top of page
Post: Blog2_Post

படகு அணிவகுப்பு.. விமான சாகசங்கள் ஒலிம்பிக் தீபத்துக்கு மார்செய்யில் இன்று மகத்தான வரவேற்பு

பாய்மரக் கப்பலிலிருந்து

நீச்சல் வீரர் ஃபுளோரன்ட்

பந்தத்துடன் இறங்குவார்

விரிவான செய்திக்கு ThasNews.Com


பாரிஸ். மே, 8


பிரான்ஸின் மார்செய் நகரின் பழைய துறைமுகம் விழாக்கோலம் பூண்டுள்ளது. 12 நாள் கடற்பயணத்தின் முடிவில் ஒலிம்பிக் தீபம் இன்று வியாழக்கிழமை முன்னிரவு துறைமுகத்தை வந்தடையவுள்ளது.

அங்கு தீபத்தை வரவேற்கும் வைபவத்தில் சுமார் ஒன்றரை லட்சம் பேர் திரள்வர் என எதிர்பார்க்கப்படுவதால் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.


கிரேக்கத்தில் இருந்து மார்செய் நோக்கித் தீப்பந்தத்துடன் புறப்பட்ட

பெலம்(Belem) என்ற பாய்மரக் கப்பல் இன்று முன்னிரவு ஏழு மணியளவில் பழைய துறைமுகத்தை

வந்தடையும். பின்னர் அது அங்கு நிறுவப்பட்டுள்ள தடகள ஓட்ட(athletics track) இறங்குதளப்பகுதியைச் சரியாக 7.45 மணியளவில் நெருங்கிவரும்.

கப்பல் துறைமுகக் கடற்பகுதிக்குள் பிரவேசித்ததும் வானில் வான்படை விமானங்களினதும் கடலில் பல நூற்றுக் கணக்கான படகுகளினதும் கண்கவர் அணிவகுப்புகள் இடம்பெறவுள்ளன.


பிரான்ஸின் ஒலிம்பிக் நீச்சல் வீரர் ஃபுளோரன்ட் மனோவ்டு (Florent Manaudou) பாய்மரக் கப்பலில் இருந்து தீப் பந்தத்தைத் தாங்கியவாறு

இறங்கி வருவார். பிரான்ஸின் மண்ணில் ஒலிம்பிக் தீபத்தை ஏந்துகின்ற முதலாவது வீரர் என்ற பெருமை அவரைச் சார்கின்றது.


பின்னர் இன்னிசை மற்றும் தடகள அணிவகுப்புகளுக்கு மத்தியில்

துறைமுகப்பகுதியில் நிறுவப்பட்டுள்ள தீச் சட்டியில் (cauldron) ஒலிம்பிக் தீபம் ஏற்றிவைக்கப்படும். அங்கு தீபத்தை ஏற்றப்போகின்ற பிரபலம் யார் என்ற "சஸ்பென்ஸ் வினாவை" ஊடகங்கள் எழுப்பியுள்ளன. பந்தத்தைச் சுமந்து வந்த ஒலிம்பிக் சம்பியன் ஃபுளோரன்ட் மனோவ்டுவே அங்கேயும் தீபத்தை

ஏற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்ற போதிலும் நிகழ்ச்சி ஏற்பாடுகளின் முழுமையான விவரங்கள் பகிரங்கமாக அறிவிக்கப்படவில்லை.


இன்றைய நிகழ்வை ஒட்டி ஜொந்தாம் மற்றும் கலகம் அடக்குகின்ற பிரிவினர் உட்பட ஆறாயிரம் பொலீஸார் மார்செய் துறைமுகப்பகுதிக்குப் பலத்த பாதுகாப்பை வழங்கவுள்ளனர். பொலீஸ் படகுப் பிரிவினரும் கடலில் சேவையில் ஈடுபடவுள்ளனர்.


 

தாஸ்நியூஸ் - பாரிஸ்

08-05-2024






0 comments

Σχόλια


You can support my work

bottom of page