top of page
Post: Blog2_Post
Writer's pictureKumarathasan Karthigesu

யூத கோவிலுக்குத் தீ வைத்தவர் சுட்டுக் கொலை!

Rouen நகரில் சம்பவம்


பாரிஸ், மே, 18


Rouen நகரில் நேற்று வெள்ளிக்கிழமை காலை யூத மதத்தினரின் வழிபாட்டுத்தலம் (synagogue) ஒன்றின் அருகே இடம்பெற்ற சூட்டுச்சம்பவத்தில்

ஒருவர் உயிரிழந்தார்.


காலை ஆறு மணிக்குப் பின்னர் வழிபாட்டுத்தலத்தின் உள்ளே புகை எழுந்ததை அவதானித்தவர்கள் பொலீஸாரை அழைத்துள்ளனர்.

பொலீஸார் அங்கு விரைந்து வந்துசேர்ந்தபோது கத்தி மற்றும் இரும்புச் சட்டம் என்பனவற்றுடன் தோன்றிய நபர் ஒருவர் அவர்களை எதிர்க்கமுற்பட்டார் என்று கூறப்படுகிறது. அதனையடுத்து பொலீஸ் உத்தியோகத்தர் ஒருவர் தனது துப்பாக்கியால் அவரை நோக்கிச் சுட்டுள்ளார். படுகாயமடைந்த அந்த நபர் பின்னர் உயிரிழந்தார் என்று கூறப்படுகிறது. அவரது விவரங்கள்

உடனடியாகத் தெரியவரவில்லை.

ஆயினும் அந்த நபர் பாதுகாப்புப் பிரிவினரின் கண்காணிப்புப் பட்டியலில் இடம்பெற்றிருந்த ஒருவர் என்று ஆரம்பத் தகவல்கள் தெரிவித்தன.


அந்த நபர் வேண்டுமென்றே யூதர்களது வழிபாட்டுத்தலத்துக்குத் தீயை மூட்டியுள்ளார் என்றும் அதனால் வழிபாட்டுத் தலத்தின் உள்ளே தீ பரவிச் சேதங்களை ஏற்படுத்தி உள்ளது என்றும் விசாரணையாளர்கள் தெரிவித்துள்ளனர். நோர்மன்டி பிராந்தியத்தின் தலைநகராகிய Rouen

நகரில் வசிக்கின்ற யூத சமூகத்தவர்கள்

இந்தச் சம்பவத்தால் அதிர்ச்சியடைந்துள்ளனர்.


இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையே போர் மூண்டது முதல் பிரான்ஸில் நூற்றுக்கணக்கான யூத எதிர்ப்புச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. யூதர்கள் வசிக்கின்ற இடங்கள் மற்றும் யூத வழிபாட்டுத் தலங்கள் என்பற்றுக்குப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

 

தாஸ்நியூஸ் - பாரிஸ்

18-05-2024




0 comments

Comentarios


You can support my work

bottom of page