மேற்கு ஆபிரிக்காவில்
எலிகளின் சிறுநீரால்
பரவும் அரிதான நோய்
விரிவான செய்திக்கு :ThasNews.Com
பாரிஸ், மே, 3
பாரிஸ் பிராந்தியத்தில் "லஸ்ஸா" வைரஸ் (Lassa virus) தொற்றிய ஆண்
ஒருவருக்கு வல் - து-மானில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இரத்தக் கசிவுக் காய்ச்சலை (viral hemorrhagic fever) ஏற்படுத்துகின்ற இந்த வைரஸ் மனிதர்களில் இருந்து மனிதர்களுக்குத் தொற்றக் கூடியது என்பதால் குறிப்பிட்ட நோயாளியுடன் மிக நெருக்கமான தொடர்பைக் கொண்டிருந்த ஏனையவர்களைக் கண்டறிவதற்கான விசாரணைகள்
நடைபெற்றுவருகின்றன.
மேற்கு ஆபிரிக்காவின் சில நாடுகளில் பரவிக் காணப்படுகின்ற இந்த வைரஸ் காய்ச்சல் வட அரைக் கோள நாடுகளில் - குறிப்பாகப் பிரான்ஸில்- கண்டறியப்படுவது இதுவே முதல் முறை என்பதால் அதன் மீது தீவிர கவனம் திரும்பி உள்ளது.
லஸ்ஸா வைரஸ் மேற்கு ஆபிரிக்காவில் குறிப்பாக நைஜீரியாவில் நிரந்தரத் தொற்று நோயாக உள்ளது. அந்தப் பிராந்தியத்தில் காணப்படுகின்ற சிறிய வகை எலி இனங்களின் மலசலக் கழிவுகள் மூலம் அது மனிதர்களுக்குத் தொற்றுகின்றது.
நைஜீரியாவின் லஸ்ஸா(Lassa) நகரில் 1969 இல் முதலாவது நோயாளி இனங்காணப்பட்டார். அதனாலேயே இந்த வைரஸுக்கு "லஸ்ஸா" என்ற பெயர் வந்தது.
உலக சுகாதார நிறுவனத்தின் தகவலின் படி ஆண்டு தோறும் ஒரு லட்சம் முதல் மூன்று லட்சம் வரையான தொற்றுக்களையும் 5ஆயிரம் முதல் 6 ஆயிரம் உயிரிழப்புகளையும் ஏற்படுத்துகின்ற லஸ்ஸா வைரஸ் உலகின் சில பகுதிகளுக்குள் மட்டும் வரையறை செய்யப்பட்ட ஒரு தொற்று நோயாகவே (endemic) இன்னமும் காணப்படுகிறது.
வாந்தி, குமட்டல், வயிற்று வலி, தலைவலி பின்னர் இரத்தக் கசிவு போன்றவை தீவிர நிலையில் இந் நோயின் அறிகுறிகள் ஆகும்.
ஆரம்பத்தில் நோய் அறிகுறிகள் பெரிதும் வெளிப்படுவதில்லை. இதனால் சுமார் எண்பது வீதமான தொற்றுக்களை தொடக்கத்திலேயே கண்டறிய முடிவதில்லை என்று சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது.
தாஸ்நியூஸ் - பாரிஸ்
03-05-2024
Comments