வீதிகளில் கொண்டாட்டம்
இடைக்கால அரசு அமையும்
ராணுவத் தளபதி அறிவிப்பு
பங்களாதேஷ் நாட்டில்
பரபரப்பான திருப்பம்!!
பாரிஸ், ஓகஸ்ட் 5
பங்களாதேஷில் கடந்த பல வாரங்களாக நீடித்த மாணவர் போராட்டங்களை அடுத்துப் பிரதமர் ஷேய்க் ஹசீனா பதவிவிலகிவிட்டார்.
டாக்காவில் உள்ள அவரது மாளிகை ஆர்ப்பாட்டக்காரர்களின் முற்றுகையின் கீழ் வந்ததை அடுத்து அவர் தனது சகோதரியுடன் இராணுவக் ஹெலிக்கொப்ரர் ஒன்றில் பாதுகாப்பாக நாட்டை விட்டு வெளியேறிச் சென்றுள்ளார் என அறிவிக்கப்படுகிறது. அவர் எங்கிருக்கிறார் என்பது தெரியவில்லை. பெரும்பாலும் அவர் இந்தியாவுக்குச் சென்றிருக்கலாம் என நம்பப்படுவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
படம் :2009 முதல் பதவியில் நீடித்து வந்த பிரதமர் ஷேய்க் ஹசீனா - வயது 76
ஊரடங்கு மற்றும் இணையச் சேவைத் தடை என்பனவற்றுக்கு மத்தியில் டாக்காவில் திரண்ட ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரதமரைப் பதவிவிலகுமாறு கேட்டு அவரது உத்தியோகபூர்வ அலுவலகம் அமைந்துள்ள மாளிகையை முற்றுகையிட்டதை அடுத்தே பிரதமர் பதவி விலகி விட்டார் என்ற செய்தி வந்திருக்கிறது. சுமார் 15 ஆண்டு காலத்துக்கு மேலாக அதிகாரத்தில் நீடித்து வந்த ஹசீனா பதவி விலகியிருப்பதை மக்கள் ஆடிப்பாடிக் கொண்டாடி வருகின்றனர் எனத் தலைநகர் டாக்காவில் இருந்து வருகின்ற செய்திகள் தெரிவிக்கின்றன.
பங்களாதேஷ் நாட்டின் சிற்பி என வர்ணிக்கப்பட்ட தலைவர் சேய்க் முஜிபுர் ரஹ்மான் (Sheikh Mujibur Rahman) அவர்களது புதல்வியாகிய
ஷேய்க் ஹசீனாவின் வீழ்ச்சி அந்த நாட்டின் அரசியல் எதிர்காலத்தைப்
பெரும் கேள்விக்குட்படுத்திவிட்டுள்ளது
பிரதமர் பதவி விலகிச் சென்றிருப்பதை அடுத்து நாட்டில் இடைக்கால அரசு
நிறுவப்படும் என்று இராணுவத் தளபதி அறிவித்திருக்கிறார். எனினும்
ஸ்திரமான அரசு ஒன்று அமைவதற்கு நீண்ட காலம் செல்லலாம் என அவதானிகள் கூறுகின்றனர்.
ஞாயிற்றுக்கிழமை பொலீஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே நடந்த மோதல்களில் 90 பேர் வரை உயிரிழந்திருந்தனர். கடந்த ஜூலையில் அங்கு மாணவர் கிளர்ச்சி ஆரம்பமானது முதல் வன்செயல்களில்
கொல்லப்பட்டவர்களது எண்ணிக்கை மொத்தமாக முந்நூறைக் கடந்துள்ளது.
தென்னாசிய நாடாகிய பங்களாதேஷ் 1971 இல் புதிய நாடாக உருவானதன் பிறகு அங்கு இடம்பெற்ற மிக மோசமான மக்கள் கிளர்ச்சிகளில் இதுவும் ஒன்று . சிவில் நிர்வாக சேவைகளில் வேலை வழங்குவதில் நடைமுறையில் இருந்துவந்த கோட்டா முறையை ரத்துச் செய்யுமாறு கேட்டு மாணவர்களால் ஆரம்பிக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்களே படிப்படியாக நாடெங்கும் பரந்து விரிந்து பிரதமரைப் பதவி விலகுமாறு கேட்கின்ற பெரும் மக்கள் போராட்டமாக வெடித்தது. அரச பதவிகளில் அரைவாசி ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்குக் கிடைப்பதை இந்தக் கோட்டா முறை அனுமதித்திருந்தது.
நாட்டில் சமூக ஊடகங்களைக் கட்டுப்படுத்தும் விதமாக பிரதமர் ஹசீனா கொண்டுவந்து டிஜிட்டல் பாதுகாப்புச் சட்டமும்(Digital Security Act)
அவருக்குக் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தி இருந்தது.
மேலதிக விவரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன..
தாஸ்நியூஸ் - பாரிஸ்
05-08-2024
Comments