top of page
Post: Blog2_Post
Writer's pictureKumarathasan Karthigesu

ரியூனியன் தீவை பெரும் சூறாவளி கடக்கின்றது!

மக்கள் முற்று முழுதாக

வீடுகளுக்குள் முடக்கம்


🔴சிவப்பைத் தாண்டி அங்கு

🟣"ஊதா"நிற உஷார் நிலை


பிரான்ஸின் கடல்கடந்த நிர்வாகப் பிராந்தியங்களில் ஒன்றாகிய ரியூனியன் தீவை மோசமான சூறாவளிக் காற்று உள்ளூர் நேரப்படி இன்று திங்கள் பகல் பொழுதுகளில் கடுமையாகத் தாக்கலாம் என்று

எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. பெரும் மழைப் பொழிவும் கடல் கொந்தளிப்பும் எதிர்பார்க்கப்படுகிறது. அதிகாரிகளது ஆலோசனைகளைப் பின்பற்றுமாறு மக்கள் கேட்கப்பட்டிருக்கின்றனர்.


அனர்த்தம் விசாலமானதாக இருக்கலாம் என்று அஞ்சப்படுவதால் அங்கு காலநிலை எச்சரிக்கைக் குறியீடுகளில் உச்சப் புள்ளியாகிய சிவப்பு எச்சரிக்கையைத் தாண்டி அதி உச்சக் குறியீடாகிய ஊதா நிற உஷார் நிலை (alerte violette) திங்கட்கிழமை காலை 06.00 மணிமுதல் அமுலுக்கு வருகிறது.

இந்து சமூத்திரத்தில் அமைந்துள்ள இந்தத் தீவை "பெலால்" (Belal) எனப் பெயரிடப்படுகின்ற சூறாவளிக் காற்று மணிக்கு 200 - 250 கிலோ மீற்றர்கள் வேகத்தில் தாக்கும் என்று எச்சரிக்கப்பட்டிருக்கிறது. பத்து அல்லது இருபது ஆண்டுகளுக்குப் பின்னர் ஏற்படுகின்ற மிக மோசமான சூறாவளி அனர்த்தமாக இது இருக்கக் கூடும் என்று வானிலை நிபுணர்கள் எதிர்வு கூறியிருப்பதால் தீவு மக்கள் அனைவரையும் ஒட்டுமொத்தமாக வீடுகளுக்குள் முடங்கியிருக்குமாறு

உத்தரவிடப்பட்டிருக்கிறது. அம்புலன்ஸ் மற்றும் தீயணைப்புப் பணியாளர்கள் உட்பட உதவி மீட்புக் குழுக்களையும் வெளியே நடமாட வேண்டாம் என்று

ஆலோசனை வழங்கப்பட்டிருப்பதாக

ரியூனியன் பொலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார்.


அதிபர் மக்ரோன் விடுத்த ஒரு செய்தியிலும் தீவுவாசிகள் அனைவரையும் வீடுகளில் தங்குமாறு

கேட்டிருக்கிறார். உள்துறை அமைச்சில் நெருக்கடிகாலப் பணிமனை ஒன்று திறக்கப்பட்டிருக்கிறது. நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை அங்கு வருகை தந்த பிரதமர் கப்ரியேல் அட்டால் இயற்கை அனர்த்த முகாமைத்துவ முன்னேற்பாடுகள் குறித்து அதிகாரிகளோடு கலந்துரையாடினார்.


ஞாயிற்றுக்கிழமை பகல் தீவில் இருந்து 280 கிலோ மீற்றர்கள் தொலைவில் நிலைகொண்டிருந்த புயலின் மையம், பெரும்பாலும் திங்கட்கிழமை பகல் நேரடியாகத் தீவுக்கு மேலாகக் கடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சூறாவளி கடக்கும் வரை - குறைந்தது செவ்வாய்க்கிழமை காலை வரை - வீடுகளை விட்டு வெளியேறாதீர்கள் எனத் தீவில் வசிக்கின்ற சுமார் எட்டு லட்சத்து 50 ஆயிரம் மக்களுக்கும்

கண்டிப்பான ஆலோசனை விடுக்கப் பட்டிருக்கிறது.


அங்கிருந்து பிந்திய செய்திகள் எதிர்பார்க்கப்படுகின்றன.

 

தாஸ்நியூஸ் - பாரிஸ்

15-01-2024

0 comments

Comments

Couldn’t Load Comments
It looks like there was a technical problem. Try reconnecting or refreshing the page.

You can support my work

bottom of page