top of page
Post: Blog2_Post
Writer's pictureKumarathasan Karthigesu

விமானத்தில் இருந்த இந்தியப் பயணிகள் இறக்கப்பட்டு தீவிர பரிசோதனை!

ஆட்கடத்தல் சந்தேகம்

பாரிஸ் - வாட்றி விமான

நிலையத்தில் சம்பவம்


தரித்துச் செல்வதற்காகத் தரையிறங்கிய விமானம் ஒன்றில் இருந்த இந்தியர்கள் 303 பேரைப் பிரான்ஸ் அதிகாரிகள் வெளியேற்றி விசாரணை செய்திருக்கின்றனர்.

பயணிகளில் இருவரிடம் மேலும் விசாரணைகள் நடைபெறுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


சட்டவிரோதமாகக் குடியேறிகள் கடத்திவரப்படுவதாகக் கிடைத்த தகவலை அடுத்தே ருமேனிய நிறுவனம் ஒன்றுக்குச் சொந்தமான ஏ340 பயணிகள் விமானம் தடுத்துவைக்கப்பட்டிருக்கிறது.


பாரிஸ் நகருக்குத் தொலைவில் மார்ன் (Marne) மாவட்டத்தில் அமைந்துள்ள வாட்றி விமான நிலையத்தில்(Paris-Vatry airport) வைத்தே பயணிகள் அனைவரும் இறக்கப்பட்டுச் சோதனை செய்யப்பட்டனர். அந்த விமானம் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் (டுபாய்) இருந்து நிக்கரகுவா நாட்டுக்குச் செல்லும் வழியில் பாரிஸ் - வாட்றி விமான நிலையத்தில் தொழில்நுட்பக் காரணத்துக்காகத் தரித்து நின்ற (technical stopover) சமயத்திலேயே அதில் சோதனை நடத்தப்பட்டிருக்கிறது.

பயணிகள் அனைவரும் இந்தியப் பிரஜைகள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


சட்டவிரோதமாகக் குடியேறுவதற்காக

பயணிகள் சிலர் மறைந்து அல்லது ரகசியமாகப் (stowaway or clandestine) பயணிப்பதைக் காட்டும் அறிகுறிகள் விமானத்தின் உள்ளே தென்பட்டதை அடுத்தே அந்தத் தகவல் எல்லைப் பரிசோதனைப் படையினருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. அதனை அடுத்தே விமானம் ஓடுபாதையில் தடுத்துவைக்கப்பட்டது என்று

செய்தி ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளது.


நேற்று வியாழக்கிழமை இறக்கப்பட்ட பயணிகள் அன்றிரவும் இன்று வெள்ளிக்கிழமை பகல்ப் பொழுதிலும் - 24 மணிநேரத்துக்கும் மேலாக-விமான நிலையத்திலேயே தங்கவைக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கென அங்கு படுக்கை வசதிகளும் இதர சேவைகளும் வழங்கப்பட்டிருந்தன. பயணிகள் தங்கவைக்கப்பட்ட காரணத்தால் அந்தச் சிறிய விமான நிலையம் மூடப்பட்டு வேறுவிமானங்கள் எதுவும் அங்கு தரையிறங்க அனுமதிக்கப்படவில்லை.


தடுத்துவைக்கப்பட்டிருக்கின்ற விமானத்தையும் பயணிகளையும் இயன்றளவு விரைவில் விடுவிக்குமாறு விமானத்துக்குச் சொந்தமான லெஜென்ட் எயார்லைன்ஸ்(Legend Airlines) நிறுவனம் கேட்டிருக்கிறது.

எனினும் விமானம் வெள்ளிக்கிழமை முன்னிரவு வேளை - இச் செய்தியை எழுதும் வரை - விடுவிக்கப்படவில்லை.

 

தாஸ்நியூஸ் - பாரிஸ்

22-12-2023


0 comments

Comments


You can support my work

bottom of page