ஹரியானாவிலிருந்து
பாரிஸ் வரை....
———செய்திக் கட்டுரை
வினேஷ் போகத்(Vinesh bhogat). இன்றைய உலக செய்திகளின் நாயகி.வெறும் நூறே நூறு கிராம் கூடுதல் உடல் எடையினால் ஒலிம்பிக் இறுதிப் போட்டிகளில் இருந்து தடை செய்யப்பட்டுள்ளார்.
இவர்,நேற்று( 07/08/2024) ஒரே நாளில் அடுத்தடுத்து 8 மணித்தியாலங்களுள் நடைபெற்ற மூன்று தகுதி நிலை போட்டிகளிலும் வென்று, தங்கப் பதக்கத்துக்கான இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார்; 50 kg பெண்களுக்கான மல்யுத்தப் பிரிவில் இந்தியாவின் சார்பில் பங்கு பற்றியவர் இந்த வினேஷ்.
தனது,காலிறுதிப் போட்டியில், நான்கு முறை உலக மல்யுத்த சம்பியனும் தொடர் வெற்றிகளால் 82 தங்கப் பதக்கங்களை வென்றவருமான யப்பானின் Yui Susaki ஐ வென்று அனைவரையும் அதிர வைத்தார்.
போட்டி விதிகளின் படி போட்டியாளர்களின் எடை போட்டிக்கு முன்பும் பின்பும் குறிப்பிட்ட நேர இடைவெளியில் அளவிடப்படுகிறது.
நேற்றைய போட்டியில் பங்கேற்கும் போது கட்டுப்பாட்டுக்குள் இருந்த எடை, இன்று அளக்கும் போது 100 கிராமளவில் அதிகமாகியிருந்தது.
அதனையடுத்து அவர் போட்டி விதிகளுக்கமைய இறுதிப் போட்டியில் பங்கேற்பதற்கு தடை விதிக்கப்பட்டது; அத்துடன் அவரது நேற்றைய வெற்றிகளும் இல்லாமல் செய்யப்படுகின்றன.
இதன் மூலம் இந்தப் போட்டியின் வெற்றியாளர் வரிசையில் இறுதி இடமே வினேஷ் போகடாக்கு அளிக்கப்படும்.
பல்வேறு வித அடக்குமுறைகளுக்கும் பெயர் போன இந்திய ஹரியானா மாநிலத்தில் பிறந்த வினேஷ், எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் , குடும்ப பின்னணி மற்றும் அவர்களின் வலுவான ஆதரவு காரணமாக மல்யுத்த போட்டியாளராக உருவானார்.
அவரது தந்தை, சிறிய தந்தை மற்றும் சகோதரர்கள் சிறந்த தேசிய ,சர்வதேச மல்யுத்த வீரர்களாகவும் பயிற்றுனர்களாகவும் உள்ளனர்.
இந்தியா,ஆசியா மற்றும் உலக அளவிலும் சிறந்த வெற்றிகளைப் பெற்று இந்தியாவின் மகளிர் மல்யுத்த வீராங்கனைகளின் முகமாகவும் விளங்கியவர் வினேஷ்.
இந்த நிலையில் கடந்த 2023 ஆம் ஆண்டு ஜனவரி மற்றும் ஏப்ரல் மாதங்களில் இந்திய மல்யுத்த சங்கத்திற்கு (WFI)எதிரான ஆர்ப்பாட்டங்கள் புதுடில்லியில் நடந்தன.
பாரிஸ்:மருத்துவமனையில் வினேஷ்
விளையாட்டு வீராங்கனைகள் மீதான பாலியல் தொல்லைகள் மற்றும் அத்துமீறல்கள் தொடர்பாக இந்திய மல்யுத்த சங்கத் தலைவரும், ஆளும் BJP யின் கேசர்கஞ் பிரதேச முன்னாள் எம்.பியுமான பிரிஜ் புஷான் ஷரன் சிங் (Birij Bhushan Sharan Singh) ற்கு எதிராகவே இந்த ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.
