top of page
Post: Blog2_Post
Writer's pictureKumarathasan Karthigesu

வெளிநாடுகளில் வசிப்போர் அமோக வாக்களிப்பு!

தேர்தல் மீது ஆர்வம்


கணிப்புகளில் தொடர்ந்து

லூ பென் கட்சி முன்னணி


பாரிஸ், ஜூன் 27


வெளிநாடுகளில் வசிக்கின்ற பிரெஞ்சுக் குடிமக்கள் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிப்பதற்கான அவகாசம் இன்று வியாழக்கிழமை மாலையுடன் முடிவுக்கு வந்தது. ஒன் லைன் ஊடாக சுமார் நான்கு லட்சத்து 10 ஆயிரம் பேர் வாக்குகளைச் செலுத்தி உள்ளனர். கடந்த 2022 தேர்தலில் வெளிநாடுகளில் இருந்து வாக்குச் செலுத்தியவர்களது எண்ணிக்கை 2 லட்சத்து 50 ஆயிரம் ஆகும்.


வெளிநாட்டவர்களுக்கான சம உரிமைகளை எதிர்க்கின்ற தீவிரமான வலதுசாரிக் கட்சி ஆட்சி அமைக்கலாம் என்ற நிலை தோன்றியுள்ளதால்

பிரான்ஸில் முன்னர் எப்போதும் இருந்திராதவாறு இம்முறை தேர்தலில்

வாக்காளர்களின் தீவிர கவனம் திரும்பி உள்ளது. வாக்களிப்பு வீதம் இரண்டு மடங்காக அதிகரித்திருப்பது இதனையே காட்டுவதாக அவதானிகள் குறிப்பிடுகின்றனர். அரசியல் விவகாரங்களில் அக்கறை செலுத்தாதவர்களும் வாக்களிக்கத் தலைப்பட்டுள்ளனர்.


பொதுவாக வெளிநாடுகளில் வசிப்பவர்கள் தபால் மூல வாக்களிப்பில் இவ்வாறு ஆர்வம் காட்டுவதில்லை.


இதேவேளை -


முதற் சுற்று வாக்களிப்புக்கு மூன்றே நாட்கள் மாத்திரம் இருக்கின்ற நிலையில் நடத்தப்பட்டுள்ள பல்வேறு கருத்துக்கணிப்புகளில் ஜோர்டான் பார்டெல்லா தலைமையிலான Rassemblement national கட்சி சுமார் 35 சதவீத வாக்குகளைப் பெற்று முதல் இடத்தையும் இடதுசாரிகளது கூட்டணியான புதிய வெகுஜன முன்னணி(Nouveau Front populaire) 29 சதவீத வாக்குகளுடன் இரண்டாவது ஸ்தானத்தையும் , அதிபர் மக்ரோனின் மையவாதக் கட்சி மூன்றாவதாக 20 சதவீத வாக்குகளையும் பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கின்றன.


இறுதிக்கட்டப் பிரசாரங்கள்- பதற்றத்துக்கு - மத்தியில் உச்சக் கட்டத்தை எட்டியுள்ளன.


 

தாஸ்நியூஸ் - பாரிஸ்

27-06-2024

0 comments

Comments


You can support my work

bottom of page