top of page
Post: Blog2_Post
Writer's pictureKumarathasan Karthigesu

லா சப்பேல் அருகே ஆப்கானியர் மோதல் ஏழு பேர் காயம்!

சிகரெட் விற்பவர்களிடையே

அடிக்கடி மூள்கின்ற அடிபாடு

குடியிருப்பாளர்கள் விசனம்

(படம் :பரிஷியன் செய்திச் சேவை)


பாரிஸ், ஓகஸ்ட் 31


பாரிஸில் லா சப்பல்(La Chapelle) மக்ஸ்டோமா(Marx Dormoy) மெற்றோ ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் இன்று சனிக்கிழமை முற்பகல் இரண்டு குழுக்களுக்கு இடையே நடந்த மோதல் காரணமாக அப்பகுதியில் பதற்றம் நிலவியது. பெரும் எண்ணிக்கையான காவல்துறையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டனர்.


ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த இரண்டு அணிகளுக்கு இடையிலேயே

மோதல் ஏற்பட்டது. இரண்டு தரப்பினரும் கத்தி வாள், சுத்தியல் கொண்டு தாக்கிக் கொண்டதில் ஏழு பேர்வரை காயமடைந்தனர். அவர்களில் நெஞ்சில் ஆழமான வாள் வெட்டுக்கு இலக்காகிய ஒருவருக்கு உயிராபத்தான கட்டத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.


மக்ஸ்டோமா பகுதியில் மொபைல் தொலைபேசி விற்பனை நிலையம் ஒன்றின் முன்பாக வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்த சிலரே பின்னர் குழுக்களாகப் பிரிந்து மோதலில் ஈடுபட்டனர் என்று நேரில் கண்டவர்கள் சாட்சியமளித்துள்ளனர்.


மோதலுக்கான காரணம் என்ன என்பது தெரியவராவிடினும் அந்தப் பகுதிகளில் தெருக்களில் சிகரெட் விற்கும் வெளிநாட்டவர்கள் மத்தியில் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் எழுகின்ற பிணக்குகள் கத்தி உட்பட கூரிய ஆயுதங்களால் தாக்கிக் கொள்ளும் வன்செயல்களாக அடிக்கடி இடம்பெற்றுவருகின்றன. பொலீஸார் இந்தப் பகுதிகளில் இடைவிடாது கடமையில் ஈடுபட்டாலும் அவர்கள் வெளியேறிச் செல்லும் சமயங்களில் சிகரெட் விற்பவர்கள வீதிகளில் வந்து கூடுகின்றனர்.


ஒலிம்பிக் போட்டிகளை ஒட்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் காரணமாகப் பாரிஸ் நகரில் குற்றச் செயல்கள் பெருமளவில் குறைந்துள்ள நிலையில் இந்தப் பகுதியில் இடம்பெற்ற இன்றைய குழு மோதல் தொடர்பான செய்தி ஊடகங்களில் முக்கிய இடம்பிடித்திருக்கின்றது.


தமிழர்களது வர்த்தக நிலையங்கள் வரிசையாக அமைந்துள்ள லா சப்பேல் உட்பட அங்குள்ள ரயில் நிலையங்கள் அருகே சிகரெட் விற்பனை பெருகி வருகிறது. ஆப்கானிஸ்தானியர்கள் மாத்திரமன்றிக் கிழக்கு ஐரோப்பிய நாடுகள் சிலவற்றில் இருந்து வந்த குடியேற்றவாசிகளும் வீதியோர சட்டவிரோத சிகரெட் விற்பனையில் விடாமல் ஈடுபட்டுவருகின்றனர்.


பாரிஸ் 18 நிர்வாகப் பிரிவுக்கான நகர சபையின் பாதுகாப்புப் பிரிவுக்குப் பொறுப்பான துணை மேயர் இன்றைய மோதல்கள் குறித்துக் கவலை வெளியிட்டிருக்கிறார். சட்ட விரோத சிகரெட் வியாபாரத்தில் ஈடுபடுவோரைக் கண்காணிப்புக் கமெராக்கள் மூலம் அடையாளம் கண்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன என்று அவர் தெரிவித்திருக்கிறார். அடிக்கடி இடம்பெறும் குழு மோதல்கள், அடிபிடிகள் காரணமாக வாடிக்கையாளர்கள் தங்களது கடைப் பகுதிக்கு வருவதற்கு அஞ்சுகின்றனர் என்று மக்ஸ்டோமா பகுதியில் வர்த்தக நிலையங்களை நடத்துவோர் முறையிட்டிருக்கின்றனர்.

 

தாஸ்நியூஸ் - பாரிஸ்

31-08-2024


0 comments

Comments


You can support my work

bottom of page