்ளன. அவற்றை அவர் நிராகரித்துள்ளார். பெரும் சட்ட நடவடிக்கைக்கு முகம்கொடுத்துவந்த நிலையிலேயே அவருக்கு இந்தக் கதி நேர்ந்திருக்கிறது.


கேம்பிரிட்ஜ் ஓட்டோனொமி நிறுவனத்தை ஆரம்பிப்பதற்கு

முன்னர் 1991 இல் மைக் தனது முயற்சியினால் Cambridge Neuro dynamics என்ற பிரிட்டிஷ் தொழில்நுட்ப நிபுணத்துவக் கம்பனியை உருவாக்கியிருந்தார். கைரேகை அடையாளங்களை அறிதல் மற்றும் கணனி அடிப்படையிலான கண்டறிதல்களில் நிபுணத்துவம் மிக்க நிறுவனமாக அது விளங்கியது.


மைக் சில காலம் பிபிசி குழுமத்தில் அதிகாரமளிக்கப்படாத பணிப்பாளர்களில் ஒருவராகவும் பதவி வகித்திருந்தார். அத்துடன் பிரிட்டிஷ் அரசின் அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்துக்கான கவுன்சிலுக்குப் பொறுப்பாகவும் நியமிக்கப்பட்டிருந்தார். செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சியின் அபாயங்கள் மற்றும் பயன்பாடுகள் தொடர்பாக அப்போதைய பிரதமர் டேவிற் கமரோனுக்கு ஆலோசனை வழங்கிவந்தார்.


படகு அனர்த்தத்தில் காணாமற்போனவர்களில் அமெரிக்கா, கனடா, அயர்லாந்து மற்றும் சிறிலங்காவைச் சேர்ந்தவர்களும் அடங்கியுள்ளனர் எனத் தகவல் வெளியாகியிருக்கிறது. எனினும் அவர்களது விவரங்கள் உடனடியாகத் தெரியவரவில்லை.


இத்தாலிய கரையோரக் காவல் படையினர் ஹெலிகள், ரோந்துப் படகுகள், சுழியோடிகளது உதவியுடன் கடலில் பெரும் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கின்றனர்.

 

தாஸ்நியூஸ் - பாரிஸ் ThasNews.Com

19-08-2024



0 comments

Comments


You can support my work

bottom of page