top of page
Post: Blog2_Post
Writer's pictureKumarathasan Karthigesu

மக்ரோன் அணி துடைத்தழிக்கப்பட்டு விட்டது என்கிறார் மரின் லூ பென்

அடுத்த சுற்றில் அறுதிப்

பெரும்பான்மை கேட்கிறார்


இரண்டாவது சுற்றுக்கான

வியூகங்களில் எதிரணிகள்


பாரிஸ், ஜூன் 30


முதற்சுற்று முடிவுகள் அறிவிக்கப்பட்ட சிறிது நேரத்தில் உரையாற்றிய மரின் லூ பென் அம்மையார், நாட்டில் ஜனநாயகம் வாய் திறந்துபேசியுள்ளது

என்று தெரிவித்திருக்கிறார்.


நாட்டின் வட பகுதியில் தனது Henin-Beaumont தொகுதியில் ஆதரவாளர்களின் உற்சாக ஆரவாரங்களுக்கு மத்தியில் அவர் இன்று முன்னிரவு உரையாற்றினார்.


நாட்டின் ஜனநாயகம் உரக்கப் பேசியுள்ளது. பிரெஞ்சு மக்கள் நமது RN

கட்சியை உச்சத்தில் உயர்த்தி வைத்துள்ளனர். மக்ரோன் முகாம் நடைமுறையில் துடைத்தழிக்கப்பட்டு விட்டது. கடந்த ஏழு ஆண்டுகால ஆட்சியால் சலிப்பும் விரக்தியும் அடைந்த மக்கள் புதிய அத்தியாயம் ஒன்றைப் புரட்டியுள்ளனர்.


இன்னும் ஒரு வாரத்தில் ஜோர்டான் பார்டெல்லா பிரதமராக நியமிக்கப்படுவதற்கு எமக்கு அறுதிப் பெரும்பான்மை தேவை. அதனை வழங்குங்கள்..


-இவ்வாறு மரின் லூ பென் அழைப்பு விடுத்துள்ளார் .


பாரிஸில் அமைந்துள்ள Rassemblement national கட்சியின் தலைமையகம்

மகிழ்ச்சி ஆரவாரங்களில் மூழ்கிக் காணப்படுகிறது.


577 ஆசனங்கள் கொண்ட பிரெஞ்சு நாடாளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மை பெறுவதற்கு 289 இடங்களைக் கைப்பற்ற வேண்டும்.

தீவிர தேசியவாத Rassemblement national கட்சி 33 சதவீத வாக்குகளுடன் முதலிடம் பெற்றுள்ளது. முதற்சுற்றில் பெற்ற வாக்குகளின் படி 180 வரையான நாடாளுமன்ற ஆசனங்களை அது கைப்பற்ற வாய்ப்புள்ளது. இந்த நிலையில் இரண்டாவது சுற்று வியூகங்கள் எவ்வாறு அமையப்போகின்றன என்ற

கேள்வி எழுந்துள்ளது.


தீவிர வலதுசாரிகள் பெரும்பான்மை பெறுவதைத் தடுப்பது என்ற ஒரே நோக்கத்தையே இரண்டாம் இடத்தில் உள்ள இடதுசாரி முன்னணியும் (Nouveau Front populaire) மூன்றாம் நிலையில் இருக்கின்ற ஆளும் கட்சி அணியும் கொண்டுள்ளன.


அடுத்த ஞாயிறன்று நடைபெறவுள்ள இரண்டாவது சுற்று வாக்களிப்பில்

தீவிர வலதுசாரிகளது வெற்றியைத் தடுக்க அணி திரளுமாறு மையவாத ஆளுங்கட்சியின் அதிபர் மக்ரோன் வாக்காளர்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். வலதுசாரிப் பழமைவாத ரிப்பப்ளிக்கன் கட்சியின் சர்சைக்குரிய தலைவர் எரிக் சியோட்டி

இரண்டாவது சுற்றில் ஜோர்டான பார்டெல்லா அணிக்கு வாக்களிக்குமாறு தனது ஆதரவாளர்களைக் கேட்டிருக்கிறார்.


பிந்திய அரசியல் வியூகங்கள் தொடர்பான மேலும் விவரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.


 

தாஸ்நியூஸ் - பாரிஸ்

30-06-2024

0 comments

Comments


You can support my work

bottom of page