பார்வையாளர்கள்
மகிழ்ச்சி ஆரவாரம்
பாரிஸ், ஜூன் 7
பாரிஸின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாகிய ஈபிள் கோபுரத்தில் ஒலிம்பிக் போட்டிகளைக் குறிக்கும் பஞ்ச வர்ண வளையங்கள்
(Olympic rings) பொருத்தப்பட்டுள்ளன.
கோபுரத்தின் முதல் இரண்டு தளங்களுக்கு இடையே இந்த முப்பது தொன்கள் எடைகொண்ட பாரிய இரும்பு வளையங்களைப் பொருத்துகின்ற தொழில்நுட்பப் பணிகள் நேற்று வியாழக்கிழமை நள்ளிரவு தொடங்கி இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை ஒரு மணிவரை நீடித்தன. பாரிய வாகனங்களில் எடுத்து வரப்பட்ட வளையங்கள் பாரம் தூக்குகின்ற பாரிய கிரேன்களின் உதவியுடன்
கோபுரத்தில் எழுபது மீற்றர்கள் உயரத்தில் பொருத்தப்பட்டன.
கோபுரத்துக்குக் கீழே கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களின் மகிழ்ச்சி ஆரவாரத்துக்கும் மத்தியில் ஒலிம்பிக் வளையங்கள் உரிய இடத்தில் பொருத்தப்பட்டு ஒளிர்ந்தன. அச்சமயம் அங்கு வந்திருந்த இசைக் குழுவினர் நாட்டின் தேசிய கீதத்தை இசைத்தனர்.
உலகின் உருக்கு இரும்பு உற்பத்தித் துறையின் முன்னணி நிறுவனமும் ஒலிம்பிக் போட்டிகளுக்கு அனுசரனை வழங்குகின்ற நிறுவனமுமாகிய ஆர்சிலோர்மிற்றல்(ArcelorMittal) கம்பனியினால் நூறு சதவீதம் மீள்சூழற்சிக்குப் பயன்படுத்தக்கூடிய இரும்பினால் இந்த வளையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 29 மீற்றர்கள் நீளமும் 15 மீற்றர்கள் உயரமும் கொண்ட கட்டமைப்பில் ஐந்து வளையங்களும்
உள்ளடங்கியுள்ளன. ஒரு லட்சம் லெட் குமிழ்களால் அவை ஒளிரவிடப்படும்.
செப்ரெம்பர் எட்டாம் திகதி பரா ஒலிம்பிக் போட்டிகள் நிறைவுபெறும் வரை கோபுரத்தில் அவை பொருத்தப்பட்டிருக்கும்.
உலகின் ஐந்து கண்டங்களையும் குறிக்கின்ற இந்தப் பஞ்சவர்ண ஐந்து வளையங்கள் பிரெஞ்சு மொழியில் Les anneaux என்று சொல்லப்படுகின்றன.
⚫தொடர்புடைய செய்திகள் https://www.thasnews.com/post/ஒல-ம-ப-க-வள-யங-கள-க-ப-ரத-த-ல-ப-ர-த-தப-பட-ம
தாஸ்நியூஸ் - பாரிஸ்
07-06-2024
Comments