top of page
Post: Blog2_Post

மன்னர் சார்ள்ஸுக்கு புற்றுநோய்! அரண்மனை அறிவிப்பு

சிகிச்சைகள் ஆரம்பம்

பாரிஸ், பெப்ரவரி, 5


இங்கிலாந்து மன்னர் சார்ள்ஸுக்குப் புற்றுநோய் ஏற்பட்டுள்ளது. அதற்கான சிகிச்சைகள் தொடங்கியுள்ளன என்று பக்கிங்காம் அரண்மனை இன்று மாலை அறிவித்திருக்கிறது.


மன்னர் சில தினங்களுக்கு முன்னர் புரோஸ்டேட் சுரப்பி வீக்கத்துக்காகச் (enlarged prostate) சிகிச்சை பெற்ற சமயத்திலேயே அவருக்குப் புற்றுநோய்

ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும் அரண்மனை கூறியுள்ளது. ஆயினும் அவருக்கு எவ்வகையான புற்றுநோய் ஏற்பட்டுள்ளது என்பது பற்றிய விவரம் எதுவும் வெளியிடப்படவில்லை.


75 வயதுடைய மன்னர் பொதுக் கடமைகளை ஒத்திவைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்.ஆயினும் அரச கடமைகளை அவர் மேற்கொள்வார் என்று அறிவிக்கப்படுகிறது.


மன்னருக்குப் புற்று நோய் புரோஸ்டேட் சுரப்பியில் ஏற்படவில்லை என்று அரண்மனை விடுத்த அறிக்கை தெரிவித்துள்ளது. சுரப்பி வீக்கத்தை அடுத்துச் சிகிச்சைக்காக அவர் ஒரு வார காலம் லண்டன் தனியார் கிளினிக் மருத்துவமனையில் (London Clinic private hospital) தங்கிச் சிகிச்சை பெற்றிருந்தார். அந்தச் சிகிச்சைகளின் போதே "பிறிதொரு கவலைக்குரிய

புற்றுநோயின் தோற்றம்" அடையாளம் கண்டறியப்பட்டது என்று அரண்மனை அறிக்கை தெரிவித்தது.


மன்னருக்குப் புற்றுநோய் பாதித்த அதிர்ச்சிச் செய்தி இங்கிலாந்து எங்கும் மக்களது கவனத்தை ஈர்த்துள்ளது. உலக செய்தி நிறுவனங்கள் அதனை விசேட நேரலைச் செய்தியாக வெளியிட்டுவருகின்றன.


நாட்டு மக்கள் அனைவரும் மன்னர் விரைவாக நலம் பெற வேண்டி நிற்கின்றனர் என்று பிரதமர் ரிஷி சுனாக் தனது செய்தி ஒன்றில் தெரிவித்திருக்கிறார். அரசியல் தலைவர்கள் பலரும் மன்னர் குணமடைய வேண்டும் என்று கேட்டு செய்திகளை வெளியிட்டுள்ளனர்.


"நம்பமுடியாத துயரச் செய்தி" இது என்று வோஷிங்டனில் அமெரிக்க ராஜதந்திரி ஒருவர் கவலை வெளியிட்டிருக்கிறார்.


அமெரிக்காவில் தங்கியுள்ள இளவரசர் ஹரி தந்தையாரான மன்னருடன் தொலைபேசியில் பேசியபிறகு அவரைச் சந்திப்பதற்காக இங்கிலாந்து திரும்புகிறார் என்று செய்திகள் தெரிவித்தன.


மன்னர் சார்ள்ஸ் சிகிச்சை பெற்ற அதே லண்டன் மருத்துவமனையிலேயே வேல்ஸ் இளவரசி கேற்றுக்கும் அடிவயிற்றில் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருந்தது. சிகிச்சையின் பின்னர் இளவரசி அரண்மனை திரும்பியுள்ளார்.

 

தாஸ்நியூஸ் - பாரிஸ்

05-02-2024

0 comments

Comments


You can support my work

bottom of page