top of page
Post: Blog2_Post
Writer's pictureKumarathasan Karthigesu

வீதி மறியலின்போது கார் மோதியதில் பெண் விவசாயி பலி!!கணவரும் மகளும் படுகாயம்!!

உழவர் போராட்டம்

பல பகுதிகளுக்கும்

விரிவடைகின்றது


வீதி மறியலில் ஈடுபட்டுவருகின்ற விவசாயிகள் மற்றும் கால்நடைப் பண்ணையாளர்கள் தங்கியிருந்த

பகுதியில் கார் ஒன்று மோதியதில் முப்பத்தைந்து வயதான பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவரது கணவர் மற்றும் மகள் படுகாயமடைந்துள்ளனர்.


பிரான்ஸின் தெற்கே ஒக்ஸிட்டானி பிராந்தியத்தில் (région Occitanie) அரிஜேஸ் (Ariège) என்ற இடத்தில் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை இந்த வீதி விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. கடந்த சில நாட்களாக அங்குள்ள வீதி ஒன்றை மறித்துத் தடைகளை ஏற்படுத்தியிருந்த

விவசாயிகள் அப்பகுதியில் இரவு பகலாகத் தங்கியிருந்து எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்தனர். RN 20 வீதியில் ஏற்படுத்தப்பட்டிருந்த அந்தத் தடை மீதே மூவர் பயணம் செய்த கார் ஒன்று அதிகாலை நேரம் வேகமாக வந்து மோதியுள்ளது. வீதித் தடைக்குப் பின்னால் மறைவாகத் தங்கியிருந்த விவசாயக் குடும்பத்தினரே விபத்தில் சிக்குண்டனர். தாயார் அந்த இடத்திலேயே உயிரிழந்துள்ளார். சிறிய விவசாயக் கிராமம் ஒன்றைச் சேர்ந்த கால்நடைப் பண்ணையாளராகிய அலெக்சாந்திரா (Alexandre) என்பவரே உயிரிழந்தவராவார்.

படம் :விபத்தில் பலியான விவசாயப் பண்ணையாளர் அலெக்சாந்திரா

 

இளமைப் பருவம் முதலே விவசாயக் கல்வியில் நாட்டம் காட்டிய அவர் ஒரு முன்மாதிரியான விவசாயப் பண்ணையாளராகச் செயற்பட்டவர். தற்போதைய எதிர்ப்பு இயக்கத்திலும் முன்னின்று இயங்கியவர் என்று உழவர் அமைப்புகள் அவருக்கு இரங்கல் தெரிவித்துள்ளன.


இளம் விவசாயக் குடும்பம் சிக்குண்ட இந்த வீதி விபத்துச் சம்பவம் விவசாயிகளின் போராட்ட இயக்கம் மீது முழு நாட்டினதும் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

ஐரோப்பாவில் ஜேர்மனியைத்

தொடர்ந்து பிரான்ஸிலும் பல பிராந்தியங்களில் விவசாயிகளும் கால்நடைப் பண்ணையாளர்களும் தங்கள் குரல்கள் செவிமடுக்கப்படாததற்குக் கண்டனம் தெரிவித்து எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

உழவு இயந்திரங்கள் மற்றும் வாகனங்கள் மூலம் பிரதான வீதிகளை

மறித்தும் வீதிகளில் ரயர்களை எரித்தும் அவர்கள் முன்னெடுத்து வருகின்ற போராட்டம் அடுத்துவரும் நாட்களில் மேலும் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு அரசை நிலைகுலையச் செய்த "மஞ்சள் மேலங்கிப்" போராட்டம் போன்று இந்த உழவர்கள் இயக்கம் நாடு முழுவதும் பெரும் தொழிலாளர் போராட்டமாக மாறி உருவெடுக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.


விவசாய உற்பத்திச் செலவுகள் அதிகரிப்பு, ஐரோப்பிய ஒன்றிய மட்டத்திலான இறக்குமதிகளால் உள்ளூர் உற்பத்தியில் ஏற்படுகின்ற பாதிப்பு, உழவு வாகனங்கள் உட்பட

விவசாயத் தேவைக்கான எரிபொருள் மற்றும் மானிய உதவிகள் போதாமை போன்ற பல காரணங்களால் பிரான்ஸின் விவசாயிகள் அரசு மீது சீற்றமடைந்துள்ளனர். அவர்கள் ஆரம்பித்துள்ள வீதி மறியல் இயக்கம் புதிய பிரதமர் கப்ரியேல் அட்டால் பதவிக்கு வந்த பின்னர் அவர் எதிர்கொள்கின்ற முதலாவது பெரும் அரசியல் நெருக்கடியாகப் பார்க்கப்படுகிறது.

 

தாஸ்நியூஸ் - பாரிஸ்

23-01-2024





0 comments

Comments


You can support my work

bottom of page