top of page
Post: Blog2_Post
Writer's pictureKumarathasan Karthigesu

பரப்புரை உச்சம்! குப்பை லொறியில் தோன்றினார் ட்ரம்ப்!! பைடனுக்குப் பதிலடி


கணிப்பிட முடியாத களம்

இறுதி நேரம் கமலாவுக்கு

நெருக்கடியான விவகாரம்


பாரிஸ், ஒக்ரோபர் 31


இறுதிக்கட்டப் பிரசாரத்தின்போது குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் கழிவு அகற்றும் வாகனம் ஒன்றில் மஞ்சள் அங்கியுடன் தோன்றி ஆதரவாளர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளார்.


ட்ரம்பின் வாக்காளர்களைக் "குப்பைகள்" என்று விளித்து வெளியேறிச் செல்லும் அதிபர் ஜோ பைடன் வெளியிட்ட கருத்துக்குப் பதிலடியாகவே - அவரது கருத்தின் மீது தனது ஆதரவாளர்களது கவனத்தை ஈர்ப்பதற்காக - ட்ரம்ப் இவ்வாறு குப்பை அகற்றும் வாகனம் ஒன்றில் தோன்றிப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.


பரப்புரை ஊர்தியாக மாற்றி வடிவமைக்கப்பட்ட ஒரு குப்பை அகற்றும் வாகனத்தில் மஞ்சள் மேலங்கி அணிந்து தோன்றிய அவர் அதிலிருந்தவாறே செய்தியாளர்களது கேள்விகளுக்குப் பதிலளித்தார்.

"என்னுடைய குப்பை வண்டியைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?" - என்று செய்தியாளர்களைப் பார்த்துக் கேட்டார் ட்ரம்ப்.


"இது பைடனும் கமலா ஹரிஸும் அளித்த கௌரவம்" - என்று கூறிய அவர், "கமலாவும் ஜோவும் உங்களைக் குப்பை என்று அழைக்கட்டும் நான் உங்களை அமெரிக்காவின் ஆன்மாவாகக் காண்கிறேன்"(Kamala and Joe call you trash, I see you as the soul of America.") என்று தனது ஆதரவாளர்களுக்குக் கூறி அவர்களை உற்சாகப்படுத்தினார்.

பரப்புரைகளின் உச்சக்கட்டத்தில் குடியரசுக்கட்சி ஆதரவாளர்களைக் குப்பைகள் என்று கூறிய பைடனின் கூற்று அவரது துணை அதிபர் கமலா ஹரிஸுக்குப் பெரும் நெருக்கடியையும் தர்மசங்கடத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

டொனால்ட் ட்ரம்ப் இந்த விடயத்தைத் தனக்கு ஆதரவாகத் திசைதிருப்புவதில்

குறியாக உள்ளார். குப்பை அகற்றும் வாகனத்தில் வந்து வாக்காளர்களை உசுப்பிவிட்டுள்ளார்.


செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான இறுதிக் கட்டப் பரப்புரைகள் சூடுபிடித்துள்ளன. வெள்ளை மாளிகைக்கான போட்டி இந்த முறை பெரும் பதற்றம் நிறைந்ததாகவும் கணிக்க முடியாததுமாகக்

காணப்படுகிறது. இரண்டு தரப்புகளுக்கும் சரிக்குச் சமமான ஆதரவு நிலவுகின்ற - வெற்றியைத் தீர்மானிக்கின்ற- முக்கியமான மாநிலங்களில் (swing states) இரண்டு வேட்பாளர்களும் தங்களை முன்னிறுத்துவதற்கான

கடுமையான பிரயத்தனங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.


இந்த நிலையில், ஆகப் பிந்தி வெளியான கருத்துக் கணிப்பு ஒன்று

இரு வேட்பாளர்களும் மிக நெருக்கமான போட்டியைச் சந்திக்கவிருப்பதைக் காட்டுகின்றது.

ஜனநாயகக் கட்சி வேட்பாளர் கமலா ஹரிஸுக்குத் தேசிய அளவில் 48.1% வீத வாக்குகள் கிடைக்கலாம். குடியரசுக் கட்சி வேட்பாளர் ட்ரம்புக்கு

46.7% வீத வாக்குகள் கிடைக்கும் என்று

"FiveThirtyEight" என்ற குழு கணிப்பு வெளியிட்டிருக்கிறது.

 

தாஸ்நியூஸ் - பாரிஸ்

31-10-2024




0 comments

Commentaires


You can support my work

bottom of page