top of page
Post: Blog2_Post
Writer's pictureKumarathasan Karthigesu

மூத்த வலதுசாரி மிசெல் பார்னியரை புதிய பிரதமராக நியமித்தார் மக்ரோன்


நம்பிக்கை வாக்கெடுப்பில்

எதிர்ப்புகளைச் சமாளித்து

அரசாங்கம் நிறுவ இலக்கு

பாரிஸ், செப்ரெம்பர் 5


தேர்தல் முடிந்து இரண்டு மாதங்களின் பின்னர் நாட்டின் புதிய பிரதமரை அறிவித்திருக்கிறார் மக்ரோன்.

யாரும் எதிர்பார்த்திராத முகமான-வலதுசாரி அரசியல் பாரம்பரியம் மிக்கவரான - மூத்த அரசியல்வாதி மிசெல் பார்னியரை (Michel Barnier) அந்தப்பதவிக்கு நியமித்து அரசியல் தரப்புகளைப் பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறார் அவர்.


மூன்று முக்கிய அரசியல் சக்திகளாகப் பிரிந்துள்ள நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் தப்பிப் பிழைத்துப் புதிய அரசாங்கம் ஒன்றை நிறுவவேண்டிய பெரும் சவாலை எதிர்கொள்கிறார் மிசெல் பார்னியர்


அதற்காக நாடாளுமன்றத்தின் விசேட கூட்டம் அடுத்த சில தினங்களில் கூட்டப்படவுள்ளது. பார்னியரின் நியமனத்துக்கு சோசலிஸ்ட் கட்சி உட்பட இடதுசாரிகள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்திருப்பதுடன் வாக்கெடுப்பில் அவரைத் தோற்கடிக்கப்போவதாகச் சூளுரைத்துள்ளன. தீவிர வலதுசாரியாகிய மரின் லூ பென் அம்மையார் புதிய பிரதமரது

கொள்கை விளக்க உரையைச் செவிமடுத்த பிறகே அவரை ஆதரிப்பதா இல்லையா என்ற தீர்மானத்தைத் தமது கட்சி எடுக்கும் என்று கூறியிருக்கிறார்.


அதிபர் மக்ரோன் புதிய பிரதமரை நியமிப்பது தொடர்பாகக் கடந்த சில

தினங்கள் முக்கிய அரசியல் பிரமுகர்களுடன் இடைவிடாத கலந்துரையாடல்களில் ஈடுபட்டுவந்தார். சோசலிஸ்ட் கட்சியின் முன்னாள் பிரதமர் பெர்னாட் காசனெவ்(Bernard Cazeneuve) மற்றும் ரிப்பப்ளிக்கன் கட்சியைச் சேர்ந்த சேவியே பேற்றன்(Xavier Bertrand) ஆகிய இருவரில் ஒருவரே பிரதமராக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. அதிபர் மக்ரோன் இவர்கள் இருவரையும் அழைத்துத் தனித்தனியே ஆலோசனை நடத்தியும் இருந்தார். ஆயினும் அந்த முயற்சிகள் தோல்வி கண்டன எனக் கூறப்படுகிறது. அதன் பிறகே மிசெல் பார்னியரை நியமிக்கின்ற முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.


இடதுசாரிகளது கூட்டணி அதிக இடங்களை வென்றிருந்தாலும் நாடு வலதுசாரிகளது பக்கம் திசை திரும்பியிருப்பதாகக் கருதப்படும் பின்னணியில் நாட்டின் பாரம்பரிய வலதுசாரி ரிப்பப்ளிக்கன் (Republicans - LR)கட்சியின் உறுப்பினரான பார்னியரைப் பிரதமர் பதவிக்கு நிறுத்தும் முடிவை மக்ரோன் ஏன் எடுத்தார் என்ற கேள்வி எழுப்பப்படுகிறது.


பிரதமர் பதவிக்கு நிறுத்தப்படுபவர் உடனடியாகவே நம்பிக்கை வாக்கெடுப்பு மூலம் கவிழ்க்கப்படக்கூடிய வாய்ப்பை அடியோடு தவிர்க்கின்ற நோக்குடனேயே மக்ரோன் வலதுசாரிகள் தரப்பில் இருந்து ஒருவரைப் பிரதமராக்கியுள்ளார்

என்று அரசியல் வட்டாரங்கள்

தெரிவிக்கின்றன. தீவிர வலதுசாரிகள் உட்பட இடதுசாரிகள் பக்கம் இருந்தும் அவருக்கு ஆதரவு கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. அதேவேளை வரவு-செலவுத் திட்டத்தில் குறைப்புகளைச் செய்வதும், தீவிர வலதுசாரிகளது ஆதிக்கத்தைக் குறைப்பதும் இந்த நியமனத்தில் மறைந்துள்ள ஏனைய நோக்கங்கள் என்றும் கூறப்படுகிறது.


பதவி விலகிய பிரதமர் கப்ரியேல் அட்டாலின் வயதில் இரண்டு மடங்கு

அதிகமான வயதுடையவரான - 73 வயதுடைய - மிசெல் பார்னியர் சுமார் அரை நூற்றாண்டு அரசியல் அனுபவம் மிகுந்தவர். வெளிவிவகாரம் உட்பட பல அமைச்சுகள், ஐரோப்பிய ஒன்றிய ஆணையாளர், இங்கிலாந்துடனான பிரெக்சிட் (Briexit) சமரசப் பேச்சுவார்த்தையாளர் என்று பல்வேறு முக்கிய பதவிகளை வகித்தவர்.


1970 களில் அவரது அரசியல் பிரவேசம் தொடங்கியது. 27 ஆவது வயதில் பிரெஞ்சு அல்ப்ஸின் Haute Savoie பிராந்தியத்தில் இருந்து நாடாளுமன்ற உறுப்பனராகத் தெரிவானார்.


1990 களில் ஜாக் சிராக்கின் அரசில் தொடங்கி மைய வலதுசாரி அரசுகளில் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர்.

2022 இல் அதிபர் மக்ரோனை எதிர்த்து ஜனாதிபதித் தேர்தலில் ரிப்பப்ளிக்கன் கட்சியின் சார்பில் வேட்பாளராக நின்றவர். நாட்டில் குடியேற்றத்தைத் தடைசெய்வேன் என்று கூறி ஐரோப்பிய நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியவர். நாட்டில் கட்டாய இராணுவ சேவையை

அறிமுகப்படுத்த விரும்பியவர்.


அதேசமயம், 2017 இல் மக்ரோன் அதிபராகப் பதவிக்கு வந்த சமயத்தில்

அவரது கொள்கைகளைக் கடுமையாக கண்டித்துக் கருத்து வெளியிட்டிருந்தார். "திமிர் பிடித்தவர்" "மிகவும் தரம் குறைந்தவர்" என்றும் மக்ரோனை அவர் விமர்சித்திருந்தார்.


முன்னர் வந்த செய்தி

 

தாஸ்நியூஸ் - பாரிஸ்

5-09-2024




0 comments

Comments


You can support my work

bottom of page