top of page
Post: Blog2_Post
Writer's pictureKumarathasan Karthigesu

மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் இஸ்ரேல் பிரதமரைக் கைதுசெய்யும் ஆணை கோரியது சர்வதேச நீதிமன்று

நத்தன்யாகுவுக்கு

நெருக்கடி வரலாம்


பாரிஸ், மே 20


சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் வழக்கறிஞர், இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நத்தன்யாகு மற்றும் ஹமாஸின் உயர்மட்டத் தலைவர்களைக் கைதுசெய்வதற்கு

ஆணை கோரியுள்ளார்.


போர்க் குற்றங்கள், மனித குலத்துக்கு எதிரான குற்றங்களின் சந்தேகத்தின் பேரிலேயே இவர்களைக் கைதுசெய்வதற்கான ஆணையை அவர் கோரியிருக்கிறார்.


பிரதமர் நத்தன்யாகு மற்றும் இஸ்ரேலியப் பாதுகாப்பு அமைச்சர்

யோவ் கேலன்ட் ஆகியோர் மீது திட்டமிட்ட கொலைகள், பட்டினி போடுதல், அழிவுகளை ஏற்படுத்துதல் போன்ற குற்றங்களின் பேரில் கைது ஆணை கோருவதாக வழக்கறிஞர்

கரீம் கான்(prosecutor of the International Criminal Court) தெரிவித்திருக்கிறார்.


பாலஸ்தீனிய சிவிலியன்கள் மீது பரந்துபட்ட அளவில் அரச கொள்கையின் ஒரு பகுதியாகத் திட்டமிடப்பட்ட தாக்குதல்களை நடத்தியதன் அடிப்படையில் இந்தக் குற்றச் சாட்டுகளை முன்வைக்கிறோம். அவை இன்னமும் தொடர்கின்றன என்றும் அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.


இந்த ஆணை ஏற்றுக்கொள்ளப்பட்டால்

இஸ்ரேலியப் பிரதமரின் வெளிநாட்டுப் பயணங்கள் நெருக்கடிக்குள்ளாகலாம். குற்றவியல் நீதிமன்றத்தின் 124 உறுப்பு நாடுகள் அவரைக் கைதுசெய்யவேண்டிய அவசியம் எழலாம். ஆனால் இந்த நீதிமன்றத்தின் நியாயாதிக்கத்துக்கு உட்பட்ட ஓர் உறுப்பு நாடு அல்லாத இஸ்ரேல் குற்றவியல் நீதிமன்றத்தின் தீர்ப்புகளுக்குத் தலைவணங்கப் போவதில்லை என்று ஏற்கனவே கூறியுள்ளது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு எதிராகவும் இதுபோன்ற போர்குற்றக் கைது ஆணை விடுக்கப்பட்டிருப்பது தெரிந்ததே.


அதேசமயம், ஹமாஸ் இயக்கத்தின்

காஸாவுக்கான தலைவர் யாஹ்யா சின்வார், இயக்கத்தின் அரசியல் தலைவராகிய இஸ்மாயில் ஹனியே

ஆகியோர் மீது, அழிவுகள், பாலியல் வல்லுறவு மற்றும் பாலியல் ரீதியான குற்றங்கள், பயணக் கைதிகளைப் போரில் ஒரு பகுதியாகப் பயன்படுத்தியமை போன்ற குற்றங்களின் பேரில் அவர்களைக் கைது செய்யுமாறும் சர்வதேச குற்றவியல் நீதிமன்ற வழக்கறிஞரால் ஆணைகோரப்பட்டிருக்கிறது.

 

தாஸ்நியூஸ் - பாரிஸ்

20 - 05-2024




0 comments

Comments


You can support my work

bottom of page