top of page
Post: Blog2_Post
Writer's pictureKumarathasan Karthigesu

மங்கோலியாவில் கால் பதிக்கும் முதல் பிரெஞ்சு அதிபர்!

Updated: May 22, 2023


புவி மூலோபாயத்தில்

முக்கியத்துவம் பெறும்

புதியதோர் ஆசிய நாடு


மத்திய ஆசியாவில் தரையால் சூழப்பட்ட, குறைந்த சனத் தொகையை யும் பரந்த புல்வெளிகளையும் சுரங்க வளங்களையும் கொண்ட ஐனநாயக நாடு மங்கோலியா.(Mongolia) ஒரு புறம் ரஷ்யா மறுபுறம் சீனா. இரண்டு பெரும் வல்லரசுகளுடனும் நீண்ட தரைத் தொடர்பு எல்லைகளைக் கொண்ட பரந்து விரிந்த தேசம். ஆனாலும் அங்கு ஒருவித தாராளவாத பல கட்சி ஆட்சி முறை நீடித்து வருகிறது.


இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பம் வரை சீனாவின் ஆதிக்கத்தின் பிடியிலும் பின்னர் சோவியத் ஒன்றியத்தின் கீழும் இருந்து வந்த மங்கோலியா, 1990 ஆம் ஆண்டின் பிறகு தனித்த சுதந்திர தேசமாகியது.

வடக்கே ரஷ்யாவுடன் 3ஆயிரத்து 500 கிலோ மீற்றர்கள் நீள எல்லையையும்

தெற்கே சீனாவுடன் 4ஆயிரம் கிலோ மீற்றர்கள் நீளமான எல்லையையும் கொண்டது மங்கோலியா. அது தனது பாதுகாப்புக்கு மொஸ்கோவையும் 70 வீதமான ஏற்றுமதிகளுக்குப் பீஜிங்கையும் நம்பியிருக்கின்ற போதிலும் "இரண்டு நெருப்புகளுக்கு "நடுவே இருந்து கொண்டு தனது இறைமையையும் மேற்கு நாடுகளுடன் உறவுகளையும் பேணிவருகின்ற "கெட்டித்தனம்" மிக்க நாடு என்று அதனை அவதானிகள்

வர்ணிப்பதுண்டு.


சமீபகாலமாக மேற்கின் செல்வாக்கு அங்கு அதிகரித்து வருகிறது. அமெரிக்கா ஏற்கனவே அங்கு காலூன்றி விட்டது. உக்ரைன் மற்றும் தைவான் நெருக்கடிகளுக்குப் பின்னர்

மங்கோலியாவின் பூகோள அமைவிடம்

சர்வதேச சக்திகளது முழுக் கவனத்தில் இருந்துவருகிறது.

பாரிஸும் மங்கோலியாவுடன் இரு தரப்பு உறவுகளைப் பலப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது.

ஜி 7 மாநாட்டை முடித்துக் கொண்டு ஜப்பானில் இருந்து திரும்பும் வழியில்

அதிபர் மக்ரோன் இன்று ஞாயிற்றுக்கிழமை மங்கோலியாவில்

சில மணி நேரத்தைச் செலவிட்டிருக்கிறார்.

பகிரங்கப்படுத்தப்படாத இந்தக் குறுகிய விஜயத்தின் போது அவர் தலைநகர் உலான்பாட்டாரில் (Ulaanbaatar) சிறிது நேரம் தங்கி நின்று

மங்கோலியாவின் அதிபர் உக்னா ஹுரல்சுக் (Ukhnaa Khurelsukh) உட்பட அரச பிரதிநிதிகளோடு இரவு விருந்தில் பங்கேற்றுப் பேச்சு நடத்தியிருக்கிறார்.


தலைநகரில் சுக்பாட்டார் சதுக்கத்தில் (Sukhbaatar Square) மங்கோலியாவின்

பாரம்பரிய சிவப்பு - நீலம் - மஞ்சள் வர்ணச் சீருடை அணிந்த

காவலர்கள் அளித்த அணிவகுப்பு மரியாதையை மக்ரோன் ஏற்றுக் கொண்டார்.

மங்கோலியாவுடன் இரு தரப்பு உறவு பல தசாப்தங்களாக நீடித்து வந்த போதிலும் பிரான்ஸின் அரசுத் தலைவர் ஒருவர் அந்த மண்ணில் காலடி பதிப்பது இதுவே முதல் தடவை ஆகும்.அதன் காரணமாக மட்டுமன்றி

புவிசார் அரசியலில் மிக வேகமாக நிகழ்ந்துகொண்டிருக்கின்ற புவி மூலோபாய நகர்வுகள் காரணமாகவும் மக்ரோனின் இந்தச் சில மணி நேர மங்கோலிய விஜயம் அதிக முக்கியத்துவம் கொடுத்துப் பார்க்கப்படுகிறது.


பிரான்ஸின் அணு சக்திப் பெரு நிறுவனமாகிய ஓரனோ (Orano) மங்கோலியாவில் யுரேனியம் அகழ்வில் ஈடுபட எதிர்பார்த்துள்ளது. அதற்கு அந்த நாட்டின் நீடித்த ஒத்துழைப்பைப் பெறுவதும் மக்ரோனின் இந்த விஜயத்தின் நோக்கமாகும். அதேசமயம் சக்தித் தேவைக்கு 90 சதவீதம் நிலக்கரியைப்

பயன்படுத்துகின்ற அந்த நாட்டின் பொருளாதாரத்தைக் காபன் நீக்கிய

(decarbonize) பொருளாதாரமாக மாற்றுகின்ற திட்டங்களில் உதவுவதும் பிரான்ஸின் பிரதான நோக்கம் என்று தெரிவிக்கப்படுகிறது.

 

தாஸ்நியூஸ் - பாரிஸ்

21-05-2023

0 comments

Kommentare


You can support my work

bottom of page