top of page
Post: Blog2_Post
Writer's pictureKumarathasan Karthigesu

ரஷ்யாவுக்குள் வடகொரியப் படை! போர் முனைகளில் அந்நாட்டின் கொடி!!

உக்ரைனுக்கு உளவாளிகளை

அனுப்புகிறது தென் கொரியா


பாரிஸ், ஒக்ரோபர், 28


வடகொரியாவின் படையினர் ரஷ்யாவுக்குள் இறக்கப்பட்டிருப்பதை நேட்டோவின் புதிய செயலாளர் நாயகம் மார்க் ரூட்(Mark Rutte)

உறுதிப்படுத்தியிருக்கிறார்.


ரஷ்யாவுக்குள் உக்ரைன் படைகள் முன்னேறிக் கால் ஊன்றியுள்ள குர்ஸ்க் (Kursk) என்ற பிராந்தியத்தின் எல்லைப்

பகுதிகளில் வட கொரியப் படைகள் செயற்பட்டு வருகின்றன என்று கூறிய அவர், இதனை"ஆபத்தான ஒரு விரிவாக்கம்" என்று குறிப்பிட்டுப் "புடின் மீதான அவநம்பிக்கை அதிகரிப்பதையே இது காட்டுகின்றது" என்றும் தெரிவித்திருக்கிறார்.


வடகொரியாவின் வீரர்கள் ரஷ்யாவுக்கு அனுப்பப்பட்டுள்ளனர் என்று உக்ரைன் அரசுத் தலைமை ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துவந்தது. எனினும் நேட்டோ இப்போதுதான் அதனை உறுதிப்படுத்தியிருக்கிறது.

வடகொரியப் படைகள் தொடர்பான அறிக்கைகளைத் திரிவுபடுத்தப்பட்ட செய்திகள் என்று கிரெம்ளின் மாளிகை ஆரம்பத்தில் மறுத்திருந்தது. ஆனால் ரஷ்ய மண்ணில் தற்சமயம் வடகொரியப் படைகள் உள்ளன என்பதை அதிபர் புடின் மறுக்கவில்லை.

கடந்த வியாழனன்று இது பற்றிப் பதிலளித்த அவர்,"இது ரஷ்யாவின் இறைமைக்குட்பட்ட விடயம்" என்றார்.


பியோங்யாங்குடன் (Pyongyang) செய்துகொண்ட இருதரப்பு உடன்படிக்கையினை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பது ரஷ்யாவின் சொந்தப் பிரச்சினை என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை -


தென் கொரியா அதன் உளவுத்துறை அதிகாரிகளை உக்ரைனுக்கு அனுப்பவுள்ளது என்று அந்த நாட்டின் செய்தி நிறுவனங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. ஆயிரக்கணக்கான வட கொரியப் படையினர் ரஷ்யாவுக்குள் நகர்ந்துள்ளனர் என்ற தகவலைக் கடந்த வாரம் அமெரிக்கா உறுதிப்படுத்தியதை அடுத்தே தென் கொரியா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.


அதேசமயம் உக்ரைனுக்குப் போராயுத

உதவிகளை வழங்கப்போவதாகவும் தென்கொரியா தெரிவித்துள்ளது.


ரஷ்யாவின் மிக நெருங்கிய நட்பு நாடு வட கொரியா. அந்த நாட்டின் படை வீரர்களுக்கு ரஷ்யாவில் உள்ள தளங்களில் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருவதாக அமெரிக்காவும் நேட்டோவும்

ஏற்கனவே கூறிவருகின்றன. இந்த நிலையில் கைப்பற்றப்பட்ட உக்ரைன் கிராமம் ஒன்றில் ரஷ்யாவின் தேசியக் கொடிக்குப் பக்கத்தில் வட கொரிய நாட்டின் கொடியும் பறப்பதைக் காட்டுகின்ற வீடியோ ஒன்றை ரெலிகிராம் சனல் வெளியிட்டுப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யாவில் பயிற்சி பெற்ற வட கொரியப் படை வீரர்கள் உக்ரைன் போர் முனைகளில் ரஷ்ய வீரர்களோடு இணைந்து செயற்பட்டுவருவதையே இது காட்டுவதாக நம்பப்படுகிறது. இதனால் கடந்த இரு வாரங்களாக இந்த விவகாரம் பெரும் சூடான செய்தியாக மாறியிருக்கிறது.


வட கொரியாவின் நடவடிக்கைக்குப் பதிலடியாகத் தென் கொரியா உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கத் தீர்மானித்துள்ளது. போர் நடைபெறுகின்ற நாடுகளுக்குத் தனது ஆயுதங்களை வழங்குவதில்லை என்ற நீண்ட கால நிலைப்பாட்டை இதன் மூலம் தென் கொரியா கைவிடுகிறது.


ரஷ்யா - உக்ரைன் போரில் இரண்டு கொரியாக்களும் இவ்வாறு இணைந்துகொள்வது இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்ட காலப் பகைமையை மேலும் தீவிரமாக்கி விடலாம்.


சுமார் ஆயிரத்து 500 வடகொரிய வீரர்கள் கப்பல் மூலம் ரஷ்யாவின் கிழக்குத் துறைமுக நகரமாகிய விளாடிவாஸ்ரொக்கிற்கு (Vladivostok) அனுப்பப்பட்டிருப்பதை அதிதிறன் வாய்ந்த செய்மதிப் படங்கள் மூலம் உறுதிப்படுத்தி உள்ளதாகத் தென் கொரியா தெரிவித்துள்ளது.

 

தாஸ்நியூஸ் - பாரிஸ்

28-10-2024





0 comments

Comments


You can support my work

bottom of page