top of page
Post: Blog2_Post
Writer's pictureKumarathasan Karthigesu

விமானத்துடன் தடுக்கப்பட்டோர் டுபாயில் தொழில் புரியும் இந்தியர்கள்?

மத்திய அமெரிக்கா வழியே

கனடாவுக்கு கடத்த திட்டம்?


பிரான்ஸில் புகலிடம் கோர

அவர்களில் பலர் விருப்பம்


டுபாயில் இருந்து வந்த விமானமும் அதில் பயணம் செய்த சுமார் 300 இந்தியப் பிரஜைகளும் பாரிஸ் - வாட்றி வான் தளத்தில் தொடர்ந்து தடுத்துவைக்கப்பட்டு அவர்களிடம் 48 மணிநேரத்துக்கும் மேலாக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.


கைதுசெய்யப்பட்ட இரண்டு பயணிகளதும் தடுப்புக் காவல்

நீதிமன்ற உத்தரவின் பேரில் நீடிக்கப்பட்டிருக்கிறது.


303 பயணிகளில் 21 மாதக் குழந்தை உட்பட பெற்றோர் பாதுகாவலர் இன்றிப் பயணம் செய்த 17 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் பலரும் அடங்கியுள்ளனர்.

சுமார் 150 பயணிகளிடம் சரியான ஆவணங்களும் பயணத்துக்கான தகுந்த காரணங்களும் இருக்கவில்லை. அவர்களில் 50 பேர் பிரான்ஸில் அடைக்கலம் பெற விருப்பம் தெரிவித்துள்ளனர் என்று அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.


விசாரணையாளர்களுடன் தொடர்புடைய வட்டாரங்கள் வெளியிட்ட தகவலின் படி விமானத்தில் பயணித்தவர்களில் பெரும்பாலானவர்கள் டுபாயில் தொழில் புரிந்துவருகின்ற இந்தியர்கள் என்று கூறப்படுகிறது. மத்திய அமெரிக்கா ஊடாக அமெரிக்கா மற்றும் கனடாவுக்குள் சட்டவிரோதமாக நுழைவதே அவர்களைக் கடத்தி வந்தவர்களது நோக்கமாக இருக்க வேண்டும் என்று அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.


பயணிகள் அனைவரும் தங்கவைக்கப்பட்டுள்ள -

பாரிஸ் - வாட்றி விமான நிலையம் மூடப்பட்டு அது ஒரு தங்கல் முகமாக மாற்றப்பட்டிருக்கிறது. அங்கு

படுக்கை முதல் உணவு, மருத்துவம், மலசல கூட வசதிகள் வரை விசேடமாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன. ஜொந்தாமினர் மற்றும் எல்லைச் சோதனைப் படைப் பிரிவினர் அங்கு காவல் கடமையில் ஈடுபட்டுள்ளனர்.


பாரிஸ் அரச சட்டவாளர்கள் அங்கு நேரடியாகப் பிரசன்னமாகி ஒவ்வொரு பயணிகளிடமும் தனித்தனியே அடையாளப் பரிசோதனைகளை நடத்தியுள்ளனர்.


டுபாயில் இருந்து மத்திய அமெரிக்க நாடாகிய நிக்கரகுவாவின் (Nicaragua) தலைநகர் மனகுவாவிற்குப் (Managua) பறந்துகொண்டிருந்த

ஒரு விமானத்திலேயே இவர்கள் பயணித்திருந்தனர். ருமேனிய நாட்டு வாடகை சேவை நிறுவனம் ஒன்றுக்குச் சொந்தமான அந்த எயார்பஸ் விமானம் தொழில்நுட்பக் காரணங்களுக்காக கடந்த வியாழக்கிழமை பிற்பகல் பாரிஸ் - வாட்றி (Paris-Vatry) வான்

தளத்தில் தரித்து நின்ற சமயத்திலேயே

அதில் ஆட்கடத்தல்கள் இடம்பெறுவதாகக் கிடைத்த அநாமதேய தகவல் ஒன்றை அடுத்துச் சந்தேகத்தின் பேரில் ஜொந்தாமினரால் சோதனையிடப்பட்டது. அதன்பின்னர்

பயணிகள் அனைவரும் இறக்கப்பட்டு விமான நிலையத்தில் தங்கவைக்கப்பட்டனர்.


விமானத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படுகின்ற ஆட்கடத்தல்களுக்கும் தங்களுக்கும் தொடர்பேதும் கிடையாது என்று அந்த விமானத்துக்குச் சொந்தமான லெஜென்ட் எயார்லைன்ஸ்(Legend Airlines) நிறுவனத்தின் சட்டவாளர் தெரிவித்திருக்கிறார்.


0 comments

Comentários


You can support my work

bottom of page