top of page
Post: Blog2_Post
Writer's pictureKumarathasan Karthigesu

பரப்புரை நிறைவு, கடல்கடந்த நிர்வாகப் பிராந்தியங்களில் வாக்களிப்பு ஆரம்பம்

பாரிஸ் பங்குச் சந்தை

6.4 வீதத்தால் சரிந்தது


பாரிஸ், ஜூன் 29


பிரான்ஸின் திடீர் நாடாளுமன்ற இடைத் தேர்தலுக்கான"மின்னல் வேகப்" பிரச்சாரங்கள் வெள்ளிக்கிழமை நள்ளிரவுடன் முடிவடைந்துள்ளன.

முதற்சுற்று வாக்களிப்பு நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.


தேர்தலுடன் தொடர்புடைய பிரசாரம் மற்றும் சகலவிதமான அரசியல் நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டுள்ளன.

செய்தி நிறுவனங்கள், பத்திரிகைகள் தொலைக்காட்சிகள் என்பன அரசியல்வாதிகளது கருத்துக்கள் மற்றும் கட்சிகள் தொடர்பான எந்த செய்தியையும் வெளியிடுவதைத் தவிர்த்துள்ளன.


பெருநிலப்பரப்பில் வாக்களிப்பு நாளையே நடக்கவுள்ளது என்றாலும் பிரான்ஸின் கடல்கடந்த நிர்வாகப் பிராந்தியங்கள் சிலவற்றில் இன்று சனிக்கிழமையே வாக்குப் பதிவு தொடங்கிவிட்டது. கனடா கரையோரம் அமைந்துள்ள செய்ன் பியர் மற்றும் மிக்குலோன்(Saint Pierre and Miquelon) தீவுகளில் வாக்குப்பதிவு தொடங்கிவிட்டதாக செய்திகள் வருகின்றன. தொடர்ந்து கரீபியன் தீவுகள், தென் அமெரிக்காவை அண்டிய பிரெஞ்சு கயானா, பசுபிக் தீவுகள், இந்துசமுத்திரப் பிராந்தியத் தீவுகள் ஆகியவற்றிலும் முன் கூட்டியே வாக்களிப்பு ஆரம்பமாகும்.

மொத்தம் 49 மில்லியன் பிரெஞ்சு வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ள இந்தத் தேர்தல் நாட்டின் சமீபகாலத் தேர்தல் வரலாற்றில் மிகுந்த முக்கியத்துவம் பெற்ற தேர்தலாக மாறியுள்ளது. நாட்டின் தீவிர தேசியவாதக் கட்சி முதல்முறையாக ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றும் என்று எதிரபார்க்கப்படுகிறது.


வாக்களிப்புக்கு முன்பாக ஆகப் பிந்தி

வெளியாகிய பிரத்தியேக மதிப்பீடுகள் மரின் லூ பென்னின் கட்சியின் பிரதமர் வேட்பாளர் ஜோர்டான் பார்டெல்லா தலைமையிலான வேட்பாளர் அணி 36.5% சத வீத வாக்குகளைப் பெற்று தேசிய அளவில் முதனிலை பெறும் என்று கணித்துள்ளன.


தீவிர வலதுசாரிகள் அதிகாரத்துக்கு வரவுள்ளனர் என்ற எதிர்பார்ப்பு பிரான்ஸில் வாழ்கின்ற ஆபிரிக்க குடியேறிகள் உட்பட ஆசிய மற்றும்

வெளிநாட்டவர்கள் மத்தியில் ஒரு வித அச்ச உணர்வை ஏற்படுத்தி உள்ளது.

அதேசமயம் குடியுரிமை வைத்துள்ள வெளிநாட்டவர்கள் அனைவரும் வாக்களிக்க ஆர்வமாக உள்ளனர். வெளிநாட்டவர்களின் வாக்களிப்பு வீதம் இம்முறை அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

577 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தின் கீழ்ச் சபையான சட்ட சபைக்கு உறுப்பினர்களைத் தெரிவு செய்கின்ற இந்தத் தேர்தல் உரிய காலத்துக்கு மூன்று ஆண்டுகள் முன்னராக நடைபெறுகிறது.


அதிபர் மக்ரோன் திடீரென இடைத் தேர்தலை அறிவித்ததை அடுத்து

அரசியல் கட்சிகளுக்கு வாக்காளர் தெரிவுக்கும் பரப்புரைகளுக்கும் மிகக் குறைந்த கால அவகாசம் மட்டுமே - மூன்று வாரங்கள் மாத்திரமே - கிடைத்தது. வாக்களிப்பை ஏற்பாடு

செய்கின்ற உள்ளூர் அதிகாரிகளும் வேலைப்பளுவைச் சந்திக்க நேர்ந்தது.


முதற் சுற்று நாளையும் இரண்டாவது சுற்று அடுத்த ஞாயிற்றுக்கிழமையும்

(ஜூன் 7)நடைபெறவுள்ளது. முதற்சுற்று வாக்களிப்பைத் தொடர்ந்து வன்செயல்கள் வெடிக்க வாய்ப்புள்ளது என உள்துறை அமைச்சு எதிர்பார்த்துள்ளது. காவல் துறையினர் உஷார் நிலையில் உள்ளனர்.


மக்ரோனின் தேர்தல் அறிவிப்பை அடுத்து ஆட்டம் கண்ட பாரிஸ் பங்குச் சந்தை நேற்று வெள்ளிக்கிழமை 6.4 சதவீதத்தால் மேலும் வீழ்ச்சி கண்டது. ஜரோப்பிய நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் கட்சி பின்னடைவைச் சந்தித்ததை அடுத்து அதிபர் மக்ரோன் தீடீரென - எதிர்பாராத விதமாக - நாடாளுமன்றத்தைக் கலைக்கும் முடிவை வெளியிட்டிருந்தார். அதனால் பாரிஸ் ஐரோப்பாவின் மிகப் பெரிய பங்குச் சந்தை என்ற அந்தஸ்தை இழந்தது. பாரிஸிடம் இருந்த அந்த குடத்தை இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு லண்டன் சூடிக்கொண்டுள்ளது.


🔵தொடர்புடைய செய்தி

 

தாஸ்நியூஸ் - பாரிஸ்

29-06-2024


0 comments

Comments


You can support my work

bottom of page