அம்ஸ்ரடாம் ஷிப்போல்
நிலையத்தில் சம்பவம்
பாரிஸ், மே 29
நெதர்லாந்தின் ஷிப்போல் (Amsterdam-Schiphol) விமான நிலையத்தில் இருந்து புறப்படத் தயாரான ஜெற் விமானத்தின் இயந்திரத்தினுள் உறிஞ்சப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் இன்று புதன்கிழமை
பிற்பகல் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் யார் என்பது உடனடியாக உறுதிப்படுத்தப்படவில்லை. அவர் ஒரு விமான நிலையப் பணியாளராக இருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. விமானம் கிளம்புவதற்கு முன்னராகப் பின் நோக்கி நகர்த்தப்பட்ட சமயத்திலேயே
அந்தப் பணியில் ஈடுபட்டவர் எனக் கூறப்படுகின்ற பணியாளர் இயங்கிக் கொண்டிருந்த இயந்திரத்தில் சிக்கியுள்ளார் என தகவல்கள் தெரிவித்தன.
அம்ஸ்ரடாமில் இருந்து டென்மார்க்
நோக்கிப் புறப்பட்ட கேஎல் எம்(KLM) விமானத்தின் இயந்திரத்திலேயே
அவர் சிக்குண்டார். அவரது உடல் இயந்திரத்தின் உள்ளே உறிஞ்சப்படுவதை விமானத்தில் இருந்த பயணிகளும் பணியாளர்களும் நேரில் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் விமானத்தில் இருந்து இறக்கப்பட்டுப் பராமரிக்கப்பட்டனர் என்று கேஎல்எம் விமான சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவம் ஒரு விபத்தா அல்லது தற்கொலையா என்பதை அறிய விசாரணைகள் இடம்பெறுவதாக நெதர்லாந்தின் ராணுவப் பொலீஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தக் கொடூரச் சம்பவத்தினால் விமான நிலையத்தில் சிறிது நேரம் தடங்கல்கள் ஏற்பட்டன.
தாஸ்நியூஸ் - பாரிஸ்
30-05-2024
Comments