top of page
Post: Blog2_Post

லெபனானில் உள்ள வெளிநாட்டவர்களை வெளியேறப் பணிப்பு

மத்தியகிழக்கில் பதற்றம்

இராணுவ விரிவாக்கம்

பரந்துபட்ட யுத்த அச்சம்


பாரிஸ், ஓகஸ்ட், 4


இஸ்ரேல் - ஈரான் நேரடிப் போர் வெடிப்பதற்கான அச்சம் அதிகரித்துவருகின்ற நிலையில்

ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் கடந்த இரவு இஸ்ரேல் மீது ரொக்கெற் தாக்குதல்களை நடத்தியிருக்கின்றனர்.


இஸ்ரேலின் வடக்குப் பகுதி ஏவப்பட்ட டசின் கணக்கான ரொக்கெற்றுகளை அந்த நாட்டின் வான் காப்பு சாதனங்கள் தடுத்து முறியடிப்பதைக் காட்டுகின்ற சமூக ஊடக வீடியோக்கள் பல வெளியாகியுள்ளன.


அதேசமயம் லெபனானில் தங்கியுள்ள தங்களது குடிமக்களை அங்கிருந்து வெளியேறுமாறு மேற்கு நாடுகள் கேட்டிருக்கின்றன. அமெரிக்கா அதன் பிரஜைகளை இயன்றளவு விரைவாக - கிடைக்கக் கூடிய விமானங்களில் - பெய்ரூட்டை விட்டு வெளியேறிவிடுமாறு தெரிவித்துள்ளது


பிரான்ஸ், இங்கிலாந்து, சுவீடன், இத்தாலி, கனடா, ஜோர்டான் போன்ற நாடுகள் தங்களது நாட்டவர்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவித்துள்ளன. அதேசமயம்

ஈரானில் வசிக்கின்ற பிரெஞ்சுப் பிரஜைகளையும் தற்காலிகமாக அங்கிருந்த வெளியேறுமாறு பிரான்ஸின் வெளிவிவகார அமைச்சு ஆலோசனை வழங்கியுள்ளது. போருக்கான இராணுவ முஸ்தீபுகளை அடுத்து எந்த நேரமும் ஈரானிய வான்பரப்பு மூடப்படக் கூடிய ஏதுநிலை இருப்பதைக் காரணம்காட்டியே பிரான்ஸ் இவ்வாறு அறிவித்துள்ளது.


ஹமாஸ் அமைப்பின் தலைவர் இஸ்மாயில் ஹானியே(Ismail Haniyeh) அவர்களை தெஹ்ரானில் வைத்து இஸ்ரேல் படுகொலை செய்ததை அடுத்து அதற்கான பதிலடி தீவிரமாக இருக்கும் என்று ஈரான் எச்சரித்திருக்கிறது. எனினும் இஸ்ரேல் அந்தப் படுகொலைக்கு உரிமை கோர வில்லை. ஹானியே மீதான தாக்குதல்

தெஹ்ரானில் அவர் தங்கியிருந்த வீட்டுக்குக் குறுகிய தூரத்தில் இருந்தே நடத்தப்பட்டிருப்பதாக ஈரானிய புரட்சிக் காவல் படை தெரிவித்துள்ளது. அமெரிக்கப் பலனாய்வாளர்களது தகவலின் படி ஒரு மாத காலத்துக்கு முன்னரே ஹானியேயின் வீட்டின் உள்ளே மொஸாட் உளவுப் பிரிவு புதைத்து வைத்திருந்த குண்டு வெடிக்க வைக்கப்பட்டதனாலேயே அவர் கொல்லப்பட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.


ஹானியேயின் படுகொலை நடப்பதற்கு சில மணி நேரம் முன்பாக

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் மாடிக் கட்டடம் ஒன்றின் மீது இஸ்ரேல்

நடத்திய வான் தாக்குதலில் அந்த அமைப்பின் இராணுவக் கொமாண்டர் ஃபுவாட் ஷுக்ர் (Fuad Shukr) கொல்லப்பட்டார்.


இந்த இரண்டு தாக்குதல்களுக்காக இஸ்ரேலைப் பழிவாங்கப்போவதாக

ஈரானிய அதிகாரமும், லெபனானின் ஹிஸ்புல்லா தீவிரவாத அமைப்பும் சூளுரைத்துள்ளன. அதேசமயம் அமெரிக்கா தனது போர்க் கப்பல்களை

இஸ்ரேலைப் பாதுகாப்பதற்கான வியூககத்துக்கு நகர்த்தியுள்ளது.போர் விமான அணி ஒன்றையும் மத்திய கிழக்குக்கு அனுப்பியிருக்கிறது.


அமெரிக்காவின் ஆதரவோடு இஸ்ரேலும், ஈரானின் ஆதரவோடு ஹிஸ்புல்லா இயக்கமும் நேரடியான போரில் இறங்குவதற்கான சாத்தியங்கள் நெருங்கி வருவதால் மத்திய கிழக்கில் பதற்ற நிலை உச்சமடைந்துள்ளது.


 

தாஸ்நியூஸ் - பாரிஸ்

04-08-2024







0 comments

Comments


You can support my work

bottom of page