top of page
Post: Blog2_Post

தேர்தலில் திருப்பம்! ஆர்என் கட்சியைப் பின்னுக்குத் தள்ளி இடதுசாரி முன்னணி அதிக ஆசனங்கள்!!

எந்த அணிக்கும் அறுதிப்

பெரும்பான்மை இல்லை

ஆளும் கட்சி 2ஆம் இடம்


விரிவான செய்திக்கு

தாஸ்நியூஸ்.கொம்


பாரிஸ், ஜூலை 7


பிரான்ஸின் வாக்காளர்கள் வெற்றி நிச்சயம் என்ற வானளாவிய நம்பிக்கையோடு இருந்த தீவிர வலதுசாரிகளை நிராகரித்து ஒத்க்கியிருக்கின்றனர். முதல் சுற்றில் அதிகாரத்தின் வாசல் வரை வந்த அவர்களுக்கு இரண்டாவது சுற்றில் கதவுசாத்தப்பட்டிருக்கிறது.


பொதுத் தேர்தலின் இரண்டாவது சுற்று முடிவுகள் எதிர்பார்ப்புக்கு மாறாக வந்திருக்கின்றன. இடதுசாரிகள் - பசுமைக் கட்சிகளை உள்ளடக்கிய புதிய வெகுசன முன்னணி இன்று நடந்த இரண்டாவது சுற்றில் தீவிர வலதுசாரிகளையும் மக்ரோன் அணியையும் பின்தள்ளிக்கொண்டு முதலிடத்துக்கு வந்திருக்கிறது.

அதிக ஆசனங்களை வென்றுள்ளது.

ஆச்சரியமளிக்கும் விதமாக அந்தக் கூட்டணி 175-205 உறுப்பினர்களைப் பெற்றிருப்பதை உத்தேச கணிப்புகள் காட்டுகின்றன.


முதற்சுற்றில் ஆட்சி அமைக்கும் நிலையை எட்டியிருந்த தீவிர வலதுசாரிகள் மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட்டிருக்கின்றனர். மக்ரோனின் ஆளும் கட்சி அணி மூன்றாவது இடத்தில் இருந்து இரண்டாவது இடத்துக்கு முன்னேறியிருக்கிறது.


தொகுதி ரீதியான முடிவுகள் வெளியாகி வருகின்றன.

பிரதான கட்சிகள் பெற்ற ஆசனங்களின் பூர்வாங்க மதிப்பீடு வருமாறு :


🔵புதிய வெகுசன இடதுசாரி முன்னணி (Nouveau Front populaire) - 175-205


🔵மக்ரோன் அணி :150-175


🔵ஆர்என் (Rassemblement national) - 115-150


பிரான்ஸின் சோசலிஸக் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பசுமைக் கட்சிகளை உள்ளடக்கிய இடதுசாரிகள் கூட்டணி நாடாளுமன்றத்தில் அதிக ஆசனங்களைப் பெற்ற மிகப்பெரும் அணியாக மாறியுள்ளது. எனினும் அரசாங்கத்தை அமைப்பதற்கான அறுதிப் பெரும்பான்மையை எந்த அணியும் எட்டவில்லை.


577 ஆசனங்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மைக்குக் குறைந்தது 289 ஆசனங்களைக் கைப்பற்றுவது அவசியம்.


முன்னர் வந்த செய்தி :


ஆர்என் என அழைக்கப்படுகின்ற Rassemblement national கட்சியின் பிரதான வேட்பாளர் ஜோர்டான் பார்டெல்லா வாக்களிப்பை முடித்துக் கொண்டு பாரிஸில் உள்ள கட்சித் தலைமையகத்துக்குத் திரும்பியிருக்கிறார்.பெரும் வெற்றியை எதிர்பார்த்து அதனைக் கொண்டாடுவதற்காக ஆதரவாளர்கள் அங்கு திரண்டிருந்தனர். அதேசமயம் அதிபர் மக்ரோன் தனது பிரதமர் கப்ரியேல் அட்டால் சகிதம் கூட்டம் ஒன்றைக் கூட்டியிருக்கிறார். சற்று முன்னர் ஆரம்பமான அக்கூட்டத்தில் மக்ரோனின் ஆளுங்கட்சி அணியில் இடம்பெறுகின்ற கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொள்கின்றனர் என்று பாரிஸ் செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன.


மாலை ஐந்து மணிக்கு நாடெங்கும் பதிவான வாக்களிப்பு வீதம் 59.71% என அறிவிக்கப்படுகிறது. இது முதற்சுற்றை விடவும் சற்றுத் தான் அதிகம் என்றாலும் 1981 ஆம் ஆண்டின் பின்னர் பதிவாகின்ற மிக அதிகமான சாதனை அளவு என்று தெரிவிக்கப்படுகிறது. இன்றிரவு எட்டு மணிக்கு நாடெங்கும் வாக்களிப்பு நிறைவடைகின்றபோது மொத்த வாக்களிப்பு 67.10% வீதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


வாக்களிப்பு நிலையங்கள் மாலை ஆறு மணி முதல் மூடப்பட்டு வருகின்றன. பெரிய நகரங்களில் அவை எட்டு மணிவரை திறந்திருக்கும்.


🔴 பொலீஸார் உஷார்!


இன்றைய இறுதிக்கட்ட வாக்குப்பதிவு முடிந்து பெறுபேறுகள் வெளியாகும் சமயத்தில் முக்கிய நகரங்களில் ஆர்ப்பாட்டப் பேரணிகளும் அவை தொடர்புடைய வன்செயல்களும் இடம்பெறலாம் என்று பொலீஸார் எதிர்பார்க்கின்றனர்.


சட்டம் ஒழுங்குக்கு இடையூறு மற்றும் நகர்ப்புற வன்செயல்கள் இடம்பெறலாம் என்று உள்நாட்டு உளவு சேவை வழங்கிய எச்சரிக்கையை அடுத்துப் பல்லாயிரக்கணக்கான பொலீஸாரும் ஜொந்தாமினரும் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர். நொந்த், (Nantes) ஆஞ்சேர்ஸ் (Angers) லியோன் (Lyon) ரென் (Rennes) துளூஸ் (Toulouse) பாரிஸ் (Paris) மற்றும் போர்தோ (Bordeaux) ஆகிய நகரங்களில் நகர்ப்புறக் கலகங்கள் எதிர்பார்க்கப் படுகின்றன. சில பொலீஸ் பிரிவுகளில் ஆட்கள் ஒன்று கூடுவதற்கும் ஆர்ப்பாட்டங்கள் செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.


பாரிஸில் நாடாளுமன்றக் கட்டடத்துக்கு வெளியே இன்று மாலை பாஸிசத்துக்கு எதிரான செயற்பாட்டு இயக்கம் (groupe Action anti-fasciste Paris-Banlieue) நடத்த இருந்த பேரணிக்குப் பொலீஸார் தடைவிதித்துள்ளனர். அதேசமயம் Bastille-République பகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்களுக்குப் பாதுகாப்பு அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன.


பிந்திய தேர்தல் செய்திகள் தொடர்ந்து பதிவேற்றப்படும்.. எதிர்பாருங்கள்..!

 

தாஸ்நியூஸ் - பாரிஸ்

07-07-2024

0 comments

Comments


You can support my work

bottom of page