top of page
Post: Blog2_Post
Writer's pictureKumarathasan Karthigesu

வெளிநாட்டவரை இலக்கு வைத்து வன்முறை கட்டவிழ்வு பிரிட்டிஷ் பிரதமர் அவசர கூட்டம்

புகலிடம் கோருவோரின்

தங்குமிடம் தாக்கப்பட்டது

கலவரத்தின் பின்னணி என்ன?


பாரிஸ், ஓகஸ்ட் 5


ஐரோப்பிய நாடுகளில் தீவிர வலதுசாரி அரசியல் அலை எழுச்சி பெற்றுவரும் பின்னணியில் வெளிநாட்டவர்கள் மற்றும் குடியேறிகளுக்கு எதிரான உணர்வுகள் தூண்டப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இங்கிலாந்தில் மூன்று சிறுமிகள் வெட்டிக் கொல்லப்பட்ட ஒரு சம்பவத்தின் எதிரொலியாக ஆரம்பித்த கலவரங்கள் வெளிநாட்டவர்களுக்கு எதிரான ஆத்திர உணர்வாகத் திரும்பியுள்ளது.


பல நகரங்களில் கடந்த சில நாட்களாக நீடித்த வீதிக் கலவரங்களை அடுத்து பிரதமர் கெய்ர் ஸ்ராமெர் (Keir Starmer) நெருக்கடிகாலக் கூட்டம் ஒன்றை இன்று திங்கட்கிழமை கூட்டுகிறார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

கோப்ரா(COBRA) எனப்படுகின்ற இந்தப் பாதுகாப்புக் கூட்டம்

நாடு சந்திக்கின்ற நெருக்கடியான நிலைமைகளில் அதை எதிர்கொள்வதற்கான அவசரத்

திட்டங்களைத் தீர்மானிப்பதற்காகக் கூட்டப்படுவது வழக்கம்.


நாடெங்கும் வன்செயலில் ஈடுபட்ட 150 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நூற்றுக்கு மேற்பட்ட பொலீஸார் காயமடைந்துள்ளனர். பொதுச் சொத்துக்கள் அழிக்கப்பட்டுள்ளன.


பின்னணி என்ன?


தீவிர வலதுசாரி இயக்கங்கள் தற்போதைய வன்செயல்களை வெளிநாட்டவர்கள் மீதான எதிர்ப்புணர்வாக மாற்ற முயற்சித்து வருகின்றன எனக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. புகலிடக் கோரிக்கையாளர்கள் தங்கியிருக்கும் இடங்கள், பள்ளிவாசல்கள் போன்ற இடங்கள் இலக்குவைக்கப்பட்டிருக்கின்றன. அதேசமயம் இது முஸ்லீம்களுக்கு எதிரான கலவரம் என்று பரப்பப்படும் பிரசாரங்களால் தூண்டப்பட்ட முஸ்லிம் இளைஞர் கும்பல்களும் வீதிகளில் இறங்கி எதிர்க் கலவரங்களில் ஈடுபட்டுள்ளன.


முஸ்லீம்கள் மற்றும் சிறுபான்மையினரிடையே அச்ச உணர்வு தோன்றியுள்ளது.


வன்செயல்களின் தொடக்கம்


இங்கிலாந்தைப் பாதித்துள்ள தற்போதைய வன்செயல்களின் தொடக்கப் புள்ளியாக இருப்பது சவுத்போர்ட் சம்பவம்.

படம் :சவுத்போர்ட்டில் வெட்டிக் கொல்லப்பட்ட ஒன்பது, ஏழு, ஆறு வயதுகளையுடைய மூன்று சிறுமிகள்..

 

லிவர்பூலுக்கு வடக்கே சவுத்போர்ட் (Southport) என்ற இடத்தில் கடந்த வாரம் 17 வயது இளைஞன் ஒருவனால் மூன்று சிறுமிகள் வெட்டிக் கொல்லப்பட்டனர். பத்துப் பேர்வரை படுகாயமடைந்தனர். அவர்களில் பலர் உயிருக்குப் போராடும் நிலையில் இருந்து வருகின்றனர்.


பிரபல அமெரிக்கப் பாடகி டெய்லர் ஸ்வெஃப்ரின் (Taylor Swift) பாடலுக்கான நடனப் பயற்சிப் பட்டறை ஒன்றில் கலந்துகொண்டவர்கள் மீதே இத்தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.


இந்தச் சம்பவம் அந்தப் பிரதேச மக்கள் மத்தியில் அதிர்ச்சியும் ஆத்திரமும் துயரமும் கலந்த உணர்வலையைத் தோற்றுவித்திருந்தது.

படம் :சிறுமிகளைக் கத்தியால் வெட்டிய

இளைஞன் அக்சல் ருடகுபானாவின் சிறுவயதுத் தோற்றம்...

 

தாக்குதலை நடத்திய இளைஞர் சிரியாவில் இருந்து புகலிடம் தேடிவந்த ஒரு முஸ்லீம் என்று முதலில் தகவல்கள் பரவின. எனினும் அக்சல் ருடகுபானா (Axel Rudakubana) என்ற அந்த இளைஞன் வேல்ஸில் ருவாண்டா நாட்டுப் பூர்வீகம் கொண்ட குடும்பத்தில் பிறந்தவர் என்பது பின்னர் உறுதி செய்யப்பட்டது. அப்பாவிச் சிறுமிகளை அவர் எதற்காக வெட்டிக் கொன்றார் என்பது தெரியவில்லை. இத்தாக்குதலில் பயங்கரவாத உள்நோக்கம் இருந்ததா என்பதும் உறுதியாகத் தெரியவரவில்லை.

நடனப் பயிற்சி வகுப்பில் கலந்துகொண்ட சிறுமிகள் மூவர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்தின் எதிரொலியாக ஆரம்பித்த வீதி ஆர்ப்பாட்டங்களே பின்னர் பொலீஸாருக்கு எதிரான வன்முறையாக மாறிப் படிப்படியாக ஏனைய நகரங்களுக்குப் பரவியுள்ளது.

வலதுசாரிக் குண்டர்கள் எனக் கூறப்படுவோர் பொலிஸ் நிலையங்கள் மற்றும் வாகனங்களைச் சேதப்படுத்தி உள்ளனர். கார்கள், கட்டடங்களுக்குத் தீ வைக்கப்பட்டுள்ளது. Rotherham நகரில் வெளிநாட்டுப் புகலிடக் கோரிக்கையாளர்கள் தங்கியிருந்த ஹொட்டேல் ஒன்றைச் சேதப்படுத்திய கும்பல் அதற்குத் தீ வைத்துள்ளது. பிரதமர் கெய்ர் ஸ்ராமெர் இதனைக் கண்டித்திருக்கின்றர்.


கடந்த சில தினங்களாக நீடித்த வன்செயல்களை உள்துறை அமைச்சர்

கூப்பர்(Yvette Cooper) "நாகரீகமில்லாத குண்டர்களின் அருவருக்கத்தக்க வன்முறைக் காட்சிகள்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.


🔵மேலதிக தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

 

தாஸ்நியூஸ் - பாரிஸ்

05-08-2024

0 comments

Comments


You can support my work

bottom of page