பாரிஸின் முக்கிய இடங்கள்
இன்றிரவு ஒளியூட்டப்பட்டன
பாரிஸ், செப்ரெம்பர் 30
மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தைக் குறிக்கின்ற விதமாக பாரிஸ் நகரின் முக்கிய சில இடங்கள் இன்றிரவு இளம் சிவப்பு நிறத்தில் ஒளியூட்டப்பட்டிருந்தன.
ஆண்டுதோறும் ஒக்ரோபர் மாதம் மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. "இளம் சிவப்பு ஒக்ரோபர்" (Pink October) என்று பெயரிடப்படுகின்ற இந்த
மாதத்தில் "இளம் சிவப்பு நாடா" சங்கத்தினால் (Pink Ribbon Association) உலகெங்கும் பெண்கள் மத்தியில் மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வூட்டும் நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன.
அதன் ஒரு பகுதியாகவே பாரிஸ் நகரில் இளம் சிவப்பு ஒளியூட்டும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
மாலையில் சூரியன் மறைந்த பின்னர் ஈபிள் கோபுரம் இளம் சிவப்பு வர்ணத்தில் ஒளிர்ந்தது. அதனைக் காண்பதற்காக ஆயிரக்கணக்கானோர்
கோபுரப் பகுதியில் திரண்டிருந்தனர்.
la place de la Concorde, la place Vendôme மற்றும் நாடாளுமன்றக் கட்டடத் தொகுதி (Assemblée nationale) என்பனவும் சில மணி நேரம் அதே இளம் சிவப்பு வர்ணத்தில் ஒளியூட்டப்பட்டுக் காட்சியளித்தன.
பெண்கள் மார்பகப் புற்றுநோய்ப் பரிசோதனை செய்துகொள்வதை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்ட விழிப்புணர்வுக் கண்காட்சி நிகழ்ச்சி ஒன்று Place Vendôme பகுதியில் நடத்தப்பட்டது.
உலகில் எட்டுப் பெண்களில் ஒருவருக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்படுவதாக இளம்சிவப்பு நாடா சங்கம்
(Pink Ribbon Association) அதன் இணையத் தளத்தில் தெரிவிக்கிறது.
பரிசோதனை மூலம் நேர காலத்தில் - இரண்டு சென்ரி மீற்றர்களுக்கு குறைவான அளவில் - மார்புக் கட்டிகளைக் கண்டுபிடித்தால் அதிக சிகிச்சை மற்றும் பக்க விளைவுகள் கூடிய மருந்துகள் இன்றியே அதனைக் குணப்படுத்த முடியும். முன் கூட்டியே சோதனை செய்வதன் மூலம் பத்தில் ஒன்பது பேருக்கு அதனைக் குணப்படுத்திவிடலாம்-என்றும் தெரிவிக்கப்படுகிறது.
தாஸ்நியூஸ் - பாரிஸ் ThasNews.Com
30-09-2024
Comments