பலநாள் எதிர்பார்த்த
பதிலடித தாக்குதல்!!
வான் பரப்பு மூடப்பட்டு
பின்னர் மீளத் திறப்பு
பாரிஸ், ஒக்ரோபர் 26
ஈரானியத் தலைநகரம் தெஹ்ரனின்
சில பகுதிகள் மீது இஸ்ரேலியப் போர் விமானங்கள் குண்டுத் தாக்குதலை நடத்தியிருக்கின்றன. உள்நாட்டு நேரப்படி இன்று சனிக்கிழமை காலை விடியும் நேரம் தெஹ்ரானின் பல பகுதிகளில் குண்டுச் சத்தங்கள் கேட்டன. அரச செய்தி நிறுவனம் அதனை உறுதி செய்தது.
இஸ்ரேலிய விமானத் தாக்குதலை அடுத்து ஈரான் தனது ஆகாயப் பிராந்தியத்தை மூடி விமானப் போக்குவரத்துகளைச் சில மணி நேரம் தடைசெய்திருந்தது. எனினும் பின்னர் காலை ஒன்பது மணி முதல் மீண்டும் சிவில் விமானப் போக்குவரத்துகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
குண்டு வீச்சினால் ஏற்பட்ட சேத விவரங்கள் பற்றிய பக்கச்சார்பற்ற தகவல்கள் உடனடியாகத் தெரியவரவில்லை."வரையறுக்கப்பட்ட அளவிலான சேதங்கள்" மாத்திரமே ஏற்பட்டன என்று ஈரானியத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானிய இராணுவ இலக்குகள் மீது நடத்தப்பட்ட மிகத் துல்லியமான தாக்குதல் இது என்று கூறியுள்ள
இஸ்ரேல், தாக்குதல் நடத்தச் சென்ற அத்தனை விமானங்களும் பத்திரமாகத் தளம் திரும்பி விட்டன என்றும் அறிவித்திருக்கிறது. தெஹ்ரான் அருகில் இயங்கிய ஏவுகணைத் தயாரிப்புத் தொழிற்சாலைகளும் இலக்குகளில் அடங்கும் என்றும் அது கூறியுள்ளது.
இஸ்ரேலின் இன்றைய தாக்குதல் கடந்த பல நாட்களாக எதிர்பார்க்கப்பட்டு வந்த ஒன்றாகும்.
லெபனானில் ஹிஸ்புல்லா இயக்கததின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாக கடந்த ஒக்ரோபர் முதலாம் திகதி ஈரான் இஸ்ரேல் மீது பல நூற்றுக் கணக்கான ஏவுகணைகளை வீசித் தாக்கியிருந்தது. அந்தத் தாக்குதலுக்கான பதிலடியே இன்று நடந்துள்ளது.
அமெரிக்கா இன்றைய தாக்குதலுக்கான பதில் நடவடிக்கையில் இறங்க வேண்டாம் என்று ஈரானிய ஆட்சியாளர்களைக் கேட்டிருக்கிறது. இரண்டு தரப்புகளும் மாறி மாறித் தாக்குதல்களில் இறங்குவது மத்திய கிழக்கில் முழு அளவிலான பெரும் போர் வெடிக்கின்ற அபாயத்தை நாளுக்கு நாள் அதிகரிக்கச்செய்துவருகின்றது.
மேலதிக விவரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன..
⚫தொடர்புடைய செய்தி :
தாஸ்நியூஸ் - பாரிஸ்
26-10-2024
Comentarios