top of page
Post: Blog2_Post
Writer's pictureKumarathasan Karthigesu

ரஷ்யா வென்றால் பிரான்ஸ் மக்களும் ஐரோப்பாவும் பாதுகாப்பை இழக்க நேரிடும்! மக்ரோன் எச்சரிக்கை!!

🔴நிலைவரம் மோசமானால்

மொஸ்கோவின் தோல்வியை

உறுதிப்படுத்த நாம் தயார்!!


முக்கிய தொலைக்காட்சி

நேர்காணலில் தெரிவிப்பு

உக்ரைனில் ரஷ்யா வெற்றிபெறக் கூடாது. வெற்றிபெறவும் முடியாது. அவ்வாறானதொரு வெற்றி நிகழ்ந்தால் முழு ஐரோப்பாவும் பிரெஞ்சு மக்களும் பாதுகாப்பை இழக்க நேரிடும் .


போர்க்கள நிலைமை மோசமடைந்தால்,

ரஷ்யா ஒருபோதும் அந்தப் போரில் வெற்றிபெற முடியாது என்பதை உறுதிப்படுத்துவதற்கு நாங்கள் ஆயத்தமாக இருக்கின்றோம்.


பிரான்ஸின் அதிபர் எமானுவல் மக்ரோன் இன்று வியாழக்கிழமை இரவு வழங்கிய தொலைக்காட்சி நேர்காணலில் மேற்கண்டவாறு எச்சரிக்கைத் தொனியில் கருத்துக்களை வெளியிட்டிருக்கிறார்.


TF1 மற்றும் France 2 ஆகிய தொலைக்காட்சிகளில் இரவு எட்டு மணி முதல் ஒளிபரப்பாகிய அவரது நேர்காணலில் உக்ரைன் போர் தொடர்பான தனது உத்தியை விளக்கும் விதமாக அதிபர் வெளியிட்ட

தீவிர கருத்துக்கள் ஐரோப்பா எங்கும்

அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளன.


உக்ரைனைப் பாதுகாப்பதற்குச் சகல விதமான வழிமுறைகளும் சாத்தியம் என்று கூறிய மக்ரோன், தேவை ஏற்பட்டால் ஐரோப்பிய நாடுகளது தரைப்படைகளை அங்கு அனுப்புவதை நிராகரித்துவிட்ட முடியாது என்று தான் முன்னர் தெரிவித்த கருத்தை மீளக் குறிப்பிட்டு அதற்கான பொறுப்பை ஏற்றுக்கொள்வதாகவும் கூறினார்.


கேள்விகளுக்கு பதிலளித்த போது ரஷ்யாவை "எதிரி நாடு" என்று குறிப்பிடுவதைத் தவிர்த்த அவர்,

"ரஷ்யாவிற்கு எதிராகப் பிரான்ஸ் ஒருபோதும் தாக்குதலைத் தொடங்காது" என்றும், பிரான்ஸிற்கு உள்ளேயும் வெளியேயும் பிரெஞ்சு நலன்களுக்கு எதிராக ரஷ்யா ஆக்கிரமிப்புத் தாக்குதல்களை நடத்திய போதிலும், மொஸ்கோவுடன் பாரிஸ் போரில் ஈடுபடவில்லை-என்று

குறிப்பிட்டார்.


ரஷ்ய அதிபர் "அவர் எவராக இருந்தாலும் அவரோடு "சமாதானப் பேச்சு நடத்தும் நேரம் வரும் என்று நம்புவதாகவும் மக்ரோன் தெரிவித்தார்.


எங்கள் முன் ஒரு விடயம் உள்ளது. ரஷ்யா போரில் வென்றுவிடக் கூடாது என்பதே அது. அதனைத் தடுப்பதற்காக உக்ரைனைப் பலப்படுத்துவதற்குச் சகலவழிகளிலும் உதவவேண்டும். அந்த உதவிகளுக்குத் தடை போட முயற்சிப்பவர்கள் தோல்வியையே தெரிவுசெய்கிறார்கள் என்றும் அவர் கூறினார்.


உக்ரைன் அதிபரோடு மக்ரோன் அண்மையில் செய்துகொண்ட பாதுகாப்பு உடன்படிக்கை மீது பிரான்ஸின் நாடாளுமன்றத்தில் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

அதேசமயம் உக்ரைனுக்குத் தரைப்படைகளை அனுப்பும் சாத்தியத்தைப் புறந்தள்ள முடியாது என்று அவர் அண்மையில் தெரிவித்த கருத்துக்கு உள்நாட்டிலும் ஐரோப்பிய மட்டத்திலும் கடும் எதிர்ப்புக் கிளம்பியிருந்தது. போர் அச்சத்தையும் அது ஏற்படுத்தி இருந்தது.


இந்தப் பின்னணியிலேயே உக்ரைன் கொள்கை தொடர்பான அவரது இன்றைய தொலைக்காட்சி நேர்காணல் அதிக முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.


 

தாஸ்நியூஸ் - பாரிஸ்

14-03-2024

0 comments

Kommentare


You can support my work

bottom of page