ஹிஸ்புல்லா அமைப்பின்
தொடர்பாடல் வலைக்குள்
இஸ்ரேல் ஊடுருவியதா?
பாரிஸ், செப்ரெம்பர் 17
ஈரானிய ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பின் தொடர்பாடல் கருவிகள்
(pagers) ஒரே சமயத்தில் வெடித்துச்
சிதறியதில் அந்த அமைப்பின் உறுப்பினர்கள் உட்பட ஆயிரக் கணக்கானவர்கள் காயமடைந்துள்ளனர். அவர்களில் 200 பேர்வரை ஆபத்தான நிலையில் உள்ளனர் என்று கூறப்படுகிறது.
நாட்டின் பல இடங்களிலும் கருவிகள் வெடித்துள்ளன. இதனால் அங்கு பெரும் பதற்றமும் பீதியும் நிலவுகிறது.
குறைந்தது எட்டுப் பேர் உயிரிழந்தமை இதுவரை உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. மொத்தம் 2ஆயிரத்து 750 பேர் காயமடையநேரிட்டுள்ளது என்று லெபனானின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அவர்களில் பலருக்கும் முகம், கைகள், வயிறுப்பகுதிகளில் காயங்கள் ஏற்பட்டிருக்கின்றன. 150 க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளில்
அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்படுவதாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
காயமடைந்தவர்களில் லெபனானுக்கான ஈரானியத் தூதரும் அடங்கியுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
லெபனானில் இயங்குகின்ற ஈரானிய ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பு இன்று செவ்வாய்க்கிழமை முற்கொண்டு விடுத்த அறிக்கையில் - அந்த அமைப்பின் பல்வேறு பிரிவுகளுடன் தொடர்புடைய பணியாளர்கள் மற்றும் நிறுவனங்களால் பயன்படுத்தப்பட்டுவந்த பேஜர்ஸ்(pagers) தொடர்பாடல் கருவிகளே வெடித்துள்ளன என்றும் - அதற்கான காரணம் தெரியவில்லை, விசாரணைகள் இடம்பெறுகின்றன எனவும் - தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் இந்தச் சம்பவங்களை இஸ்ரேலியர்களது "பாவத்துக்குரிய துன்புறுத்தல்கள்" என்று குற்றம் சாட்டியுள்ள ஹிஸ்புல்லா தலைமைப் பீடம், இஸ்ரேலுக்கு உடனடித் தண்டனை நிச்சயம் கிடைக்கும் என்று சூளுரைத்துள்ளது.
ஹிஸ்புல்லா இயக்கம் காஸா போர் ஆரம்பித்ததில் இருந்து கடந்த சுமார் ஓராண்டு காலமாக எல்லையில் இஸ்ரேலுடன் தினசரி மோதலில் ஈடுபட்டுவருகிறது. இந்த நிலையில் பேஜர்கள் வெடித்த சம்பவம் அதன் பாதுகாப்புக் கட்டமைப்பில் ஏற்பட்ட பெரும் ஊடுருவல் என்று பெயர் குறிப்பிடவிரும்பாத ஹிஸ்புல்லா பேச்சாளர் ஒருவர் அல்ஜசீரா செய்தி நிறுவனத்திடம் தெரிவித்திருக்கிறார்.
லெபனானின் பல பகுதிகளில் ஏற்பட்ட இந்த வெடிப்புகள் குறித்து இஸ்ரேலிய இராணுவம் உடனடியாகக் கருத்து எதனையும் வெளியிடவில்லை.
⚫மேலதிக விவரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன
தாஸ்நியூஸ் - பாரிஸ்
17-09-2024
Comments