top of page
Post: Blog2_Post
Writer's pictureKumarathasan Karthigesu

மொஸ்கோவை அதிரவைத்த பெரும் தாக்குதல்! இன்னிசை அரங்கில் ஆயுததாரிகள் சூடு! அரங்கு தீப்பற்றியது!!

நாற்பதுக்கு மேல் உயிரிழப்பு

பெருமெடுப்பில் மீட்புப் பணி


பயங்கரவாதக் கொடூரம்

கிரெம்ளினில் அறிவிப்பு


தொடர்பு இல்லை என்று

உக்ரைன் அரசு மறுப்பு


பாரிஸ், மார்ச் 22


ரஷ்யத் தலைநகர் மொஸ்கோவுக்கு அருகே நடத்தப்பட்டிருக்கின்ற பெரும் ஆயுதத் தாக்குதல் ஒன்றில் குறைந்தது நாற்பது பேர்வரை கொல்லப்பட்டிருக்கின்றனர். நூற்றுக்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

இன்னிசை அரங்கு ஒன்று தீப்பற்றி எரிந்து இடிந்து வீழ்ந்துள்ளது.


மொஸ்கோவுக்கு வடமேற்கே Krasnogorsk என்ற இடத்தில் அமைந்துள்ள இன்னிசை அரங்கம் ஒன்றினுள் ஆயுதங்களுடன் நுழைந்த சிலர் அங்கு சகட்டுமேனிக்குத் துப்பாக்கிப் பிரயோகம் செய்தும் அரங்குக்குத் தீ மூட்டியும் பெரும் அழிவை ஏற்படுத்தியுள்ளனர்.


Crocus City Hall மண்டபத்தில் ரஷ்ய ரொக் பான்ட் பிக்னிக் இசைக் குழுவின்(Russian rock band Piknik) இன்னிசை நிகழ்ச்சியை ரசிப்பதற்காகப் பல நூற்றுக் கணக்கானவர்கள் திரண்டிருந்த வேளையிலேயே இடைநடுவில் எதிர்பாராத விதமாக ஆயுத பாணிகள்

உள்ளே நுழைந்து தாக்கியுள்ளனர்.

உருமறைப்பு ஆடைகள் அணிந்த நிலையில் குறைந்தது ஐந்து பேர் முதலில் மண்டபத்தின் காவலர்கள் மீதுதாக்குதல் நடத்திவிட்டு உள்ளே புகுந்து சுட்டுள்ளனர் என்று இன்ரபக்ஸ் (Interfax agency) செய்தி நிறுவனம் தெரிவித்தது. அரங்கின் உள்ளே துப்பாக்கிச் சூடுகள் சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் வரை சரமாரியாகத் தொடர்ந்துள்ளன.


தாக்குதல் தொடங்கிய சிறிது நேரத்தில்

அரங்கில் பெரும் தீ மூண்டு எரிந்தது. தீப் பிளம்புகளும் கரும் புகையும் வானில் எழுவதைத் தொலை தூரத்தில் இருந்தும் அவதானிக்க முடிந்தது. தீப்பற்றி எரிந்த அரங்கின் கூரைப் பகுதி பின்னர் இடிந்து வீழ்ந்தது என்றும் கூறப்படுகிறது. அதன் காட்சிகள் உலகெங்கும் சமூக வலைத் தளங்களில் வைரலாகப் பரவின.

தலைநகரையும் முழு நாட்டையும் அதிரவைத்துள்ள இன்றைய தாக்குதலைக் "கொடூரமானதொரு பயங்கரவாதத் தாக்குதல்" என்று கிரெம்ளின் மாளிகை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அதிபர் புடினின் தேர்தல் வெற்றிக் கொண்டாட்டங்கள் ஓய்வதற்கு முன்பாக நடந்துள்ள இன்றைய சம்பவம் ரஷ்ய அரசுத் தலைமைக்கு பஅ பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது என மொஸ்கோ செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தச் செய்தியை எழுதும் வரையான தகவல்களின் படி அரங்கில் இருந்து குறைந்தது 40 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. படுகாயங்களுக்கு இலக்காகிய நூற்றுக்கு மேற்பட்டவர்கள் அம்புலன்ஸ்கள் மூலம் வெளியேற்றப்பட்டுள்ளனர்.


மொஸ்கோ தாக்குதலுடன் நிச்சயமாக எந்த விதத்திலும் தமக்குத் தொடர்பில்லை என்று உக்ரைன் அரசுத் தலைமை உடனடியாகத் தெரிவித்துள்ளது.


பிரான்ஸின் வெளிவிவகார அமைச்சு விடுத்த ஒரு பதிவில், அப்பாவி ரஷ்யர்கள் மீது இந்தக் கொடூரச் செயலைப் புரிந்தவர்கள் யார் என்பது வெளிச்சத்துக்குக் கொண்டுவரப்பட

வேண்டும் என்று கேட்டுள்ளது.


தாக்குதலில் உக்ரைனுக்குத் தொடர்பு இருப்பதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை என்று அமெரிக்கா

தெரிவித்துள்ளது.


ரஷ்யாவில் நடந்துள்ள பயங்கரவாதத் தாக்குதல் திகைப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் பேச்சாளர் ஒருவர் கூறியிருக்கிறார்.


⚫மேலதிக விவரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

 

தாஸ்நியூஸ் - பாரிஸ்

22-03-2024



0 comments

Comments


You can support my work

bottom of page