top of page
Post: Blog2_Post

வாக்கெடுப்பில் மிஷெல் பார்னியர் பதவி இழந்தார்!! வரவு-செலவுத் திட்டம் செயலிழந்தது!!

இடதுசாரிகளின் பிரேரணையை

ஆதரித்துத் தீவிர வலதுசாரிகள்

வாக்களித்த வரலாற்று நிகழ்வு

மக்ரோன் நாளை விசேட உரை


பாரிஸ், டிசெம்பர் 4


பிரான்ஸின் பிரதமர் மிஷெல் பார்னியர் பதவியில் இருந்து தூக்கிவீசப்பட்டிருக்கிறார். மூன்று மாத காலம் பதவியில் நீடித்த அவரது அரசு கவிழ்க்கப்பட்டிருக்கிறது.


நாட்டின் கடன் சுமையைத் தீர்க்கும் நோக்குடன் அவர் முன் வைத்த வரவு-செலவுத் திட்டமே அவரது பதவியைப் பறித்துள்ளது.


பார்னியர் அரசு மீது இடதுசாரிக் கட்சிகளது கூட்டணி கொண்டுவந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை மீது

இன்று புதன்கிழமை முன்னிரவு எட்டு மணிக்குப் பின்னர் சபையில் வாக்கெடுப்பு நடைபெற்றது . பிரேரணை வெற்றியடைவதற்கு 288 பெரும்பான்மை வாக்குகள் தேவையான நிலையில், இடதுசாரிக் கட்சிக் கூட்டணியின் எம்பிக்களுடன் மரின் லூ பென் அம்மையாரது தீவிர வலதுசாரிக் கட்சியின் எம்பிக்களும் சேர்ந்து ஒருமித்து வாக்களித்து 331 வாக்குகளால் பிரதமரைப் பதவியில் இருந்து நீக்கியுள்ளனர். எதிரும் புதிருமான கொள்கைகள் கொண்ட இருவேறு அரசியல் அணிகள் நாடாளுமன்ற வாக்கெடுப்பு ஒன்றில் பொது நோக்கின் அடிப்படையில் ஒன்றிணைந்து வாக்களித்திருப்பது பிரான்ஸின் சமீபகால வரலாற்றில் இதுவே முதல் முறை என்பதால் இது ஒரு வரலாற்று முக்கியத்துவம் மிக்க வாக்கெடுப்பாகப் பதிவாகின்றது.


அதேசமயம் பிரான்ஸில் பதவியில் இருக்கின்ற பிரதமர் ஒருவர் எதிர்க்கட்சிகளால் நம்பிக்கை வாக்கெடுப்பு மூலம் தூக்கியெறியப்படுவது 1960களுக்குப் பின்னர் இப்போதுதான் நடக்கிறது.


நம்பிக்கையில்லாப் பிரேரணை வெற்றி பெற்றதை அடுத்து, மிஷெல் பார்னியர் தனதும் தன்னுடைய அரசினதும் பதவி விலகலை அறிவிக்கவுள்ளார். பிரதமரால் தன்னிச்சையாக வாக்கெடுப்புக்கு விடாமல் நிறைவேற்றப்பட்ட அடுத்த ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் அவரது அரசின் பதவி விலகலுடன் செல்லுபடியற்றதாகின்றது.


அரசு கவிழ்க்கப்பட்டிருப்பதை அடுத்து, அரசுத் தலைவர் மக்ரோன் நாளை வியாழக்கிழமை இரவு எட்டு மணிக்கு தொலைக்காட்சி வாயிலாக நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ளார். பிரதமர் மீதான நம்பிக்கை இல்லாப் பிரேரணையின் பெறுபேறு எதுவாக இருந்தாலும் தான் பதவி விலகப் போவதில்லை என்று அவர் வாக்கெடுப்புக்கு முன்னர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மக்ரோனின் பதவிக்


சிலமணி நேரங்களுக்கு முன்னர் வந்த செய்தி :


சவுதி அரேபிய விஜயத்தை முடித்துக் கொண்டு இன்று புதன்கிழமை மாலை நாடு திரும்பிய மக்ரோன் அடுத்த பிரதமரை நியமிப்பது தொடர்பான மந்திராலோசனையில் ஈடுபட்டுள்ளார் 

என்று பாரிஸ் ஊடகங்களில் செய்தி வெளியாகியிருக்கிறது.


மிஷெல் பார்னியரது அரசு இன்னமும் சில மணி நேரத்தில் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பைச் சந்திக்கவுள்ள நிலையில் - அவர் பதவியிழப்பது பெரும்பாலும் நிச்சயமாகி உள்ளது.


இந்த நிலையில் அவரது இடத்தை நீண்டநாள்கள் வெற்றிடமாக விடுவதற்கு அரசுத் தலைவர் மக்ரோன் விரும்பவில்லை என்று எலிஸே மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அரசு கவிழ்ந்த கையோடு - 24 மணி நேரத்துக்குள்ளாக-

அடுத்த பிரதமரது பெயரை அறிவிப்பதற்கு அவர் தயாராகிவருகிறார் என்று கூறப்படுகிறது. இந்த வார இறுதியில்

பாரிஸ் நொத்த - டாம் பேராலயத் திறப்பு விழாவில் அமெரிக்காவின் புதிய அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அவர்களைச் சந்துக்கவுள்ள நிலையில், அவர் முன்னிலையில் பிரான்ஸின் பலவீனத்தை வெளிப்படுத்த மக்ரோன் விரும்பவில்லை என்று அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் கூறியுள்ளன.


அரசாங்கம் இல்லாத வெற்றிடத்தை விட்டுவைத்து, சர்வதேச அரங்கில் பிரான்ஸ் மீதான நம்பகத் தன்மை

கேள்விக்குட்படுத்தப்படுகின்ற நிலைமை ஏற்படுவதை அரசுத் தலைமை விரும்பவில்லை .


மக்ரோன் புதிய பிரதமராக யாரை நியமிக்கப் போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அரசியல் வட்டாரங்களில் பலரது பெயர்கள் அடிபடுகின்றன. பாதுகாப்பு அமைச்சர் செபாஸ்ரியன்

லுகோர்னு(Sébastien Lecornu) மற்றும் மக்ரோனின் நீண்ட கால அரசியல் கூட்டாளியாகிய "மொடெம்"(Modem) என்ற கட்சியின் தலைவர்

பிரான்ஷூவா பெய்ரூ(François Bayrou) ஆகிய இருவரது பெயர்கள் அவற்றில் முதலிடத்தில் உள்ளன.


தற்போதைய பிரதமர் மிஷெல் பார்னியர் அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை அரசமைப்பின் விசேட விதியைப் பயன்படுத்தி வாக்கெடுப்புக்கு விடாமல் நிறைவேற்றியதை அடுத்து -


வரவு செலவுத் திட்டத்தை எதிர்க்கின்ற

தீவிர வலது மற்றும் தீவிர இடதுசாரிக் கட்சிகள் இரண்டும் அவரது அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாப்

பிரேரணைகளைச் சமர்ப்பித்துள்ளன.

அவற்றின் மீதான வாக்கெடுப்பு இன்றிரவு அல்லது நாளை நடைபெறவுள்ளது.

 

தாஸ்நியூஸ் - பாரிஸ்

04-12-2024









0 comments

Commentaires


You can support my work

bottom of page