top of page
Post: Blog2_Post
Writer's pictureKumarathasan Karthigesu

வேல்ஸ் இளவரசிக்கு புற்றுநோய் சிகிச்சை

Updated: Mar 25

வீடியோவில் தோன்றி

அவரே அறிவித்தார்!


பிரிட்டிஷ் அரச குடும்பத்தில்

அடுத்தடுத்து அதிர்ச்சிகள்


பாரிஸ், மார்ச் 22


பல நாட்களாகத் தொடர்ந்துவந்த

சர்ச்சைகள், ஊகங்கள், வதந்திகள் ஒரு முடிவுக்கு வந்தன. வேல்ஸ் இளவரசி கேற் மிடில்டன் (Kate Middleton) புற்றுநோய்க்கான ஹீமோதெரபி (chemotherapy) சிகிச்சை பெற்று வருகிறார் என்று முறைப்படி அறிவிக்கப்பட்டிருக்கிறது.


கென்சிங்டன் அரண்மனையினால் இன்று வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட ஒரு வீடியோவில் தோன்றிய 42 வயதான இளவரசி கேற்

தனது புற்று நோய் பற்றியும், அதற்கான சிகிச்சை பற்றியும் அவராகவே அறிவித்திருக்கிறார். ஆயினும் அவருக்கு ஏற்பட்ட புற்றுநோய் எந்த வகையானது என்பது பற்றி அவர் எதனையும் கூறவில்லை.


கடுமையான சில மாதகாலங்களுக்குப் பின்னர் இது ஒரு பெரும் அதிர்ச்சி என்று தனது செய்தியில் கூறியுள்ள இளவரசி, "நான் நலமே இருக்கிறேன். நாளாந்தம் மீண்டெழுந்து வருகின்றேன்" என்றும் தெரிவித்திருக்கிறார்.


"இந்த நோயை எதிர்கொண்டுள்ள எவருமே அது எந்த நிலைமையில் இருந்தாலும் தயவுசெய்து நம்பிக்கையை இழந்து விடாதீர்கள்..

ஏனெனில் நீங்கள் தனியாளாக இல்லை..." ("For everyone facing this disease, in whatever form, please do not lose faith or hope. You are not alone.")


-இவ்வாறு இளவரசி வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.


கடந்த ஜனவரியில் வயிற்றில் சத்திரசிகிச்சை செய்துகொண்ட பின்னர் இளவரசி கேற் அரச நிகழ்வுகள் எதிலும் கலந்து கொள்ளவில்லை.அவரது நோய் என்ன என்பது பற்றிய விவரங்களும் வெளியே மறைக்கப்பட்டு வந்தன.

இதனால் இளவரசி என்னவானார் என்ற கேள்விகளும் அவர் தொடர்பான வதந்திகளும் சர்ச்சைகளும் சமூக ஊடகங்களை நிறைத்து வந்தன.

அன்னையர் தினத்தை ஒட்டி இளவரசி பகிர்ந்த குடும்பப் புகைப்படம் போலியானது என்று தெரியவந்ததை அடுத்து சர்ச்சைகள் மேலும் வலுத்தன. அவரது உடல் நிலை தொடர்பான பல்வேறு கேள்விகள் நாடு முழுவதும் எழுந்திருந்தன.


இந்த நிலையிலேயே அவருக்குப் புற்றுநோய் என்ற செய்தியை அவரே உறுதிப்படுத்தியிருக்கிறார்.

மன்னர் சார்ள்ஸைத் தொடர்ந்து இளவரசிக்கும் புற்று நோய் என்ற தகவல் உறுதியாகி இருப்பது இங்கிலாந்தின் அரச குடும்பப் பிரியர்களைப் பெரிதும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.


இளவரசி நலம்பெற வேண்டும் என்ற வேண்டுதல் செய்திகள் வெள்ளை மாளிகையில் இருந்தும் , பிரிட்டிஷ் பிரதமர் அலுவலகத்தில் இருந்தும் உடனடியாகவே வெளி வந்திருக்கின்றன.


இளவரசி தனக்குப் புற்றுநோய் என்பதை தானாகவே முன்வந்து

திடமனத்துடன் நேரில் தோன்றி அறிவித்தமை "துணிகரமானசெயல்" "ஏனைய புற்று நோயாளிகளுக்கு முன்மாதிரியாக அமையும் " என்று பிரிட்டிஷ் பொது மருத்துவத்துறை

வரவேற்றுள்ளது.


தொடர்புடைய செய்திகள் :



 

தாஸ்நியூஸ் - பாரிஸ்

22-03-2024


0 comments

Comments


You can support my work

bottom of page