top of page
Post: Blog2_Post
Writer's pictureKumarathasan Karthigesu

முற்றாக எரிந்த ஹெலியின் சிதைவு கண்டுபிடிப்பு! அதிபர் உட்பட அனைவரும் உயிரிழந்தனர்!!


தேசிய துக்கம் அறிவிக்க

தயாராகிறது தெஹ்ரான்


பாரிஸ், மே 20


ஈரானிய அதிபர் இப்ராஹிம் ரைசி பயணித்த ஹெலிக்கொப்ரர் முற்றாக எரிந்துசிதறிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அதிலிருந்த எவருமே உயிர்பிழைத்திருப்பதற்கான தடயங்கள் ஏதுமில்லை என்று ஈரானிய அரச தொலைக்காட்சி அறிவித்திருக்கிறது.


ஈரானின் கிழக்கே அஜர்பைஜான் மாகாணத்தில் மலைப் பிரதேசத்தில்

ஹெலிக்கொப்ரர் விபத்துக்குள்ளான

பகுதியைப் பல மணி நேரப் போராட்டத்துக்குப் பின்னர் மீட்புக் குழுவினர் அடையாளம் கண்டுள்ளனர் என்று அறிவிக்கப்படுகிறது.

படம் :அதிபர் பயணித்த பெல் ரக ஹெலிகாப்டர். விபத்துக்கு முன்னர் எடுக்கப்பட்ட காட்சி

 

காடுகள் நிறைந்த மலைப்பகுதியில்

ஹெலிக்கொப்ரர் எரிந்து சிதறிக் கிடக்கும் தடயத்தைக் காட்டுகின்ற ட்ரோன் மூலம் எடுக்கப்பட்ட படங்கள் வெளியாகி உள்ளன. வெப்பப் பொருள்களை அடையாளம் காணக்கூடிய துருக்கி நாட்டின் விசேட தேடுதல் ட்ரோன் மூலமே ஹெலியின் சிதைவுப் பகுதி அடையாளங்காணப்பட்டிருக்கிறது.


அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன் மற்றும் அவர்களோடு பயணித்த உயர் அதிகாரிகள், மெய்க்காவலர்கள் உட்பட ஒன்பது பேரும் உயிரிழந்து விட்டனர் என்பதை ஈரானிய அரச தொலைக்காட்சி பின்னராக உறுதிப்படுத்தியது.

63 வயதுடைய அதிபர் இப்ராஹிம் ரைசி

ஈரானின் அதி உயர் தலைவர் அயத்துல்லா அலி கமேனிக்கு (supreme leader, Ayatollah Ali Khamenei) மிக நெருக்கமான ஈரானிய உயர் அரசியல் தலைவராகத் திகழ்ந்தவர். கமேனியின் இடத்தை இட்டு நிரப்பக் கூடியவர் என நம்பப்பட்டு வந்தவர். 2021 இல் அதிபராகப் பதவியேற்றிருந்த அவர், நாட்டில் வெடித்த மக்கள் போராட்டங்களை ஒடுக்குவதில் வெற்றி கண்டவர். பாலஸ்தீனிய ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா, யேமனியின் ஹுதி இயக்கங்களின் பின்புல ஆதரவு சக்திகளில் மிக முக்கியமான ஒருவராக ரைசி கருதப்பட்டு வந்தார். அதேசமயம் நாட்டில் முக்காடு அணிதல் உட்பட பெண்கள் மீதான கட்டுப்பாட்டுச் சட்டங்களை மிகக் கடுமையாக்கி நடைமுறைப்படுத்தியவர்.


ரைசியின் மறைவுக்குத் தேசிய துக்கம் அறிவிப்பதற்கான ஏற்பாடுகள் தெஹ்ரானில் இடம்பெற்று வருகின்றன.அதிபரது ஹெலி விபத்து மரணம் நாட்டின் அரச நிர்வாகச் செயற்பாடுகளில் எந்தவித குழப்பங்களையும் ஏற்படுத்தாது என்றும் மக்கள் அஞ்சவேண்டிய அவசியமில்லை என்றும் ஈரானிய இஸ்லாமியக் குடியரசின் அதி உயர் பீடம் அறிவித்திருக்கிறது.



 

தாஸ்நியூஸ் - பாரிஸ்

20 - 05-2024



0 comments

Comments


You can support my work

bottom of page