top of page
Post: Blog2_Post

பனிப் பொழிவால் பாரிஸ் பிராந்திய வீதிகளில் நெரிசல்

கார்களைத் தவிர்க்குமாறு

பொலீஸார் வேண்டுகோள்


தனியே பயணிப்பவர்கள்

குளிர் ஆடை, உணவு, நீர்

வைத்திருக்க அறிவுறுத்து


பாரிஸ் பிராந்தியத்தின் (Île-de-France) சில பகுதிகளில் கடும் பனிப் பொழிவு

இன்றிரவும் நாளை புதன்கிழமையும் தொடர்ந்து நீடிக்கலாம் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது. இந்தப் பிராந்தியத்தின் Yvelines மற்றும் Essonne மாவட்டங்கள் தொடர்ந்து செம்மஞ்சள் எச்சரிக்கை(vigilance orange) நிலையின் கீழ் உள்ளன.


வீதிகளை உறைபனி மூடியுள்ளதால் ஏற்பட்டுள்ள வாகனப் போக்குவரத்து நெரிசல்களைத் தவிர்ப்பதற்கு ஒத்துழைக்குமாறு பொலீஸார் கேட்டிருக்கின்றனர். இயன்றவரை கார்களைத் தவிர்த்துவிட்டு பொதுப் போக்குவரத்துகளில் பயணங்களை மேற்கொள்ளூமாறு பாரிஸ் வாசிகளிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டிருக்கிறது.


வாகனங்களில் தனியே நீண்ட தூரம் பயணிப்பவர்கள் உணவு, தண்ணீர் மற்றும் குளிர் காப்பு ஆடைகளைத் தம்வசம் வைத்திருக்க வேண்டியது கட்டாயம் என்றும் பொலீஸார் ஆலோசனை வழங்கியுள்ளனர்.


பாரிஸ் பிராந்தியப் பொலீஸ் தலைமையகம் எடுத்துள்ள சில பாதுகாப்பு ஏற்பாடுகளின்படி முக்கிய சில நெடுஞ்சாலைகளில் வாகன வேகம் மணிக்கு 70 km/h ஆக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. 7.5 தொன்னுக்கும் அதிகமான எடையுள்ள

பார ஊர்தி வாகனங்களுக்குத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

பாரிஸ் பிராந்தியத்தில் திங்கள் இரவு முதல் பெய்த பனிமழை காரணமாகச் சில பகுதிகளில் வீதிப் போக்குவரத்துகள் ஸ்தம்பிதமடைந்திருக்கின்றன. பாரிஸ் பிராந்தியத்தின் மேற்கே அமைந்துள்ள A12 மற்றும் A13 வீதிகளில் (autoroutes) திங்கள் இரவு முதல் நீண்ட வாகன நெரிசல் ஏற்பட்டது. இன்று செவ்வாய்க்கிழமை காலை வரை அந்த நெருக்கடி நீடித்தது. வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியதை

விடவும் மிக அதிகளவில் பனி கொட்டியதை அடுத்தே வீதிகளில் இந்த

நிலைமை ஏற்பட்டிருக்கிறது. தங்களது வானிலைத் தரவுகளில் எந்தத்

தவறுகளும் கிடையாது என்றும்

திங்கட்கிழமை எதிர்வு கூறியதை விடவும் பனிப் பொழிவு அதிகமாகக் காணப்பட்டது என்றும் வானிலை அவதான நிலையமாகிய மெத்தியோ பிரான்ஸ் (Météo-France) தெரிவித்துள்ளது.

 

தாஸ்நியூஸ் - பாரிஸ்

09-01-2023

0 comments

Comments


You can support my work

bottom of page