top of page
Post: Blog2_Post

விவசாயிகள் வீதி மறியல்களை இடைநிறுத்தினர், வாக்குறுதிகளை நிறைவேற்ற அரசுக்கு காலக்கெடு

🚜றான்ஜிஸ் நோக்கி வந்த

வாகன அணி திரும்புகிறது


பாரிஸ், பெப்ரவரி, 1


பிரான்ஸில் விவசாயிகளும் பண்ணையாளர்களும் கடந்த சில வாரங்களாகத் தொடர்ச்சியாக நடத்திவந்த வீதி மறியல் போராட்டங்கள் தணிவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.


நாட்டின் கிராமப் புறங்களில் விவசாயிகள் எதிர்கொண்டு வந்த நீண்ட காலப் பிரச்சினைகளைச் செவிமடுத்துள்ள அரசு, அவற்றுக்குத் தீர்வுகள் பலவற்றைக் கட்டம் கட்டமாக அறிவித்திருப்பதை அடுத்துப் போராட்ட இயக்கத்தை முன்னெடுத்து வந்த

இரண்டு பெரிய விவசாயத் தொழிலாளர் சங்கங்கள் வீதி மறியல்களை இடைநிறுத்துகின்ற முடிவை இன்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ளன.


நாட்டின் பெரும்பாலான விவசாயிகளைப் பிரதிநிதித்துவம் செய்கின்ற FNSEA, மற்றும் இளம் விவசாயிகள் அமைப்பு (les Jeunes agriculteurs - JA) ஆகிய இரண்டுமே இந்த முடிவை அறிவித்துள்ளன.

போராட்டங்களில் ஈடுபட்டுள்ள எனைய சில விவசாய அமைப்புக்களது முடிவு என்ன என்பது உடனடியாகத் தெரியவரவில்லை. அதேசமயம் இந்த முடிவு அறிவிக்கப்பட்டதை அடுத்து நாட்டின் பல இடங்களில் வீதிகளில் போடப்பட்டிருந்த தடைகள் அகற்றப்படுகின்றன. பாரிஸ் நகருக்குத் தெற்கே அமைந்துள்ள றான்ஜிஸ் சர்வதேச சந்தையை நெருங்கி வந்த ட்ராக்டர்கள் அணி இன்று முன்னிரவு அங்கிருந்து வந்த வழியே திரும்பிப் புறப்பட்டது என்று தகவல் வெளியாகியிருக்கிறது.

தங்களது கோரிக்கைகள் செவிமடுக்கப்படாததால் சீற்றமுற்று

நாட்டின் பல நகரங்களிலும் வீதி மறியல்களை ஆரம்பித்திருந்த விவசாயிகள்,நாட்டின் தலைநகரம் அமைந்துள்ள பாரிஸ் பிராந்தியத்தை முற்றுகையிடும் நோக்கில் பிரதான வீதிகள் வழியே ட்ராக்டர்கள் சகிதம் படையெடுத்து வந்ததை அடுத்து அரசு அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான பல தீர்வுகளை அடுத்தடுத்து அறிவிக்கத் தொடங்கியது தெரிந்ததே . இளம் பிரதமர் கப்ரியேல் அட்டால் விவசாயிகள் பிரதிநிதிகளோடு நேரடிப் பேச்சுக்களை நடத்தினார். சுமார் 15 திட்டங்கள் அடங்கிய புதிய சலுகைகளை இன்றைய தினமும் அவர் அறிவித்திருந்தார்.


பிரதமரது திட்டங்கள் நம்பிக்கை அளிப்பதால் விரைவாக அவற்றை நிறைவேற்ற அரசுக்குக் குறுகிய அவகாசம் வழங்குவதற்காகவே வீதி மறியல் போராட்டங்களை இடைநிறுத்தத் தீர்மானித்துள்ளனர் என்று விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் அறிவித்துள்ளனர்.


பாரிஸ் நகரில் ஆண்டு தோறும் நடைபெறுகின்ற சர்வதேச விவசாயக் கண்காட்சி பெப்ரவரி 24 முதல் மார்ச் 3 வரை இடம்பெறவுள்ளது. அரசின் முதல் வாக்குறுதி இக் காலப்பகுதிக்குள் நிறைவேற்றப்படவேண்டும் என்று விவசாயிகள் நிபந்தனை விதித்திருக்கின்றனர். ஏனைய திட்டங்கள் மற்றும் ஐரோப்பிய மட்டத்திலான புதிய சட்ட திட்டங்களை நிறைவேற்றுவதற்கு எதிர்வரும் ஜூன் மாதம் வரை அவகாசம் வழங்கப்படுகிறது என்றும்- அவை மீறப்பட்டால் பெருமெடுப்பிலான போராட்டம் மீண்டும் தொடங்கப்படும் எனவும் விவசாயிகள் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.


 

தாஸ்நியூஸ் - பாரிஸ்

01-02-2023


0 comments

コメント


You can support my work

bottom of page