top of page
Post: Blog2_Post
Writer's pictureKumarathasan Karthigesu

பயணிகளில் 26 பேர் புகலிட விண்ணப்ப முடிவுக்காகக் காத்திருப்பு!

பரிசீலிக்கின்றது OFPRA


விமானம் டுபாய் நோக்கி

276 பேருடன் புறப்பட்டது


பாரிஸ் - வாட்றி விமான நிலையத்தில்

தடுத்துவைக்கப்பட்டிருந்த இந்தியப் பயணிகள் 303 பேரில் 276 பேர் இன்று பகல் சர்ச்சைக்குரிய விமானத்தில்

வந்த வழியே டுபாய்குப் புறப்பட்டனர்.

விமானம் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நோக்கிப் பறப்பதை பிளைட்ரடார்

(Flightradar) இணையத்தளம் உறுதிப்படுத்தி உள்ளது.


இரண்டு சிறுவர்கள் உட்பட 25 பேர்

அவர்களது புகலிட விண்ணப்பங்கள்

பரிசீலிக்கப்பட்டு முடிவு எடுக்கப்படும் வரை தொடர்ந்து பிரான்ஸ் மண்ணில் தங்கியிருக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டால் அவர்கள் அனைவரையும் இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பிவைக்க வசதியாகப் பாரிஸ் றுவாஸி சர்வதேச விமானத் தளத்தின் (Roissy Charles-de-Gaulle) ஒரு பிரிவில்

தங்கவைக்கப்பட்டிருக்கின்றனர்.


அவர்களது விண்ணப்பங்களை

அகதிகள் மற்றும் நாடற்றவர்களது

உரிமைகளைக் கவனிக்கின்ற பிரெஞ்சு நிறுவனமாகிய ஒஃப்ரா (l'Office Français de Protection des Réfugiés et Apatrides - OFPRA) அதிகாரிகள் மிக வேகமாகப் பரிசீலித்து வருகின்றனர் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.


ஆட்கடத்தல் தொடர்பாகச் சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்டிருந்த இரண்டு பயணிகளுக்கு 48 மணிநேரத்தில் பிரான்ஸின் எல்லையை விட்டு வெளியேற வேண்டும் என்ற உத்தரவு (obligation de quitter le territoire français - OQTF) விடுக்கப்பட்டிருக்கிறது. 2000,1984 ஆண்டுகளில் பிறந்த அந்த இருவரும் ஒரு தொகைப் பணம் மற்றும் பலருடைய கடவுச் சீட்டுக்களைத் தங்களது பயணப் பொதிகளில்

வைத்திருந்தனர் என்று கூறப்படுகிறது.


ருமேனிய நிறுவனத்துக்குச் சொந்தமான இந்த விமானம் டுபாயில் இருந்து நிக்கரகுவா செல்லும் வழியில் பாரிஸ் வாட்ரி விமான நிலையத்தில் எரிபொருள் நிரப்புவதற்காகத் தரையிறங்கியது. அந்த விமானத்தில் பயணிகள் சட்டவிரோதமாகக் கடத்திச் செல்லப்படுகின்றனர் எனக் கிடைத்த அநாமதேய தகவலை அடுத்துப் பிரெஞ்சு எல்லைக் காவல் படையினர் அதனைச் சோதனையிட்டிருந்தனர். அதன் பிறகு பாரிஸ் அரச சட்ட அலுவலகம் விடுத்த உத்தரவின் கீழ் விமானம் தடுத்துவைக்கப்படிருந்தது.

அதில் பயணம் செய்த சிறுவர்கள் உட்பட 302 இந்தியப் பயணிகளும் விமான நிலையத்தில் கடந்த வியாழன் முதல் தங்கவைக்கப்பட்டிருந்தனர். அவர்களைப் பராமரிப்பதற்காக விமான நிலையம் மூடப்பட்டிருந்தது. .


முன்னர் வந்த செய்தி இணைப்புகள் https://www.thasnews.com/post/சர-ச-ச-க-க-ர-ய-வ-ம-னம-ம-ண-ட-ம-ப-றப-பட-அன-மத


 

தாஸ்நியூஸ் - பாரிஸ்

25-12-2023

0 comments

Comments


You can support my work

bottom of page