top of page
Post: Blog2_Post
Writer's pictureKumarathasan Karthigesu

தலைமயிர் "ஸ்ரெய்ட்னிங்" சிறுநீரகங்களுக்குப் பெரும் பாதிப்பு!

ஆய்வாளர்கள் எச்சரிக்கை


பாரிஸ், ஏப்ரல், 10


தலைமயிரைச்சூடாக்கி வாரி நீட்டி நேராக்கும்

"பிரேசிலியன் ஸ்ரெய்ட்னிங்" (Brazilian straightening) என்கின்ற சிகிச்சை முறை சிறுநீரகங்களைப் பாதிக்கலாம் என்று

பிரெஞ்சு மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் குழு ஒன்று எச்சரிக்கை விடுத்துள்ளது.


சிறுநீரகப் பாதிப்புக்கு இலக்கான துனீசிய நாட்டு இளம் பெண் ஒருவரை மையமாக வைத்தே இந்த ஆராய்ச்சி தொடங்கப்பட்டது என்றும் அவர்கள் கூறியிருக்கின்றனர்.


பிரேசிலியன் ஸ்ரெய்ட்னிங் சிகிச்சை முறையில் பயன்படுத்தப்படுகின்ற தயாரிப்புப் பொருள்களில் அடங்கியுள்ள கிளைஒக்ஸிலிக் அமிலம் (Glyoxylic acid) சிறுநீரகங்களைப் பாதிக்கின்றது என்பதைத் தாங்கள் ஆய்வின் மூலம் கண்டறிந்துள்ளனர் என்ற விவரத்தைப் அவர்கள் அமெரிக்காவின் புகழ்பெற்ற "நியூ இங்கிலாந்து மருத்துவ சஞ்சிகையில்"(New England Journal of Medicine) வெளியிட்டிருக்கின்றனர்.

"கெரெட்டின் ஸ்ரெய்ட்னிங்"("keratin straightening") என்ற பட்டப் பெயரில் அழைக்கப்படுகின்ற இந்த பிறேசிலியன் ஸ்ரெய்ட்னிங் ஸ்ரைல், சமீப காலமாக உலகெங்கும் இளம் பெண்கள் மத்தியில் பிரபலமாகி உள்ளது.


நீண்ட நாட்களுக்குத் தலை மயிரைச் சுருள்கள் இன்றி நேராகப் பேணவும்

தலைமயிருக்குப் புதிய மினுமினுப்பை ஏற்படுத்தவும் நிறமூட்டவும் இந்தச் சிகிச்சை முறை பயன்படுகிறது.


சூடாக்கும் கருவியால்(straightener) பல தடவைகள் வெம்மையூட்டுவதற்கு முன்னராக மயிருக்குப் பூசப்படுகின்ற கெரட்டினை அடிப்படையாகக் கொண்ட மருந்துகள் (keratin-based product) தோல் மூலம் உறிஞ்சப்படக் கூடியவை என்றும் அவை உடலில் பல்வேறு உபாதைக் குழப்பங்களை ஏற்படுத்துவதுடன் சிறுநீரகங்களைப் பாதிக்கின்றன என்றும் ஆராய்ச்சியாளர் குழு தெரிவித்துள்ளது.

பாரிஸ், மார்செய் பிரதேசங்களின் மருத்துவமனைகளையும் சோர்போன் பல்கலைக்கழகத்தையும் (Sorbonne University) சேர்ந்த ஐவர் அடங்கிய இந்த ஆராய்ச்சியாளர்கள் குழு தங்களது ஆய்வு முடிவைப் பிரான்ஸின் சுகாதார அமைச்சின் கவனத்துக்குக் கொண்டுவந்துள்ளனர்.


துனீசியப் பெண் சில ஆண்டுகளாக

மாறி மாறிப் பலதடவைகள் சிறுநீரகப் பாதிப்புக்குள்ளாகியிருந்தார். அவ்வாறு பாதிக்கப்பட்ட ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் சில நாட்களுக்கு முன்னராக அவர் பிறேசிலியன் ஸ்ரெய்ட்னிங் செய்திருந்தார் என்ற தகவலை அவரே தனது மருத்துவரிடம் கூறியுள்ளார். அந்தத் தலைமயிர்ச் சிகிச்சை முறைக்குப் பயன்படுத்திய கெரட்டின் மருந்துப் போத்தலின் படத்தையும் அவர் மருத்துவரிடம் காட்டியுள்ளார்.


அதுவே தங்களது ஆராய்ச்சிக்கான ஆரம்பமாக அமைந்தது என்று பிரெஞ்சு நிபுணர்கள் கூறுகின்றனர்.


தலைமயிர்ச் சிகிச்சைகளுக்குப் பயன்படுத்தப்படும் கெரட்டின் அடிப்படையிலான மருந்துகள் உச்சம் தலை மற்றும் தோலில் எரிவுகளை ஏற்படுத்தலாம் என்று மட்டுமே பொதுவாக எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில் அவை சிறுநீரகத்தைத்

தாக்கும் நச்சுத்தன்மை வாய்ந்தவை என்பது இப்போதுதான் ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

 

தாஸ்நியூஸ் - பாரிஸ்

10-04-2024




0 comments

Komentar


You can support my work

bottom of page