top of page
Post: Blog2_Post
Writer's pictureKumarathasan Karthigesu

200 ட்ரோன்கள்... 150 ஏவுகணைகள்... இஸ்ரேல் தடுத்தது! இரவோடு முடிந்த "வாணவேடிக்கை"!!

அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ்

உதவியதாக இஸ்ரேல் அறிவிப்பு


🔵ஒரு சிறுமியைத் தவிர

எவருக்கும் காயமில்லை!!!


பாரிஸ், ஏப்ரல் 14


ஈரானியப் படைகள் "நிஜமான சத்தியம்"(True Promise) என்று பெயரிட்டு இஸ்ரேல் மீது சனிக்கிழமை இராப் பொழுதில் மழையாகப் பொழிந்து நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களில் 99 சதவீதமானவற்றை வழிமறித்து முறியடித்துவிட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இஸ்ரேலிலும் அதன் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களிலும் வாழும் மக்கள் குண்டு வெடிப்புச் சத்தங்கள், சைரன் ஓசைகளுடன் முழு இரவுப் பொழுதைப் பெரும் பதற்றத்துடன் கடந்திருக்கின்றனர்.

பல திக்குகளிலும் வான்காப்பு சாதனங்கள் இயக்கப்பட்டதால் இஸ்ரேலிய வான் பிரதேசம் முழுவதும் விடிய விடிய வாணவேடிக்கையைப் போன்று

ஒளிமயமாகக் காட்சியளித்தது.


இருட்டு நேரத்தில் இஸ்ரேலியப் பகுதிகள் மீது நூற்றுக்கணக்கான ட்ரோன்கள், ஏவுகணைகள் வீசப்பட்ட இந்தப் படை நடவடிக்கையில் சிறுமி ஒருத்தியைத் தவிர சிவிலியன்கள் எவருமே காயமடையவில்லை என்று அந்நாட்டு செஞ்சிலுவைச் சங்கம் வெளியிட்டிருக்கும் தகவல் பலரையும் வியப்பில் ஆழ்த்தத் தவறவில்லை.


உலக ராணுவங்களிலே இஸ்ரேலிடம் உள்ள வான் பாதுகாப்பு சாதனங்களே

மிகவும் சக்தி வாய்ந்தவை. "இரும்பு டோம்"(Iron Dome) என்று அழைக்கப்படுகின்ற இந்தச் சாதனங்கள், அமெரிக்காவின் பெரும் உதவியோடு இஸ்ரேலில் தயாரிக்கப்பட்டவை. இவற்றின் மூலமே மிகச் சிறிய நிலப்பிரதேசத்தினுள் அடங்கிய தனது நாட்டைச் சூழவுள்ள எதிரிகளின் ஏவுகணைகளிடம் இருந்து இஸ்ரேலிய ராணுவம் பாதுகாக்கிறது.


இந்த வான் காப்புக் கட்டமைப்பு மூலமே சனிக்கிழமை இரவு முழுவதும் ஈரானியப் புரட்சிக் காவல் படைகள்

ஏவிய நூற்றுக்கணக்கான வெடிகுண்டு ட்ரோன்கள்(drones) மற்றும் குருஸ் ஏவுகணைகள்(cruise missiles) பாலிஸ்டிக் ஏவுகணைகளை (ballistic missiles) இஸ்ரேலியப் படைகளால் வானிலேயே வழிமறித்து அழித்துவிட முடிந்துள்ளது.


இஸ்ரேல் மட்டுமல்ல..


ஈரானின் பழிவாங்கும் தாக்குதலை இஸ்ரேல் மட்டுமே தனித்து நின்று முறியடித்துவிடவில்லை. அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், மற்றும் ஜோர்தான் ஆகிய நேச அணிகளின் உதவியுடனேயே தாக்குதல்கள் தடுக்கப்பட்டிருக்கின்றன என்பதை இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளது.

வரைபடம்:BBC—


சிரியாவின் தெற்குப் பகுதியில் - ஜோர்தான் எல்லையோரமாக அமைந்துள்ள ரகசிய அமெரிக்கத் தளங்களில் இருந்தும் ஈரானிய ட்ரோன்கள் சுட்டுவீழ்த்தப்பட்டுள்ளன.

மத்திய கிழக்கில் தரித்துள்ள அமெரிக்கப் போர்க்கப்பல்களில் இருந்தும் ஏவுகணை எதிர்ப்புத் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருக்கின்றன.


தனது போர் விமானங்கள் சிரியா - ஈராக் பிரதேசங்கள் மீது வைத்து ஈரானிய ஏவுகணைகளை வழிமறித்துத் தாக்கின என்று பிரிட்டிஷ் றோயல் வான்படை தெரிவித்துள்ளது.


அதேசமயம் ஈரானுக்கு ஆதரவாக லெபனானின் ஹிஸ்புல்லா இயக்கமும் யேமனின் ஹூதி தீவிரவாதிகளும் இஸ்ரேலியப் பகுதிகள் மீது சமகாலத்தில் தாக்குதல்களை நடத்தியிருக்கின்றனர்.

படம் :இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நத்தன்யாகு நடத்திய போர்க்கால அமைச்சரவைக் கூட்டம் —


எதற்காகத் தாக்குதல்?


சனிக்கிழமை நடத்தப்பட்ட படை நடவடிக்கை ஈரான், நேரடியாக இஸ்ரேலிய எல்லைக்குள் நடத்திய முதலாவது தாக்குதல் ஆகும்.


சிரியாவின் தலைநகரில் ஈரானியத் தூதரகம் அமைந்திருந்த கட்டடத் தொகுதி கடந்த ஏப்ரல் முதலாம் திகதி இடம்பெற்ற இஸ்ரேலிய ட்ரோன் தாக்குதலில் தரைமட்டமாகியது. அச்சமயம் தூதரகத்தில் தங்கியிருந்த

ஈரானின் இஸ்லாமியப் புரட்சிக் காவல் படையின் ஜெனரல்கள் இருவர் உட்பட ஆறு வீரர்கள் கொல்லப்பட்டிருந்தனர்.

இந்தத் தாக்குதலுக்குப் பழி தீர்ப்பதற்காகவே ஈரான் பகிரங்கமாக அறிவித்தபின்னர் இஸ்ரேலைத் தாக்கியிருக்கிறது.


அடுத்தது என்ன?


சனி இரவுத் தாக்குதல்களுக்குப் பின்னர் இன்று ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேலியப் பகுதிகளில் நிலைமை வழமைக்குத் திரும்பியுள்ளதாகச் செய்திகள் வருகின்றன. எனினும் ஈரானுக்குக் குறிப்பிடக் கூடிய பதிலடி

இருக்கும் என்று இஸ்ரேலியப் படை

அதிகாரங்கள் கூறியுள்ளன.


இதற்கிடையில் அதிபர் ஜோ பைடன் ஜீ- 7 (G7) நாடுகளது தலைவர்களின் அவசர கூட்டம் ஒன்றை இன்று ஞாயிற்றுக்கிழமை நடத்தவுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


 

தாஸ்நியூஸ் - பாரிஸ்

0 comments

Bình luận


You can support my work

bottom of page