"குடியரசுக்கு எதிரான கூட்டணி"
தீவிர வலது, இடது சாரிகளைக்
கடுமையாக சாடினார் மக்ரோன்
பாரிஸ், டிசெம்பர் 5
பிரான்ஸின் அதிபர் மக்ரோன் தான் பதவி விலகப் போவதில்லை என்பதை உறுதிபடத் தெரிவித்திருக்கிறார்.2027 வரை - ஐந்து வருட காலம் முழுவதும் - பதவியில் தொடர்ந்து நீடித்திருக்கப்
போவதாக அவர் அறிவித்திருக்கிறார்.
சுமார் அறுபது ஆண்டுகளுக்குப் பின்பு நாடு மிகப் பரபரப்பான நாடாளுமன்ற அரசியல் நெருக்கடி நிலை ஒன்றைச் சந்தித்திருக்கும் தருணத்தில்-
அந்த நிலைவரத்தை உருவாக்கியதற்குப் பொறுப்பேற்று அரசுத் தலைவர் உடனே பதவி துறக்க வேண்டுமென்ற அழுத்தங்கள் அதிகரித்துவருகின்ற பின்னணியில் -
மக்ரோன் இன்றிரவு நாட்டு மக்களுக்கு உரையாற்றியிருக்கிறார். காலையில்
மிஷெல் பார்னியரது பதவி விலகலை ஏற்றுக் கொண்ட பின்னர், இன்றிரவு எலிஸே மாளிகையில் இருந்தவாறு தொலைக்காட்சி வாயிலாக அவர் ஆற்றிய அந்த விசேட உரையில் -
சபையில் பார்னியர் அரசு மீது நம்பிக்கையில்லாப் பிரேரணையைக்
கொண்டுவந்து அதனை ஒருமித்து ஆதரித்து வாக்களித்து நிறைவேற்றியமைக்காகத் தீவிர இடதுசாரிகளையும் , தீவிர வலதுசாரிகளையும் "குடியரசுக்கு எதிரான கூட்டணி"("anti-republican front) எனப் பெயர் சூட்டிக்குறிப்பிட்டுக் கடுமையாகச் சாடியுள்ளார்.
சில அரசியல் எதிராளிகள் வாக்காளர்களாகிய உங்களை எண்ணிப் பார்க்காமல் எதிர்கால அதிபர் தேர்தலைமட்டும் இலக்காகக் கொண்டு" குழப்பமான வழிமுறைகளைத்" தேர்ந்தெடுத்துள்ளனர் என்று மரின் லூ பென் தரப்பை மறைமுகமாகக் குறிப்பிட்டு விமர்சித்தார்.
மிஷெல் பார்னியர் தொடர்ந்தும் காபந்து அரசின் பிரதமராக நீடிப்பார் என்றும், புதிய பிரதமர் ஒருவர்
வரும் நாட்களில் நியமிக்கப்படுவார் எனவும் கூறிய அவர், முடங்கிப் போயுள்ள வரவு - செலவுத் திட்டத்தை நிறைவேற்றும் விதமாக விசேட சட்டம் ஒன்று டிசெம்பர் மாத நடுப்பகுதியில் சபையில் கொண்டுவரப்படும் என்று அறிவித்தார்.
கடந்த கோடை காலப் பகுதியில் நாடாளுமன்றத்தைக் கலைத்த தனது தீர்மானத்தைப் பிரெஞ்சு மக்களில் பலர் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என்று குறிப்பிட்ட மக்ரோன், இன்றிலிருந்து புதிய யுகம் ஒன்று ஆரம்பிப்பதாகக் கூறினார்.
நடைபெற்று முடிந்த ஒலிம்பிக் போட்டிகள் மற்றும் சனிக்கிழமை நடைபெறவிருக்கும் நொத்த - டாம் பேராலயத்தின் திறப்பு விழா போன்ற நிகழ்வுகளைக் குறிப்பிட்ட அவர்,"மிகச் சிறந்த விடயங்களை எப்படிச் செய்வது என்பது பிரெஞ்சு மக்களுக்குத் தெரியும்" என்று உரையின் முடிவில் தெரிவித்தார்.
தாஸ்நியூஸ் - பாரிஸ்
05-12-24
Comments