top of page
Post: Blog2_Post
Writer's pictureKumarathasan Karthigesu

முன்கூட்டியே நேரும் முதுமை நோயுடன் வாழ்ந்தவர் மரணம்


சாமி பஸ்ஸோ என்பவரின்

28 வருட துணிகர வாழ்வு

இத்தாலி மக்கள் அஞ்சலி

பாரிஸ், ஒக்ரோபர் 08


பிறப்பில் இருந்தே மிக வேகமாக முதுமையடைகின்ற ஒருவகை நோயுடன் வாழ்ந்துவந்த இத்தாலி நாட்டவரான சாமி பஸ்ஸோ என்பவர் தனது 28 ஆவது வயதில் உயிரிழந்துள்ளார்.


இத்தாலி நாட்டு செய்தி ஊடகங்கள் இத்தகவலை வெளியிட்டிருக்கின்றன.


சாமி பஸ்ஸோ கடந்த சனியன்று இரவு நண்பர்களுடன் உணவகம் ஒன்றுக்குச் சென்றிருந்த சமயத்தில் அங்கே திடீரென நிலைகுலைந்து வீழ்ந்து மரணமானார் என்று தெரிவிக்கப்படுகிறது.


புரோஜீரியா (progeria) எனப்படுகின்ற முன்கூட்டிய முதுமை(premature aging) நோயுடன் வாழ்ந்த உலகின் மூத்த நோயாளி சாமி பஸ்ஸோ ஆவார். டிசெம்பர் 1,1995 இல் இத்தாலியின் வடக்குப் பகுதியில் பிறந்தவர். அங்குள்ள படுவா பல்கலைக்கழகத்தில் (University of Padua) மூலக்கூறு உயிரியல்(molecular biology) துறையில் சிறப்புத் தேர்ச்சி பெற்றவர்.

இன்ஸ்ரகிராம் சமூக ஊடகத்தில் பல்லாயிரக் கணக்கான

பயனாளர்களைக் கொண்டிருந்த

அவரது மறைவுக்கு அஞ்சலிச் செய்திகள் பகிரப்பட்டு வருகின்றன. "பெரும் சவாலான வாழ்வை ஒரு புன்னகையுடன் கடந்து வென்றவர். தன்னம்பிக்கை, துணிச்சல் நிறைந்த அவரது 28 வருட வாழ்க்கை பிறருக்கு என்றைக்கும் முன்னுதாரணமாக விளங்கும்" என்று இத்தாலியின் பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி (Giorgia Meloni) தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.


Hutchinson-Gilford syndrome என்றும் குறிப்பிடப்படும் புரோஜீரியா (progeria) நோயுடன் பிறப்போர் 13, 14 ஆண்டுகளுக்குள் தீவிர முதுமை நிலையை அடைந்து உயிரிழக்கின்றனர். சாமி பஸ்ஸோ 28 வருடங்கள் முதுமையுடன் போராடி வாழ்ந்துள்ளார். புரோஜீரியா நோய் தொடர்பான விழிப்புணர்வுப் பிரசாரத்துக்காக அவர் அண்மையில் சீனா சென்று திரும்பியிருந்தார்.

 

தாஸ்நியூஸ் - பாரிஸ்

08-10-2024

0 comments

Comments


You can support my work

bottom of page