'கொலையாளி' எனக் கோஷம்
விஜயம் இடையில் நிறுத்தம்
வலென்சியாப் பிராந்தியத்தில்
ஆழிப்பேரலையை ஒத்த அழிவு
பாரிஸ், நவம்பர் 3
ஸ்பெயினின் தென்பகுதியில் கடும் மழை வெள்ளம் துவம்சம் செய்த வலென்சியா பிரதேசத்தில் அழிவுகளை நேரில் பார்வையிடச் சென்ற அந்நாட்டின் மன்னர் ஆறாம் ஃபிலிப்(King Felipe VI) ராணி லெரீஸியா (Queen Letizia) மற்றும் பிரதமர் பெட்ரோ சான்சே (Pedro Sanchez) ஆகியோருக்கு எதிராகப் பாதிக்கப்பட்ட மக்கள் கடும் சீற்றத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
அழிவுப் பகுதியில் மன்னரை எதிர்கொண்டவர்கள் அவரைப் பார்த்துக் "கொலையாளி" எனக் கோஷமிட்டனர். களிமண்ணை அள்ளி வீசினர். இதன்போது மன்னரது முகத்திலும் அவருடன் சென்ற ராணியின் மீதும் களிமண் வீசப்பட்டதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
மன்னரையும் குழுவினரையும் பிரதேச வாசிகள் எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்து களிமண் வீசிய காட்சிகளும் ஆத்திரமடைந்த கூட்டத்தினரிடையே இருந்து காவலர்கள் மன்னரையும் ராணியாரையும் பாதுகாப்பாக அப்புறப்படுத்த முனைகின்ற காட்சியும் சர்வதேச செய்தி ஊடகங்களில் முக்கிய இடம்பிடித்திருக்கின்றன.
அரச குடும்பத்தினரது இந்த விஜயம் இடை நிறுத்தப்பட்டதாக நாட்டின் அரச தொலைக்காட்சி சிறிது நேரத்தில் அறிவித்தது
ஸ்பெயினின் தென்பகுதியைத் தாக்கிய கடும் மழை வெள்ளத்தால் இருநூறுக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருப்பது வாசகர்கள் அறிந்ததே. காணாமற்போன மேலும் பலரைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. பத்தாயிரம் தரைப் படையினர் மற்றும் பொலீஸ் ஜொந்தாமினரை அரசுப் அப்பணியில் ஈடுபடுத்தியுள்ளது. அநேகமாக எல்லா உயிரிழப்புகளும் நேர்ந்துள்ள வலென்சியாப் பிராந்தியம் ஆழிப்பேரலை தாக்கிய பகுதி போன்று
பேரழிவுப் பிரதேசமாகக் காட்சி கொடுக்கிறது. திரும்பிய திசை எங்கும் சேறும் சகதியும் பொருள்களின் குவியல்களுமாகக் காட்சி தருகிறது. ஸ்பெயினின் வானிலை மையம் வலென்சியாவுக்கு இன்று மீண்டும் சிவப்பு எச்சரிக்கை விடுத்திருக்கிறது.
அங்கு மீண்டும் பலத்த மழை எதிர்பார்க்கப்படுகிறது.
ஐந்து நாட்களுக்கு முன்பு திடீரென மழை வெள்ளம் தாக்கிய போது அங்கு உள்ளூர் மக்களுக்கு உரிய நேரத்தில் முன்னெச்சரிக்கை விடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. எச்சரிக்கைத் தகவல்கள் அரை மணி நேரத்துக்கு முன்பாகவே விடுக்கப்பட்டது. அதனால்
பலரும் பாதுகாப்பான இடங்களுக்கு நகரமுடியாமற்போனது. அதனாலேயே உயிரிழப்புகள் அதிக எண்ணிக்கையை எட்டியுள்ளன என்று சுட்டிக்காட்டப்படுகிறது. அதே சமயம் மீட்புப் பணிகள் போதிய வேகத்துடன் முன்னெடுக்கப்படவில்லை. பல கிராமங்களுக்கு உதவிகள் உரிய நேரத்தில் சென்றடையவில்லை. இதனால் பாதிக்ப்பட்டவர்களிடையே ஆத்திரமும் அமைதியின்மையும் காணப்படுகிறது.
⚫முன்னர் வந்த செய்தி :https://www.thasnews.com/post/ஒர-வர-ட-மழ-8-மண-ந-ரத-த-ல-ப-ழ-ந-தத-மரங
Comments