பிரான்ஸின் நிலை என்ன?
பாரிஸ், மே 22
நோர்வே, ஸ்பெயின், அயர்லாந்து ஆகியன பலஸ்தீனத்தை ஓர் அரசாக மே 28 ஆம் திகதி முதல் முறைப்படி அங்கீகரிக்கவுள்ளன என்று அறிவித்திருக்கின்றன.
கடும் வான்வழிக் குண்டுவீச்சுக்களை அடுத்து இன்று புதன்கிழமை
காஸாவின் தெற்கே ராஃபாவில் (Rafah) சன அடர்த்தி மிகுந்த பகுதிக்குள் இஸ்ரேலிய டாங்கிகள் நுழைந்து கொண்டிருக்கின்ற சமயத்தில் மூன்று நாடுகளிடமிருந்து இந்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
மேற்கு ஐரோப்பிய நாடுகள் பலஸ்தீன சுதந்திரத் தனி அரசை அங்கீகரிக்க முன்வருவது இதுவே முதல் முறையாகும். இதற்கு முன்னர் சுவீடன் 2014 இல் அதனை அங்கீகரித்திருந்தது. முன்னாள் சோவியத் நாடுகளான ஆறு ஐரோப்பிய நாடுகள் (போலந்து, பல்கேரியா, செக் குடியரசு, ருமேனியா, ஹங்கேரி, உக்ரைன்) ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்துகொள்வதற்கு முன்னராகப் பலஸ்தீன அரசை அங்கீகரித்திருந்தன.
தற்போதைய அறிவிப்பு இஸ்ரேலில் கடும் சீற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. மூன்று நாடுகளின் இந்த முடிவு பிராந்தியத்தில் நிலைவரத்தை மேலும் மோசமாக்கும் எனக் கூறியுள்ள இஸ்ரேல் மூன்று நாடுகளது தூதர்களையும் திருப்பி அழைத்துள்ளதாகத் தெரிவித்திருக்கிறது. அதே சமயம் இந்த முடிவு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்று பலஸ்தீன விடுதலை இயக்கம் வரவேற்றிருக்கிறது. ஹமாஸ் இயக்கமும் இதனை வரவேற்றுள்ளது.
இதேவேளை -
பலஸ்தீன அரசைப் பாரிஸ் அங்கீகரிக்குமா என்ற கேள்வியை செய்தி ஊடகங்கள் சில எழுப்பி உள்ளன. பலஸ்தீனத்தை அரசாக அங்கீகரிப்பதில் தடை ஏதும் இல்லை என்று பிரான்ஸ் தெரிவித்துள்ளது. ஆனால் அதற்கான தருணம் இதுவல்ல என்று வெளிவிவகார அமைச்சர் ஸ் ரீபன் செஜோர்ன் (Stephane Séjourné)
ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அதேசமயம் பலஸ்தீன அரசை அங்கீகரிப்பது அந்தந்த நாடுகளின் தனிப்பட்ட தீர்மானம் என்று வெள்ளை
மாளிகைப் பேச்சாளர் ஒருவர் கூறியிருக்கிறார்.
ஸ்பெயின், அயர்லாந்து ஆகியன தங்களது முடிவு இஸ்ரேலுக்கு எதிரானதோ அன்றி ஹமாஸ் இயக்கத்துக்கு ஆதரவானதோ அல்ல என்றும் அமைதியை ஏற்படுத்துவதை
மட்டுமே ஒரே நோக்கமாகக் கொண்டது
எனவும் தெரிவித்துள்ளன.
பலஸ்தீன விடுதலை இயக்கத்தின் தலைவர் யஸீர் அரபாத் 1988 இல் பலஸ்தீனத்தை ஒரு சுதந்திர நாடாகத் தன்னிச்சையாகப் பிரகடனப்படுத்தி இருந்தார். அதன் தலை நகரமாக கிழக்கு ஜெருசலேம் அறிவிக்கப்பட்டது.
உலகின் பெரும்பாலான நாடுகள் பலஸ்தீன அரசை ஏற்கனவே அங்கீகரித்து ஏற்றுக்கொண்டுள்ளன
பலஸ்தீனத்தை ஐ. நாவில் இணைப்பதற்கு ஆதரவாக அதன் பொதுச் சபையில் 143 நாடுகள் அண்மையில் வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
தாஸ்நியூஸ் - பாரிஸ்
22-05-2024
Comments