இவர் பாபர் மசூதி இடிப்பு, மற்றும் தாவூத் இப்ராஹிம் வழக்கு ஆகியவற்றில் தடா சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு போதிய ஆதாரங்கள் இல்லை என்ற அடிப்படையில் விடுவிக்கப்பட்டவர்.
மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டம் நாடு முழுவதும், இந்திய மல்யுத்த சங்கத்திற்கு எதிராகவும் ஆளும் மோடி அரசுக்கு எதிராகவும் பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தியது.
முதலில் இந்த பிரச்சனையை கண்டும் காணாமலும் இருந்த அரசு , போராட்டத்தின் வீரியம் காரணமாக பிரிஜ் புஜனை இந்திய மல்யுத்த சங்கத்தின் தலைமைப் பதவியில் இருந்து விலக்கி பிறிதொருவரை பதவியில் இருத்தியது.அவர் வேறு யாருமல்ல;பழைய தலைவரின் நெருங்கிய உறவினரே.
உரிய நீதி கிட்டாததை அடுத்து ,இந்த போராட்டங்களில் எல்லாம் முதன்மை போராளியாக இருந்த வினேஷ் தன் திறமையால் பெற்ற வெற்றிக்காக அரசினால் வழங்கப்பட்ட விளையாட்டுத்துறைக்கான சிறந்த விருதுகளான மேஜர் டயான் சந் கேல் ரத்னா விருது மற்றும் அர்ஜுனா விருது ஆகியவற்றை அரசிடமே மீண்டும் ஒப்படைத்து விட்டார்.
இந்த விருதுகளை மீண்டும் திருப்பி தருவதற்காக சென்ற வேளை காவல்துறையால் வழிமறிக்கப்பட்ட அவர் தனது விருதுகளை வீதியோரத்திலேயே விட்டுச் சென்று,அதைப்பற்றி தனது வலைத்தளம் மூலம் பிரதமர் நரேந்திர மோடிக்கு அறியத் தந்தார்.
"ஒவ்வொரு பெண்ணும் மதிக்கப்பட வேண்டியவள். சுயமரியாதையுடன் வாழும் வழியில் இந்த விருதுகள் சுமையாக இருப்பதை விரும்பவில்லை" என்று மோடிக்கான தனது கடிதத்தில் அவர் தெரிவித்திருந்தார்.
இதற்கு பின் தனது பயிற்சி மற்றும் போட்டிகளில் பங்கேற்பது தொடர்பாக பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் இடர்களை வினேஷ் சந்திக்க நேர்ந்தது.அது தவிர அதிக பயிற்சி காரணமாக ஏற்படும் தசை நார் நெரிவு பிரச்சினை காரணமாக சத்திர சிகிச்சை செய்ய வேண்டிய நிலையும் ஏற்பட்டது..
உடல் நிலை மட்டுமல்லாது உளவியல் நெருக்கடிகளையும் இவர் எதிர் கொண்டார்.
அத்தனையையும் தாண்டியும் சாதிக்க துடித்த இந்த வீராங்கனை வழமையான அவரது 53 kg பிரிவில் விளையாட அனுமதிக்கப்படாது, இந்தப் பிரிவில் இந்தியா சார்பில் வேறொரு வீராங்கனை விளையாட, கோட்டா அடிப்படையில் 50 kg பிரிவில் வினேஷ் விளையாடினார்.
29 வயதான வினேஷின் எடை 55-56 kg.
53 kg எடைப் பிரிவிற்கு விளையாடுவதற்கே, 2-3 kg எடையை போட்டி நேரங்களில் குறைத்தே வந்துள்ளார்.
இந்த முறை 50 kg பிரிவில் கலந்து கொள்வதற்காக சுமார் 5kg எடை குறைக்க வேண்டி இருந்தது.
