top of page
Post: Blog2_Post
Writer's pictureKumarathasan Karthigesu

மொஸ்கோ தாக்குதலுக்கு "இஸ்லாமிய தேசம்" ஆயுதக் குழு உரிமை! தப்பிச் சென்ற ஆயுததாரிகளைத் தேடி வேட்டை!

இரு வாரங்களுக்கு முன்

அமெரிக்கா எச்சரித்தது


உயிரிழப்பு அறுபதாக உயர்வு

மக்ரோன் உட்பட வெளிநாட்டு

தலைவர்கள் பலர் கண்டனம்


பாரிஸ், மார்ச் 23


மொஸ்கோ அருகே மூடிய இன்னிசை அரங்கம் ஒன்றினுள் நடத்தப்பட்ட பெரும் தாக்குதலுக்கு ஐ.எஸ் என்கின்ற"இஸ்லாமிய தேசம்" (Daesh) ஆயுதக் குழு உரிமைகோரி அறிக்கை வெளியிட்டிருக்கிறது. இது குறித்து ரஷ்யா கருத்து எதனையும் உடனே தெரிவிக்கவில்லை. அதேசமயம் ஐஎஸ் இயக்கத்தின் உப குழு ஒன்றே இத்தாக்குதலுக்குப் பொறுப்பு என்பதை

அமெரிக்கப் புலனாய்வு சேவைகள் உறுதிப்படுத்தி உள்ளன.

இந்தக் கொடூர தாக்குதலில் உயிரிழந்தவர்களது எண்ணிக்கை அறுபதைத் தாண்டி உயர்ந்துள்ளது. அவர்களில் மூவர் குழந்தைகள் என்றும் அதிகமானோர் கட்டிளம் பருவத்தினர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.


அரங்கின் உள்ளே அலறல்களும் வேட்டொலிகளும் வெடிப்புச் சத்தங்களும் கேட்கின்ற வீடியோக் காட்சிகள் சமூக வலை ஊடகங்களில் வெளியாகியுள்ளன.


பயங்கரமான ஆயுதங்களுடன் தாக்குதலை நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ள தஜிகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த தாக்குதலாளிகள் ஐவரை ரஷ்யப் படைகள் தேடி வருகின்றன. அவர்கள் தப்பிச் சென்றதாகக் கூறப்படுகின்ற கார் ஒன்றின் படம் வெளியாகியுள்ளது. எங்காவது புதிதாகத் தாக்குதல்கள் அல்லது மோதல்கள் இடம்பெறலாம் என அஞ்சப்படுகிறது.

படம் :தாக்குதலாளிகளை தப்பிச் சென்ற கார் - - - -


இதேவேளை - மொஸ்கோவில் இசை நிகழ்ச்சிகள் உட்பட பொதுமக்கள் கூடும் இடங்களில் - - தீவிரவாதத் தாக்குதல் இடம்பெறப்போகின்றது என்ற முன்னெச்சரிக்கையை இரண்டு வாரங்களுக்கு முன்பு அமெரிக்கா அதன் பிரஜைகளுக்கு விடுத்திருந்தது.

இதனை நினைவுபடுத்தியுள்ள மொஸ்கோவில் உள்ள அமெரிக்கத் தூதரகம் தாக்குதல் நடந்த பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று அமெரிக்கர்களைக் கேட்டிருக்கிறது.


பிரான்ஸின் அதிபர் எமானுவல் மக்ரோன் விடுத்துள்ள அறிக்கையில்

இந்தப் பயங்கரவாதத் தாக்குதலுக்குத் தனது கடும் கண்டனத்தை வெளியிட்டிருக்கிறார். ரஷ்ய மக்களுக்கு அனுதாபம் தெரிவித்துள்ள அவர் மொஸ்கோ நிலைவரத்தைத் தொடர்ந்து உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் கூறியிருக்கிறார்.


தீவிர வலது சாரித் தலைவி மரின் லூ பென் அம்மையார் உட்பட மொஸ்கோ

சம்பவத்துக்குக் கண்டனம் வெளியிட்டுள்ள பிரான்ஸின் அரசியல்

தலைவர்கள் சிலர், தலைநகர் பாரிஸில் 2015 ஆம் ஆண்டு பற்றகிளான் (Bataclan) இசை அரங்கின் உள்ளே இஸ்லாமியத் தீவிரவாதிகள் புரிந்த வெறியாட்டத்துடன் ஒப்பிட்டு நினைவுகூர்ந்து கருத்துக்களை வெளியிட்டிருக்கின்றனர்.


சீனாவும் இந்தியாவும் ரஷ்யாவுக்கு ஆதரவு தெரிவிக்கின்ற செய்திகளை வெளியிட்டுள்ளன.


 

தாஸ்நியூஸ் - பாரிஸ்

23-03-2024



0 comments

Comments


You can support my work

bottom of page