top of page
Post: Blog2_Post
Writer's pictureKumarathasan Karthigesu

விசேட மோப்ப நாய்களும் கோட்டை விட்டன! குழந்தை எமிலி எங்கே?

Updated: Jul 14, 2023

தேடுதல்கள் நிறுத்தம்

சின்னஞ் சிறு கிராமம்

துயரத்தில் மூழ்கியது


சுமார் இருநூறு பேர் மட்டுமே வசிக்கின்ற அமைதியான அல்ப்ஸ் மலைக் கிராமம் வெர்னே (village de Vernet-Alpes-de-Haute-Provence). 2015 இல்"ஜேர்மன்விங்ஸ்" விமானம் ஒன்று விமானி ஒருவரால் தற்கொலைப் பாணியில் மோதி வெடித்துச் சிதறச் செய்யப்பட்ட சம்பவம் - பிரெஞ்சு அல்ப்ஸ் மலையில்- இந்தக் கிராமத்துக்கு மிக அருகிலேயே நிகழ்ந்தது. அச்சமயம் உலகின் முழுக்

கவனத்தை ஈர்த்திருந்த இந்தக் கிராமம் கடந்த நான்கு நாட்களுக்கு மேலாக மற்றொரு சம்பவத்தால் துயரில் மூழ்கியுள்ளது.


விடுமுறையைக் கழிப்பதற்காக பெற்றோருடன் தனது பேரன் பேர்த்தியிடம் வந்திருந்த இரண்டரை வயது ஆண் குழந்தையான எமிலி (Émile) திடீரெனக் காணாமல் மறைந்த சம்பவம் வேர்னே கிராமத்தைப் பரபரப்புக்குள்ளாக்கி விட்டது. வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தவன் பெரியோரது கவனத்தில் இருந்து தப்பி எங்கே மறைந்தான் என்பது எந்தவித தடயங்களோ தகவல்களோ ஏதும் இன்றிப் பெரும் புதிராக - மர்மமாக-

நீடிக்கிறது. பொலீஸ் மற்றும் ஜொந்தாம் படையினர் அந்த மலைக்கிராமம் முழுவதையும் சல்லடை போட்டுத் தேடியும் எமிலைக் கண்டுபிடிக்க முடியவில்லை. வீடுகளில் உள்ள அலுமரிகள், குளிர்சாதனப் பெட்டிகள் முதல்கொண்டு காடுகளில் உள்ள பற்றைகள், குழிகள் வரை குடைந்து தேடியும் குழந்தையைப் பற்றிய எந்த தடயத்தையும் கண்டறிய முடியாமற் போனமை மீட்பு நிபுணர்களை வியப்புக்குள்ளாக்கி இருக்கிறது. அதிவிசேட மோப்ப சக்தி மிகுந்த செய்ன் ஹூபேர்(Saint-Hubert) நாய்களைக் களமிறக்கித் தேடிய போதும் அந்தப் பிரதேசத்தில் எங்கேயும் குழந்தையின் வாடையை மோப்பம் பிடிக்க அவைகளால் முடியாமற் போயிருப்பதும் முக்கிய செய்தியாக வெளிவந்துள்ளது.

பெல்ஜியத்தைப் பூர்வீகமாகக் கொண்ட

ஜேர்மன்ஷெப்பேர்ட், மெலினுவா (German shepherds - Malinois) நாய் இனங்களைச் சேர்ந்த விசேட பயிற்சி பெற்ற ஜொந்தாம் பொலீஸ் மோப்ப நாய்களே செய்ன் ஹூபேர் (Saint-Hubert) என அழைக்கப்படுகின்றன. சாதாரண மோப்ப நாய்கள் மற்றும் தேடுதல் படைகளால் கண்டுபிடிக்க முடியாமற் போகின்ற ஒரு சந்தர்ப்பத்திலேயே இரண்டாவது கட்டமாக செய்ன் ஹூபேர் நாய்கள் களமிறக்கப்படுகின்றன. குழந்தை ஒர் ஆழ்துளைக் கிணறில் வீழ்ந்திருந்தால் கூட கிணற்றின் வாயில் வரை சென்று குழந்தை தொலைந்து இடத்தை மோப்பம் பிடிக்கக் கூடிய வல்லமை வாய்ந்த நாய்கள் இவை. ஆனால் எமிலி விடயத்தில் ஹூபேர் நாய்கள் கோட்டைவிட நேர்ந்ததன் மர்மம் என்ன ?

பெரிதாக ஆட்கள் நடமாட்டம் இல்லாத கிராமம். எனினும் குழந்தை வழி தவறி எங்காவது நடந்து சென்று திக்குத் தெரியாமல் மறைந்திருந்தால் 48 மணிநேர தேடுதலில் அவனை நிச்சயம் கண்டுபிடித்திருக்க முடியும். ஆனால் சிறிய பிரதேசத்தில் நான்கு நாட்களுக்கு மேலாகத் தேடியும் ஒரு தடயமும் சிக்கவில்லை.


பொலீஸார், தீயணைப்பு வீரர்களுடன் முழுக் கிராம மக்களும் சேர்ந்து எமிலைத் தேடித் தோற்றுப் போயினர்.

களத்தில் தேடும் கடைசி முயற்சியான இறுதி நடவடிக்கையை இன்று வியாழக்கிழமை ஜொந்தாமினர் நிறைவு செய்தனர் . அதிர்ந்து போய் இருக்கின்ற எமிலின் பெற்றோர்கள் தங்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் ஒன்று கூடிப் பிரார்த்தனைகளில் ஈடுபட்டுள்ளனர்.


குழந்தை காணாமற்போன பின்னணியில் பெரும்பாலும் குற்றச்செயல் இருக்கக் கூடும் என்ற முடிவை நோக்கியே ஐயங்கள் நகர்கின்றன. இதே வெர்னே (village de Vernet) கிராமத்தில் சுமார் 34 வருடங்களுக்கு முன்பும் இவ்வாறு மர்மமாகக் காணாமற்போன வேறு ஒரு குழந்தையின் கதை இன்னமும் அங்கு நினைவுகூர்ந்து பேசப்பட்டுவருகிறது.

அந்தக் குழந்தையின் கதி இன்றுவரை கண்டறியப்படவில்லை.


கிராமத்துக்கு வெளியே நாடளாவிய ரீதியில் எமிலியைத் தேடுகின்ற நடவடிக்கைகள் தொடர்கின்றன.

நல்ல செய்தி வருமா என்று முழு நாடுமே காத்திருக்கிறது.

 

தாஸ்நியூஸ் - பாரிஸ்

13-07-2023

0 comments

Comments


You can support my work

bottom of page