top of page
Post: Blog2_Post
Writer's pictureKumarathasan Karthigesu

முலான் றூஷ் இரவுக் களியாட்ட விடுதிக் கோபுரத்தின் சிவப்புக் காற்றாடி வீழ்ந்தது!

எவருக்கும் காயமில்லை


பாரிஸ், ஏப்ரல் 25


பாரிஸில் உல்லாசப் பயணிகளைக் வருகின்ற இடங்களில் ஒன்று "முலான் றூஷ்."(Moulin Rouge). மிகப் பிரபலமான

காபரே (cabaret) இரவுக்களியாட்ட விடுதி அது. அதன் மேற்கோபுரத்தில் எப்போதும் பிரமாண்டமாகத் தெரிகின்ற ஆலைக் காற்றாடி நேற்றிரவு திடீரெனப் பெயர்ந்து தரையில் வீழ்ந்துள்ளது. எதிர்பாராத இந்த அனர்த்தத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை.

பாரிஸ் 18 ஆவது நிர்வாகப் பிரிவில் இரவு பகலாக உல்லாசப் பயணிகளால்

நிறைந்து காணப்படும் பிஹால் (Pigalle) பகுதியில் இந்த விடுதி அமைந்திருக்கிறது. அதன் சிவப்பு வர்ணக் காற்றாடி தரையில் கிடப்பதைக் காலையில் கண்ட அப்பகுதி வாசிகளும், உல்லாசப் பயணிகளும் அதிர்ச்சி அடைந்தனர். அதன் பெயரைக் குறிக்கின்ற மூன்று முதல் எழுத்துக்கள் கொண்ட பலகையும் உடைந்து வீழ்ந்துள்ளது..


பாரிஸில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுவதற்கு ஒருசில மாதங்களே

இருக்கின்ற நிலையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றிருக்கிறது


நூறு ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த முலான் றூஷ் களியாட்ட விடுதிக் கட்டடம் கிரமமாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது. அதன் காற்றாடி திடீரென வீழ்ந்ததற்கு

நாச வேலை எதுவும் காரணமாக இ.ருக்காது என்று முலான் றூஷ் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இயன்ற விரைவில் அதனை மீண்டும் பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


பாரிஸின் இரவு வாழ்க்கையின் ஒர் முக்கிய அடையாளமாகிய முலான் றூஷ் 1889 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. 1915 இல் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தை அடுத்து ஒன்பது ஆண்டுகள் அது மூடப்பட்டிருந்தது.


ஆயிரக்கணக்கான உல்லாசப் பயணிகள் தினமும் முலான் றூஷ்

முன்பாக நின்று புகைப்படம் எடுப்பதற்கு முண்டியடிக்கின்றனர்.

அங்கு மாலையிலும் இரவிலுமாக இரண்டு கட்டங்களாகக் களியாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. இளம் பெண்கள் மேலாடையின்றி ஆடுகின்ற "கான் - கான் நடனம்" ("can-can dance") அவற்றில் பிரபலமானது. தினசரி 850 பேர் வரை அதிக தொகையை நுழைவுக் கட்டணமாகச் செலுத்தி அவற்றைப் பார்வையிடுகின்றனர்.

 

தாஸ்நியூஸ் - பாரிஸ்

25-04-2024






0 comments

Comentários


You can support my work

bottom of page