நேற்று போட்டிகளுக்கு நுழையும் போது சரியாக இருந்த எடை, போட்டி முடிந்த பின்னர் போட்டிக்குரிய எடையை விட இரண்டரை கிலோகிராம் அளவில் கூடுதலாகவே இருந்துள்ளது.
அதன் பின்னர் இன்று எடை அளக்கும் நேரத்துக்கு முன்னராக தனது எடையை குறைப்பதற்காக, சைக்கிள் ஓடுதல்,கயிறடித்தல் போன்றவற்றையும் வியர்வை வெளியேறும் இறுக்க ஆடையை அணிந்தபடியும் சஉனா (sauna) எனும் உடல் நீரை வெளியேற்றும் கொதி ஆவி முறையையும் செய்திருக்கிறார்.அது மட்டுமன்றி தனது தலை முடியையும் கத்தரித்துக் கொண்டுள்ளார்...
இவை எல்லாம் குறைக்க முடியாமல் போன ஒரு 100g எடையால் பயனற்றுப் போனது.
இதை எழுதும் போதுள்ள தகவல்களின் படி நிறை குறைப்புக்காக மேற்கொண்ட நடவடிக்கைகள் வினேஷின் உடலில் நீரிழப்பை ஏற்படுத்தி (dehydrated) மயங்கிய நிலையில் பாரிஸில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள்.
அதில் முக்கியமானது இது சதியாக இருக்கலாமோ என்பது தான்.
ஆனால் இந்த சந்தேகம் எழுந்துள்ளது எதிர் போட்டியாளர் மீதல்ல; வழமைக்கு மாறாக,அவரது தாய் நாட்டின் ஆட்சியாளர்கள் மீது.
சந்தேகங்கள் எல்லாம் உண்மையாக இருக்க வேண்டியதில்லை.ஆனால் அரசியலும் ஊழலும் எவ்வாறு உலகத் தரமான விளையாட்டு ஒன்றில் வீரரின் சொந்த நாட்டின் மீதே சந்தேகத்தையும் நம்பிக்கையீனத்தையும் ஏற்படுத்தும் என்பதற்கு இதை விட ஏது சான்று?
இது ஆசிய நாடுகளின் சாபமா?
எது எவ்வாறெனினும் விமர்சகர் ஒருவரின் கூற்றுக்கேற்ப இவர் "mat இல் தோற்கவில்லை;weight இலேயே தோற்றார்"
**இன்னும் காலம் இருக்கிறது.முக்கிய போட்டிகள் இருக்கின்றன.நான்கு வருடங்களில் அடுத்த ஒலிம்பிக் போட்டி வரும்.அதற்கு தன்னை தயார் படுத்திக் கொள்ளலாம்.
**இவற்றிற்கெல்லாம் முதலாய் உடலும் மனமும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.
**வயது ஏற ஏற ஏற்படும் ஓமோன் மாற்றங்கள் ஒருவருடைய எடையிலும் தாக்கங்களை ஏற்படுத்தும்.அதுவும் பெண் உடம்பில் அது நிறையவே மாற்றங்களை ஏற்படுத்தும்.
**ஒவ்வொரு உடலின் அமைப்பும் அதற்குரிய நிறை எல்லைகளைக் கொண்டுள்ளன.
**வினேஷ் போகத் தனது உடல் எடைக்கு ஏற்ப 50 kg பிரிவை விடுத்து எடை கூடுதலான பிரிவில் பங்குபற்றுவதைப் பற்றியும் கவனத்தில் கொள்ளலாம்.
சிறந்த வீராங்கனை,பிழைகளை கண்டும் காணாமல் போகும் உலகில் சக மற்றும் எதிர்கால வீராங்கனைகளின் சுயகௌரவத்துக்காக செயல்பட்டவர்,தளராத போராளி நலமுடன் பலத்துடன் மல்யுத்த உலகில் மீள வரவேண்டும் என்பது அனைவரினதும் அவா!!
⚫---------வாசுகி குமாரதாஸன் .
தாஸ்நியூஸ் - பாரிஸ்
07-08-2024
Opmerkingen