தண்ணீர் பரிசோதனை
Photo : le parisien
பாரிஸில் கடந்த சில நாட்களாகப் பெய்துவருகின்ற கோடை மழை காரணமாக செய்ன்(Seine) நதியில் நீரின் மட்டம் உயர்ந்துள்ளது. அதனால் நதியில் நடத்தப்பட்டுவந்த ஒலிம்பிக்
நீச்சல் போட்டிகளுக்கான பரீட்சார்த்த
பயிற்சிகள் நிறுத்தப்பட்டுள்ளன.
நதி நீரில் மாசு அளவு அதிகரித்திருப்பது பரிசோதனைகளில் தெரியவந்ததை அடுத்தே சுகாதாரக் காரணங்களுக்காகவே முன்கூட்டிய ஒலிம்பிக் நீச்சல் பயிற்சிப் போட்டிகள் (pre-Olympic swimming test competition) நிறுத்தப்பட்டுள்ளன என்று சர்வதேச நீச்சல் சம்மேளனம் (international swimming federation) தெரிவித்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை நடைபெறவிருந்த பெண்களுக்கான போட்டிகளும் இன்று ஞாயிற்றுக்கிழமை நடக்கவிருந்த ஆண்களுக்கான போட்டிகளுமே நிறுத்தப்பட்டன. தொடர்ந்தும் பாரிஸ் அதிகாரிகளோடு கலந்துரையாடிப் பயிற்சிகளை முன்னெடுப்பதற்கு
எதிர்பார்த்துள்ளதாக சம்மேளனம்
கூறியுள்ளது.
பாரிஸ் கோடைகால ஒலிம்பிக் போட்டிகளுக்கு இன்னமும் சரியாக ஒரு வருடம் இருக்கின்ற நிலையில் இவ்வாறு நீச்சல் பயிற்சி தடைப்படுவது ஒரு பின்னடைவு என்று கூறப்படுகிறது.
Photo :BERTRAND GUAY / AFP
ஒலிம்பிக் போட்டிகளின் கோலாகல ஆரம்ப விழாவை வழமையான நடைமுறைக்கு மாறாக - உள்அரங்கைத் தவிர்த்து- திறந்த வெளியில் - செய்ன் நதி நீரின் மீதும் அதன் கரையோரங்களிலும் நடத்துவதற்குப் பாரிஸ் ஒலிம்பிக் குழு தீர்மானித்திருப்பது தெரிந்ததே. நீச்சல் உட்பட சில போட்டிகளையும் நதியிலும் அதனை அண்டிய பகுதிகளிலும் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக நதியைத் தூய்மைப்படுத்தும் பெருமெடுப்பிலான பணிகள் முன்னெடுக்கப்பட்டு நிறைவு பெற்ற நிலையில் பரீட்சார்த்த நீச்சல் போட்டிகள் அங்கு ஆரம்பிக்கப்பட்டன .
இந்தக்கட்டத்தில் இயற்கையின் ஒழுங்கு மாற்றத்தால் எதிர்பாராத சமயத்தில் திடீரெனக் கோடை மழை பெய்யத் தொடங்கியுள்ளது. ஒரு மாதகாலத்தில் பெய்திருக்கக் கூடிய மழையின் அளவு கடந்த ஒரு வாரத்தில் பொழிந்துள்ளது.
நதியில் கலக்கின்ற மழை நீரை வடி கட்டும் வசதிகள் நகர்ப்பகுதியில் செய்யப்பட்டுள்ள போதிலும்
வேறு வழிகளில் அசுத்த மழை நீர் நதியில் கலந்துவருவதைத் தடுக்க முடியாத நிலை காணப்படுகிறது.
பாரிஸ் நதியின் அழகியல் அம்சங்களில் ஒன்றாகிய செய்ன் நதியில் சுமார் நூறு வருடங்களுக்குப் பின்னர் அடுத்த ஆண்டு முதல் நகர வாசிகள் நீச்சலடிக்க அனுமதி வழங்கப்படவுள்ளமை தெரிந்ததே.
தொடர்புடைய செய்தி :https://www.thasnews.com/post/ப-ர-ஸ-நகர-வ-ச-கள-ச-ய-ன-நத-ய-ல-வ-ர-வ-ல-ந-ந-தல-ம
தாஸ்நியூஸ் - பாரிஸ்
06-08-2023
Comments