top of page
Post: Blog2_Post
Writer's pictureKumarathasan Karthigesu

றான்ஜிஸ் சந்தையை முடக்கத் திட்டம்? மரக்கறி,பழங்களின் விநியோகம் தடைப்படலாம்!

அவசியம் ஏற்பட்டால்

பாரிஸ் முற்றுகையை

தடுக்க அரசு ஏற்பாடு


பாரிஸ், ஜனவரி, 28


திங்கட்கிழமை முதல் பாரிஸ் பிராந்தியத்தை முற்றுகையிடப் போவதாக அறிவித்துள்ள விவசாயிகள் பாரிஸில் அமைந்துள்ள மிகப் பெரிய றான்ஜிஸ்(Rungis) சர்வதேச சந்தையையும் மூடி முடக்கத் திட்டமிட்டுள்ளனர் எனத் தகவல் வெளியாகி உள்ளது.


பாரிஸ் பிராந்தியத்தில் வல்-து-மானில் (Val-de-Marne) அமைந்துள்ள றான்ஜிஸ் சர்வதேச சந்தை(Marché International de Rungis) ஐரோப்பாவில் மரக்கறி, பழவகைகள் உட்பட விவசாய உற்பத்திப் பொருள்களைச் சேமித்து விநியோகிக்கின்ற மிகப் பெரிய மையம் ஆகும். அங்கிருந்து நடத்தப்படுகின்ற விநியோகங்கள் தடுக்கப்பட்டால் அது பாரிஸில் உணவகங்கள், சந்தைகள் உட்பட வர்த்தகச் செயற்பாடுகளைப் பெரிய அளவில் பாதிக்கும். அயல் நாடுகளுக்கான விநியோகங்களையும் தடுத்துவிடும்.


றான்ஜிஸ் சந்தை மற்றும் பாரிஸ் விமான நிலையங்கள் போன்றன முற்றுகையிடப்படுவதையும் அதனால் பொது நலன்களுக்குப் பாதிப்பு ஏற்படுவதையும் தடுப்பதற்காக விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளை அரசு முன்னெடுக்கும் என்று உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டாமன்னா தெரிவித்திருக்கிறார்.


Aisne, Aube, Eure-et-Loir, Eure, Ile-de-France, Marne, Nord, Oise, Pas-de-Calais, Seine-et-Marne, Seine-Maritime ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள், பாரிஸ் பிராந்திய இளம் விவசாயிகளோடு இணைந்து பாரிஸ் நகரைக் காலவரையறையின்றி முற்றுகையிடுகின்ற போராட்டத்தை திங்கட்கிழமை பிற்பகல் இரண்டு மணி முதல் ஆரம்பிக்கவுள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளது பாரிஸ் முற்றுகை முஸ்தீபு அறிவிப்பு வெளியானதை அடுத்துப் பாதுகாப்பு நிலைவரத்தை ஆராய்கின்ற கூட்டம் ஒன்று ஞாயிற்றுக்கிழமை காலை உள்துறை அமைச்சில் இடம்பெற்றுள்ளது.


பாரிஸ் நகருக்குள் கட்டணம் செலுத்தி நுழைகின்ற வாயிற் பகுதிகள் அனைத்திலும் மற்றும் விமான நிலையங்களின் பாதைகளிலும் பொலீஸ் பாதுகாப்பு ஏற்படுகள் செய்யப்படவுள்ளன என்று தகவல் வெளியாகியுள்ளது. பொலீஸார் மிகுந்த கட்டுப்பாட்டுடனே நடந்து கொள்வார்கள் என்பதை உள்துறை அமைச்சர் உறுதிப்படுத்தியுள்ளார்.


நாடெங்கும் கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாகத் தொடருகின்ற விவசாயிகளது வீதி மறியல் போராட்டங்களை அடக்கி ஒடுக்குகின்ற வகையிலான எந்த வித முயற்சிகளிலும் பொலீஸார் இதுவரை களமிறக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதேசமயம் விவசாயிகளது போராட்டங்களும் பெரும்பாலும் அமைதியான வழிமுறைகளிலேயே முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


 

தாஸ்நியூஸ் - பாரிஸ்

28-01-2024

0 comments

Comments


You can support my work

bottom of page