தொடக்க விழாக் காட்சிகள்
🟢🔵🔴🟡தாஸ்நியூஸ். கொம்
பாரிஸ், ஜூலை 27
பாரிஸ் 2024 ஒலிம்பிக் தொடக்க விழா தனித்துவமான அழகியல் அம்சங்களுடன் திறந்த வெளியில் விடாது பெய்த மழைக்கு மத்தியில் நடந்தேறியிருக்கிறது. சுமார் மூன்றரை மணி நேரம் உலகின் கவனம் முழுவதையும் ஈர்த்துவைத்திருந்த அந்த மகோன்னத நிகழ்வின் காட்சிகள் சில...
விளையாட்டு வீரர்களின் படகு அணிவகுப்பு ஆரம்பமாவதற்குமுன்பாக ஒஸ்ரலிஸ் பாலம் மீது பிரான்ஸின் மூவர்ண நீர் அலங்காரம்...
ரசிகர்களின் பலத்த ஆரவாரங்களுக்கு மத்தியில் விழாவைத் தொடக்கி வைத்தார் பிரபல பாடகி லேடி ஹாஹா
பிரபல முலான் றூஷ் காபரே நடனக் அழகிகள் எண்பது பேர் வர்ண ஆடையில் நதிக்கரையோரம் கூடி 1820 ஆம் ஆண்டுக்கு முந்திய பிரான்ஸின் பாரம்பரிய கான்-கன் (can-can) நடனமாடினர்.
28 வயதான இளம் பாடகி அக்சல் செய்ன் - சிரல் (Axelle Saint-Cirel) பாரிஸின் பெரும் கண்காட்சி மண்டபமாகிய Grand Palais உச்சியில் நின்றவாறு நாட்டின் தேசிய கீதத்தைப் பாடிய காட்சி உணர்ச்சிப் பெருக்கை ஏற்படுத்தியது.
பிரெஞ்சு - மாலி பின்னணி கொண்ட சுப்பஸ்ரார் பாடகி அயா நகமுரா (Aya Nakamura) நடனக் குழுவுடன் பாட வந்த காட்சி. பிரான்ஸின் தீவிர வலதுசாரிகளது கடும் எதிர்ப்பையும் மீறி அவரது வருகை ஒலிம்பிக் ரசிகர்களால் கொண்டாடப்பட்டிருகிறது.
ரோபோ பாணியில் வடிவமைக்கப்பட்ட வெள்ளி நிறக் இரும்புக் குதிரை செய்ன் நதி மீது பாய்ந்து வந்த காட்சி காண்போரைக் கவர்ந்தது. இரும்புப் பெண் ஒருவர் ஒலிம்பிக் கொடியை அந்தக் குதிரை மீது ஏந்தி வந்தார். பின்னர் ஈபிள் கோபுரத்துக்கு முன்பாகக் கொடி ஏற்றப்பட்டது.
பிரபல கனடா நாட்டுப் பாடகி செலின் டியோன்(Céline Dion) ஆரம்ப விழாவின் நிறைவில் ஈபள் கோகோபுரத்தின் முதலாவது தளத்தில் நின்றிருந்தவாறு பாடி உலகெங்கும் உள்ள ரசிகர்களை அசத்தினார். நோய் காரணமாகக் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக அவர் பாடுவதைத் தவிர்த்து வந்தார். நேற்று அவர் பாடலின் முடிவில் உலக அமைதிக்கும் சமாதானத்துக்குமான
அழைப்பை விடுத்தார்.
ஒலிம்பிக் தீப்பந்தம் பிரான்ஸின் ஒலிம்பிக் சம்பியன்களால் லூவர் அருங்காட்சியகம் உட்பட நகரின் முக்கிய இடங்கள் ஊடகச் சுமந்து வரப்பட்டது. பின்னர் விளையாட்டு நட்சத்திரங்களான Marie-José Pérec மற்றும் Teddy Riner ஆகிய இருவரும் ஒலிம்பிக் தீச் சட்டியை ஏற்றிவைத்து காட்சி மிக உச்சமாக அமைந்தது.
பிரமாண்டமான வாயு பலூன் ஒலிம்பிக் தீச் சட்டியைச் சுமந்தவாறு வானில் மேலெழுந்த காட்சி...
தாஸ்நியூஸ் - பாரிஸ்
27-07-2024
Comments